வருமான வரித்துறையினரின் இறுகும் பிடி !! விவேக் ஜெயராமனிடம் இன்று அடுத்த கட்ட விசாரணை !!!

First Published Nov 17, 2017, 7:27 AM IST
Highlights
income tax officers 2nd day enquiry with vivek


வருமான வரித்துறையினரின் இறுகும் பிடி !! விவேக் ஜெயராமனிடம் இன்று அடுத்த கட்ட விசாரணை !!!

வருமான வரித்துறையின் வரலாறு காணாத ரெய்டில் சிக்கிய ஜெயா தொலைக்காட்சியின் சிஇஓ விவேக்கிடம் இன்று அதிகாரிகள் அடுத்த கட்ட விசாரணையில் ஈடுபடவுள்ளனர்.

சென்னையில் ஜெயா டி.வி. தலைமை செயல் அதிகாரியும், இளவரசியின் மகனுமான விவேக் வீட்டில் கடந்த 9–ந்தேதி முதல் 13–ந்தேதி வரை 5 நாட்கள் வருமான வரித்துறையினர்  அதிரடி சோதனையை மேற்கொண்டார்கள்.

இந்த சோதனையில் 1500 கோடி ரூபாய் மதிப்புள்ள , கணக்கில் வராத முக்கிய ஆவணங்கள் அதிகாரிகள் கையில் சிக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து விசாரணை முடிந்த கையோடு விவேக்கை, கடந்த  13–ந்தேதி வருமான வரித்துறை அதிகாரிகள்  அழைத்துச் சென்று மாலை 5.50 மணி முதல் இரவு 10.15 மணி வரை விசாரணை நடத்தினர்.

மேலும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். எப்போது அழைத்தாலும் உடனடியாக விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும் அவருக்கு உத்தரவிட்டனர்.

அதன்படி நேற்று அவரை விசாரணைக்கு அழைத்திருந்தனர். ஆனால் அவரிடம் விசாரணை நடத்துவதாக இருந்த அதிகாரி சொந்த பணி காரணமாக வெளியே சென்றுவிட்டதாக தெரிகிறது.

இதனால் விவேக்கை இன்று காலை 10 மணியளவில் விசாரணைக்கு ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சசிகலா அண்ணன் சுந்தரவதனத்தின் மகன் டாக்டர் வெங்கடேசுக்கு சொந்தமான சென்னை நீலாங்கரை மற்றும் தஞ்சையில் உள்ள வீடுகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் அவருடைய நீலாங்கரை வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து நேற்று அவரிடம் விசாரணை நடந்தது.

இதே போன்று இளவரசியின் மகள் கிருஷ்ணப்பிரியாவிடமும் இன்று விசாரணை நடத்த அதிகாரிகள்  உத்தரவிட்டுள்ளனர். இதையடுத்து அவரும் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் முன்வு ஆஜராவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

 

tags
click me!