
சென்னையில் சசிகலா, தினகரனின் உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள் என 25 இடங்களில் நடைபெற்று வந்த வருமான வரி சோதனை 14 இடங்களில் நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சசிகலா குடும்பத்தினர் அவர்களுக்கு நெருக்கமானவர்கள் வீடுகள், அலுவலகங்களில் 3-வது நாளாக வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த சோதனை நேற்று முந்தினம் காலை 6 மணிக்கு தொடங்கியது. இந்த சோதனையை 1800 அதிகாரிகள் 187 இடங்களில் மேற்கொண்டனர்.
இதனிடையே சசிகலா உறவினர்கள் 150 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
சோதனையின்போது சிக்கிய ஆவணங்கள், பொருட்கள், சொத்துக்கள் மதிப்பு பற்றி வருமான வரித்துறை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனால் 2 ஆயிரம் கோடிக்கு மேல் சொத்துக்கள், ஏராளமான நகைகள், ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும் சென்னை மற்றும் புறநகரில் 105 இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்று வந்தது. இதில், சென்னையில் மட்டும் 25 இடங்களில் நடைபெற்று வந்த வருமான வரி சோதனை 14 இடங்களில் நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.