ஜெயலலிதா மட்டும் இருந்திருந்தால்... இப்படி நடந்திருக்குமா...? அத விடுங்க... இவ்வளவு தெரிந்திருக்குமா..?

Asianet News Tamil  
Published : Nov 11, 2017, 07:21 PM ISTUpdated : Sep 19, 2018, 01:25 AM IST
ஜெயலலிதா மட்டும் இருந்திருந்தால்... இப்படி நடந்திருக்குமா...? அத விடுங்க... இவ்வளவு தெரிந்திருக்குமா..?

சுருக்கம்

if jayalalitha would be there then we cant expect such raids in tamil nadu

அது 1989. பல வருடங்களுக்குப் பின்  திமுக., ஆட்சிக்கு வந்தது. ஆனால் அல்ப ஆயுசில் அதுவும் போனது. அப்போது அதிமுக.,வுக்கு உயிரூட்டினார் ஜெயலலிதா. தொடர்ந்து 1991ல் அதிமுக., ஆட்சிக்கு வந்தது. அது, ஜெயலலிதா என்கிற மாயையைத் தோற்றுவித்தது. சட்ட மன்றத்தில் ஜெயலலிதா புடைவை கிழிய வெளியே ஓடி வந்த காட்சிகளும், ராஜீவ் காந்தி கொலையை அடுத்து ஏற்பட்ட அனுதாபங்களுமாய் ஜெயலலிதா அரியணையில் அமரக் காரணமாக  அமைந்தது என்பர் அரசியல் நோக்கர்கள். அந்த அனுதாப அலையில் துவங்கிய ஜெயலலிதாவின் அரியணைப் பயணத்தில் உடன் இருந்து சாமரம் வீசியவர் சசிகலா. ஆனால் அவரே இன்று அரியணையில் அமர ஆசைப்பட்டு எடுத்த தடாலடி நடவடிக்கை கைகூடாமற் போனது என்னவோ நிஜம். 

இன்று சசிகலா குடும்பத்தினர் தொடர்புடைய இடங்களில் நடந்த வருமான வரி சோதனையில் எத்தனை எத்தனையோ உண்மைகள் வெளி வந்தாலும், இவற்றுக்கெல்லாம் அச்சாரமாக அமைந்தது, அந்த 1991ல் அமைந்த ஜெயலலிதா தலைமையிலான ஆட்சிதான். அப்படிப் பார்க்கும் போது, வெள்ளி விழா கண்ட நிகழ்வுகள் இவை. 

ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி, அரட்டி உருட்டி மிரட்டி, எத்தனையோ பேரை ஏமாற்றிச் சேர்த்த இந்தச் சொத்துகளுக்கெல்லாம் அச்சாரம் இடப்பட்டு, அவை குறித்த உண்மைகள் வெளிவர, கிட்டத்தட்ட 25 வருடங்கள் ஆகியிருக்கின்றன. 

அந்தக் காலக் கட்டத்தில் ஜெயலலிதா, சசிகலா இணைந்து நடத்திய ஆடம்பர வளர்ப்பு மகன் திருமணம், வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட பட்டுப் புடவைகள், செருப்புகள், என பலவற்றை ஒரு தொலைக்காட்சி மீண்டும் மீண்டும் ஒளிபரப்பி, தங்கள் சார்புக் கட்சியான திமுக., அடுத்த முறை அரியணை ஏற காரணமாகியது. 

அப்போதுதான், வழக்குகள் பல போடப் பட்டன. ஜெயலலிதா, சசிகலா என குடும்பத்தினர் மீது தொடரப்பட்டன வழக்குகள். அந்த வழக்குகள் தொடர்ந்து நீதிமன்றங்களில் ஏறி இறங்கிக் கொண்டே இருந்தன. ஆனாலும், பின்னர் ஜெயலலிதா ஒரு உத்தியைக் கையாண்டார். மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் போது, மத்தியில் திமுக., கூட்டணியில் இருக்கும். மாநிலத்தில் திமுக., ஆட்சிக்கு வரும்போது, மத்திய அரசில் அதிமுக., அங்கம் வகிக்கும். இது போன்ற 20 வருடப் போக்கினால், பெரிய அளவில் இரு கட்சிகளுக்குமே பாதகம் இல்லாமல் இருந்தது. 

ஆனால் இன்றைய அரசியல் சூழலோ ரொம்பவே வித்தியாசமானது. மத்தியில் ஆளுகை இல்லாத ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகள் அமைவது வெகு காலத்துக்குப் பின்னர் இப்போது அமைந்திருக்கிறது. ஜெயலலிதா இருந்த வரை, அவர் மத்திய பாஜக.,வுடன் சேராத மற்றும் ஆதரவான என இரண்டுங்கெட்டான் நிலையிலேயேஇருந்து வந்தார். 2014ல் மோடி அரசு அமைந்த பின்னரும், ஜெயலலிதா அதே நிலைப்பாட்டில் இருந்தார். அவர் மரணிக்கும் வரை அப்படித்தான் இருந்தது. ஆனால், தனது நெருங்கிய நட்பு என்பதால், மோடியுடன் அவர் இணக்கமான போக்கையே பின்பற்றினார். 

ஜெயலலிதா மரணித்த பின்னர், இந்தப் போக்கு மாறியது. அதிமுக., என்ற கட்சி தள்ளாடத் துவங்கியுள்ளது. அதனால், ஊழல் கோட்டையின் ஒரு தடுப்பு அரணாக இருந்த  ஜெயலலிதா இல்லாத சூழலில், ஊழல் கஜானாவை பாகம் பிரித்துக் கொள்ளை அடிப்பதில் பல குழுக்களும் ஈடுபட, மத்திய அரசோ, ஒரு மாநிலத்தையே ஊழல் ஆதிக்கத்தில் திளைக்க வைத்த சசிகலாவின் இந்தக் குடும்பத்தைக் குறி வைத்து, மாநிலத்தில் இருந்து ஊழலை ஒழிக்க காய் நகர்த்தி வருகிறது. 

இப்படி கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஜெயலலிதாவின் அரசியல் செல்வாக்கால் சசிகலா குடும்பமும் தப்பித்து வந்தது. ஆனால், இன்று சோதனையில் இருந்து தப்ப முடியாத சூழழில் அது சிக்கித் தவிக்கிறது. அதற்காக, என்ன வேண்டுமானாலும் செய்து வெளியே வர முயற்சி செய்து வருகிறார்கள் சசிகலா குடும்பத்தினர். அதன் வெளிப்பாடே அண்மைக்கால தினகரனின் செயல்பாடுகள். பேட்டிகள் எல்லாமே! 

என்னை கேள்வி கேட்பவர்கள் யாரும் காந்தியின் பேரனோ பேத்தியோ அல்ல என்கிறார். அரசியல் வாதி என்றால் கோவணம் கட்டிக் கொண்டிருக்க வேண்டுமா என்று கேட்கிறார். இடையிடையே ஜெயலலிதா என்று அவர் பெயரையும் இழுக்கிறார். அவர் சொல்கிறபடி பார்த்தால், ஒட்டுமொத்த ஊழலுக்கும், சொத்துக் குவிப்புக்கும், முறைகேடுகளுக்கும் மொத்தக் காரணம் ஜெயலலிதா என்று சொல்லும் போக்கு தென்படுகிறது. 

இடையே, திமுக., அனுதாபிகள்,  அ.ராசாவின் ஊழலுக்கு திமுக தலைமையே பொறுப்பு என்றால், சசிகலா அண்ட் கோ முறைகேடுகளுக்கு அதிமுக தலைமையே முழுப் பொறுப்பு. 

அதனைத் தவிர்த்து விட்டு யாரும் நியாயம் பேசினால் அதுவும் மிகப் பெரும் முறைகேடுதான், ஏமாற்றும் போக்குத்தான் என்று பொதுத் தளங்களில் பேசத் தொடங்கியிருக்கிறார்கள். 

ஜெயலலிதா இருந்திருந்தால், இப்படி எல்லாம் வருமான வரி சோதனை நடந்திருக்குமா என்ற கேள்வியும் இத்தகையதுதான். இந்தக் கேள்வியை முன்வைப்பவர்கள், இந்த சோதனைகளுக்கு எதிரான மனப் போக்குடன் இருப்பவர்கள் மட்டுமல்ல, ஜெயலலிதாவின் ஊழல்களை நியாயப் படுத்துபவர்களும் ஆவார்கள். 

அதே போல், இன்றைய சோதனைகள் எல்லாவற்றையும் பார்த்து விட்டு, சோதனைகளின் போது பகிரப் படும் பகீர் தகவல்களைக் கேட்டு சலிப்புறும் சாதாரண மனிதர்களோ... நல்லவேளை ஜெயலலிதா இல்லாததால் தான் இத்தனை கொடுமைகளும் கொடூரங்களும் வெளி வந்திருக்கின்றன என்று பெருமூச்சு விடுகிறார்கள். 

PREV
click me!

Recommended Stories

5 ஆண்டுகால உழைப்பெல்லாம் வீண்..! அப்செட்டில் திமுகவினர்..! புலம்ப வைத்த அதிமுக ஓடுகாலிகள்..!
கொங்கில் டான் செந்தில் பாலாஜியா..? எஸ்.பி.வேலுமணியா..? 30 தொகுதிகளில் முரட்டு மோதல்..!