சாத்தான்குளம் சம்பவத்தில் எதிர்கட்சிகளை வாயடைக்க வைத்த எடப்பாடி... நேர்மையை நிரூபித்த அதிமுக அரசு..!

By Thiraviaraj RMFirst Published Jul 2, 2020, 11:46 AM IST
Highlights

சாத்தான்குளம் சம்பவத்தில் படிப்படியாக நடவடிக்கை எடுத்து எதிர்க்கட்சிகளே எதிர்பார்க்காத அளவிற்கு அவர்களின் வாயை அடைத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. 

சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் வழக்கில் 302 செக்சன் படி 6 காவலர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற அறிக்கை பெற்ற 24 மணி நேரத்திற்குள், இந்த வழக்கில் முகாந்திரம் உள்ளதை கருத்தில் கொண்டு, குற்றவாளிகள் மீது சட்டபூர்வமான நடவடிக்கைக்கு உத்தரவிட்டு தனது நேர்மையை  நிரூபித்துள்ளது தமிழக அரசு.

நாளிரு அறிக்கை, பொழுதொரு பேச்சு என அறிக்கை வெளியிட்டே அரசியல் நடத்தி வரும் மு.க.ஸ்டாலின் நாலாபுறமும் யோசிக்காமல் முந்திக் கொண்டு ஆளும் கட்சியை குறை சொல்லியே பழக்கப்பட்டு விட்டார். சாத்தான்குளம் ஜெயராஜ்,  பென்னிக்ஸ் கொலையிலும் அவரும், அவரது குடும்பத்தாரும் போட்டி போட்டுக் கொண்டு அறிக்கைப்போர் நடத்தி இ-பாஸ் கூட எடுக்காமல் நேரில் சென்று ஆறுதல் சொல்லச் சென்றதன் மூலம் அவர்களது  அரசியல் ஆதாயம் தேடும் முயற்சி அப்பட்டமானது. 

இந்த விவகாரத்தை வைத்து யார் பெயரெடுப்பது என்பதில் மு.க.ஸ்டாலின் குடும்பத்திற்குள்ளேயே அரசியல் நடந்ததெல்லாம் தனிக்கதை. சாத்தான்குளம் விவகாரத்தை வைத்து கடந்த ஒரு வாரமாக அறிக்கை அரசியல் செய்து வந்த மு.க.ஸ்டாலின், இப்போதைய காவலர்களின் கைதுக்கு தாங்களே காரணம் என இறுமாப்புடன் இந்த விவகாரத்தை வைத்தே இப்போதும் அரசியல் செய்து வருகிறார்.  

இன்றைய அவரது அறிக்கையில் மு.க.ஸ்டாலின், ‘’சாத்தான்குளம் கொலையில் சம்பந்தப்பட்டவர்களை காப்பாற்ற தமிழக அரசு எடுத்த முயற்சிகள் தவிடு பொடியாக்கப்பட்டு கொலை செய்தவர்கள் நீதிமன்றத்தின் தலையீட்டால் சட்டத்தின் முன் வளைக்கப்பட்டதை வரவேற்கிறேன். குடும்பத்தின் கண்ணீர், மக்கள் போராட்டம், கடையடைப்பு, திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் கோரிக்கைகள், நீதிமன்றம், ஊடகங்கள் என அனைத்து தரப்பினரால் சுற்றி வளைக்கப்பட்டு அதிமுக அரசு சிக்கிக் கொண்டது. 

சில கைதுகளை செய்துவிட்டு அனைவரது வாயையும் மூடிவிட்டோம் என்று தமிழக அரசு தப்புக்கணக்கு போடக்கூடாது. அனைத்து தரப்பினரும் கண்காணித்துக் கொண்டு தான் இருப்பார்கள். கொலைக்கு காரணமான அனைவரையும் கைது செய்ய வேண்டும். முதலமைச்சரின் கடமை முடிந்துவிடவில்லை இப்போதுதான் தொடங்கி இருக்கிறது.’’ என அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். 

தந்தை, மகன் உயிரிழந்த சம்பவத்தில் போலீஸார் மீது சிபிசிஐடி கொலை வழக்குப் பதிவு செய்த நிலையில், சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், எஸ்.ஐ. ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், காவலர்கள் முத்துராஜ், முருகன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கைது எடப்பாடி பழனிசாமி நேர்மையாக எடுத்த நடவடிக்கை. அதாவது ஒரு சம்பவம் நடைபெற்ற உடன் அறிக்கை வெளியிடுவது சுலபம். ஆனால், சம்பவம் நடந்தவுடன் அடுத்த நொடியே நடவடிக்கை எடுப்பது அத்தனை சுலபமல்ல. அது முதல்வருக்கான அழகும் அல்ல. 

அந்த சம்பவம் நடந்தது உண்மைதானா? எப்படி நடந்தது? பின்னணி என்ன? சம்பந்தப்பட்டோர் யார்? யார்? ஆதாரம், தரவுகள், சூழல் என அத்தனையு ஆராய்ந்தே முடிவெடுக்க வேண்டியுள்ளது. எடுத்தவுடன், தடாலடியாக நடவடிக்கை எடுத்துவிட முடியாது. ஒருவேளை இதே காவலர்களுக்கும் இந்தச் சம்பவத்திற்கும் தொடர்பில்லாமல் அவர்கள் கைது செய்யப்பட்டு, பிறகு அவர்களை விடுவித்தால் இந்த அரசு குற்றவாளிகளை தப்ப வைக்கிறது என்கிற விமர்சனத்தை எதிர்கட்சிகள் முன் வைக்காமல் இருக்குமா?

நடவடிக்கை எடுக்க தாமதம் என்னவென்றால் தீர ஆராய்ந்து அதன் பின் உரியவர்களிடம் விசாரணை நடத்தி உறுதிபடுத்திக் கொள்ளலாம் என்கிற ஒரே நோக்கமாகத்தான் எடப்பாடியின் செயல்பாடுகள் அமைந்திருந்தது. ஆனால், இதனையெல்லாம் ‘பகுத்தறிந்து’ கொள்ளாமால் அரைவேக்காட்டுத்தனமாக அறிக்கை விட்டு எடப்பாடி பழனிசாமி காவலர்களை காப்பாற்றும் நடவடிக்கையில் இறங்கியதாக அப்பட்டமாக அநியாயமாக குற்றச்சாட்டை கூறின. இப்படி ஒரு சம்பவம் நடந்த பின் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து மக்களின் அச்சத்தை போக்குவதில்தான் ஒரு முதல்வரின் எண்ணமாக இருக்குமே தவிர குற்றம்சாட்டப்பட்டவர்களை காப்பாற்றும் நோக்கில் செயல்பட்டால் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பதை எடப்பாடியார் ஒன்றும் அறியாத மடந்தையல்ல.

 

படிப்படியாக நடவடிக்கை எடுத்து எதிர்க்கட்சிகள் எதிர்பார்க்காத அளவிற்கு அவர்களின் வாயை அடைத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. ஆனால், அவர் எடுத்த நியாயமான நடவடிக்கைகளை வைத்தும் இந்த எதிர்கட்சிகள் அறிக்கை அரசியல் நடத்துவதுதான் கேலிக்கூத்தாய் உள்ளது. இந்த விவகாரத்தை இப்படியே விட்டுவிடமாட்டார் எடப்பாடி பழனிசாமி.  இன்னும் துரித நடவடிக்கைகள் தொடரும். அதே நேரத்தில் எதிர் கட்சிகளின் அறிக்கை அக்கப்போர்களும் தொடரும். 


 

click me!