பிரதமர் மோடிக்கு வைகோ எழுதிய கடிதம்..!! நெருக்கடி நேரத்தில் அரசியல் அதிரடி

By Ezhilarasan BabuFirst Published Jul 2, 2020, 11:06 AM IST
Highlights

அயல்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்ற பொருள் அல்லது சேவைகளை,  நிறுவனங்களின் ஆண்டு வணிக வரவு செலவு கணக்கில் எடுத்துக் கொள்ளத் தேவை இல்லை எனக் குறிப்பிட்டு உள்ளது. 

சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் புதிய கடன் பெறுவதற்கான வரையறைகளில் திருத்தம் செய்ய வேண்டும் என பிரதமருக்கும், நிதி அமைச்சருக்கும் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து  இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு, மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், ஜூலை 1 அன்று எழுதி உள்ள கடிதம். பெரும் நிதிச்சுமையில் சிக்கி இருக்கின்ற, சிறு,குறு,நடுத்தரத் தொழில்களை மீட்பதற்கும், புதிய கடன் வழங்குவதற்கும், 13 மே 2020 அன்று, இந்திய அரசு அறிவித்து இருக்கின்ற உதவிகள், ஆயத்த ஆடைத் தொழில் நிறுவனங்களுக்கு, புதிய நம்பிக்கையைக் கொடுத்து இருக்கின்றது. 

எனினும், நெருக்கடி காலக் கடன் குறித்து, ஆயத்த ஆடைகள் தொழில் முனைவோர் தெரிவித்து இருக்கின்ற சில கருத்துகளை, தங்கள் கவனத்திற்குக் கொண்டு வர விழைகின்றேன். 2020 பிப்ரவரி 29 ஆம் நாள் அன்று, 25 கோடிக்குக் குறைவான கடன் நிலுவையும், 2019/20 ஆம் ஆண்டில் 100 கோடிக்குக் குறைந்த வணிக வரவு செலவு செய்யும் நிறுவனங்கள், புதிய கடன் உதவி பெறத் தகுதி பெற்றவை என அறிவிக்கப்பட்டு உள்ளது. 2020 ஜூன் 26 ஆம் நாள், நடுவண் அரசின் சிறு,குறு, நடுத்தரத் தொழில்கள் வளர்ச்சித் துறை வெளியிட்டு இருக்கின்ற சுற்று அறிக்கையில், அயல்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்ற பொருள் அல்லது சேவைகளை,  நிறுவனங்களின் ஆண்டு வணிக வரவு செலவு கணக்கில் எடுத்துக் கொள்ளத் தேவை இல்லை எனக் குறிப்பிட்டு உள்ளது. 

அதன்படி, 25 கோடி கடன்,  2019/20 ஆம் ஆண்டில் 100 கோடி வணிக வரவு செலவு என்ற வரையறை பொருந்தாது. அதிலும் குறிப்பாக, ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு இவற்றில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். அரசு அறிவித்து இருக்கின்ற நெருக்கடி காலக் கடன்கள் பெறுவதற்கான வரையறைகளின்படி, புதிய உதவித் தொகை, கடன் வசதிகளைப் பெறுவதற்கு வகை செய்ய வேண்டும். இதன் மூலம், ஆயத்த ஆடைகள் தொழிலையும், அந்தத் தொழிலில் ஈடுபட்டு இருக்கின்ற கோடிக்கணக்கான தொழிலாளர்களையும் பாதுகாக்க முடியும். ஆவன செய்திடுமாறு அன்புடன் வேண்டுகிறேன். இவ்வாறு வைகோ கோரிக்கை விடுத்திருக்கின்றார்.


 

click me!