
கடந்த முறை ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் ஆணையம் தேர்தல் அறிவித்தபோது, எடப்பாடி தரப்பில் இருந்து டிடிவி தினகரன் வேட்பாளராக களமிறங்கினார்.
ஒபிஎஸ் தரப்பில் இருந்து அவைத்தலைவர் மதுசூதனன் வேட்பாளராக களமிறங்கினார். தேர்தல் அறிவிப்பு வந்ததும் ஆர்.கே.நகர் முழுவதும் பணபட்டுவாடா தொகுதியாக மாறிவிட்டது.
இதுகுறித்து வீடியோ உட்பட பணபட்டுவாடா செய்ததற்கான பல்வேறு ஆதாரங்கள் தேர்தல் ஆணையத்தில் குவிந்த வண்ணம் இருந்தன.
இதனால் பல்வேறு புகார்களின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் ஆர்.கே.நகர் தேர்தலை ரத்து செய்தது.
இதைதொடர்ந்து ஜெயலலிதா காலமானதால் காலியாக இருக்கும் ஆர்.கே.நகர் தொகுதியில் டிசம்பர் 31-ம்தேதிக்குள் இடைத்தேர்தலை நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வந்தது.
இந்நிலையில், ஆர்.கே. நகர் தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஆனால் ஒபிஎஸ் இபிஎஸ் இணைந்ததால் டிடிவி தினகரன் சுயேட்சை வேட்பாளராக களமிறங்குவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
கடந்த தேர்தலைப் போலவே இந்த தேர்தலிலும் அ.தி.மு.க., தி.மு.க. வேட்பாளர்களிடையே நேரடி போட்டி இருக்கும் என தெரிகிறது.
கடந்த தேர்தல் அறிவிப்பின் போது, வாக்காளர்களுக்கு பெருமளவில் பணப் பட்டுவாடா செய்தது கண்டறியப்பட்டதால், கடைசி நேரத்தில் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது. அதேபோன்று இந்த முறையும் பணப் பட்டுவாடா நடைபெறாமல் தடுக்கும் வகையில் தேர்தல் ஆணையம் தீவிரமாக கண்காணிக்க உள்ளது.
எனவே, ஒவ்வொரு தெருவிலும் பணம் பட்டுவாடா செய்யும் நபர்கள் குறித்த தகவல்களை ரகசியமாக சேகரித்து அவர்களை கண்காணிக்க தேர்தல் ஆணையம் தனி படையை அமைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.