
கழிசடை அரசியலுக்கு கரெக்ட் உதாரணம் என்று பத்திரிக்கைகளால் விமர்சிக்கப்பட்ட மாஜி மந்திரி என்.கே.கே.பி.ராஜாவை நினைவிருக்கிறதா? சில காலங்களாக கமுக்கமாக இருந்த இவரது நர்த்தனம் இப்போது ஒரு தற்கொலை மூலம் மீண்டும் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை சேர்ந்த பெள்ளி எனும் பெரும் கோடீஸ்வரர் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார். கடன் மற்றும் கந்துவட்டி பிரச்னையே இந்த மரணத்தின் நதிமூலம் என விமர்சிக்கப்பட்டது. இந்நிலையில், பெள்ளிக்கு சில கோடிகளை கடனாக கொடுத்து பல கோடிகளை வட்டியுடன் சேர்த்து மாஜி ராஜா அபகரித்துக் கொண்டிருந்ததே இந்த சாவின் பின்னணி என்று பெள்ளியின் உறவினர்கள் வெடித்திருக்கிறார்கள்.
பண முடையிலிருந்த பெள்ளிக்கு என்.கே.கே.பி.ராஜா கடன் கொடுத்தாராம். பின் அதற்கு தாறுமாறான வட்டி போட்டு எக்கச்சக்கமாக ஏற்கனவே நிறைய எடுத்துவிட்டார், அதுவும் போக இன்னும் நிறைய தொகை திருப்பித்தர வேண்டியிருக்குது என்று அவர் நச்சரிச்சரித்திருக்கிறார். சமீபத்தில் கூட லோக்கல் தி.மு.க. நபர் ஒருவரை கூட்டிக்கொண்டு பெள்ளியின் வீட்டிற்கு வந்தவர் ரொம்ப தாறுமாறாக அவரை திட்டிவிட்டாராம். இதனால் மனம் நொந்து கிடந்த பெள்ளியை, கடந்த புதன்கிழமையன்று காலையில் யாரோ போனில் அழைத்து காரசாரமாக பேசியிருக்கிறார்கள் இதனால் அவர் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி தன் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு இறந்துவிட்டார்... என்கிறார்கள் பெள்ளியின் உறவினர்கள்.
இந்த தற்கொலை விவகாரத்தில் மாஜி அமைச்சர் ராஜாவையும் அழைத்து விசாரிக்க வேண்டும்! அவர் பெள்ளிக்கு கொடுத்த தொகை எவ்வளவு, அதில் வட்டியோடு சேர்த்து திரும்ப பெற்றது எவ்வளவு? இன்னும் தரவேண்டும் என கேட்கும் தொகை எவ்வளவு? என்பதை விசாரித்து இது கந்து வட்டிதானா அல்லது அதைவிட மோசமானதா! என்பதையெல்லாம் கண்டுபிடிக்க வேண்டும். ஒருவேளை ராஜா அதிக வட்டி போட்டு பெள்ளியின் பணத்தை அபகரிச்சிருந்தாலோ, அவரை வீட்டில் போய் மிரட்டியிருந்தாலோ நிச்சயம் ராஜாவை கைது செய்ய வேண்டும் என்றும் கொதிக்கிறார்கள்.
இந்நிலையில் தன் மீது சொல்லப்படும் குற்றச்சாட்டுகளை மீடியாவிடம் மறுத்திருக்கும் என்.கே.கே.பி.ராஜா ‘பெள்ளி என் குடும்ப நண்பர். அவரோடு சேர்ந்து சில பிஸ்னஸ் செய்திருக்கிறேன். இப்போது கூட புதிய பிஸ்னஸ் பற்றி பேசிக் கொண்டிருந்தார். திடீரென அவர் தற்கொலை செய்தது வருத்தமே. இதில் என் பெயரை தேவையில்லாமல் இழுத்துவிட்டு அரசியல் செய்கிறார்கள்.” என்று கோபமாய் மறுத்திருக்கிறார்.
ஆனாலும் கடந்த தி.மு.க. ஆட்சியின்போது ஈரோடு மாவட்டத்தில் ஒரு குடும்பத்தின் சொத்துக்களை அபகரிக்க முயன்று அட்ராசிட்டி செய்த வழக்கில்தான் ராஜா கைதானார், பதவியிலிருந்து தூக்கி எறியப்பட்டார்.
சில காலம் சைலண்டாக இருந்தவர் இப்போது மீண்டும் இப்படி கந்து வட்டி விவகாரத்தில் சர்ச்சைக்கு ஆளாகியிருப்பதும், தற்கொலை விஷயத்தில் இவரின் பெயர் அடிபடுவதும் ஸ்டாலினை ரொம்பவே கடுப்பாக்கி இருக்கிறது.
கந்துவட்டிக்கு எதிராக கடும் குரல் கொடுத்து இந்த ஆட்சிக்கு நாம நெருக்கடி கொடுத்தால், நமக்குள்ளே இருக்கும் ஒருத்தர் மேலே இப்படியொரு சாயல் விழுவது கட்சிக்கு அசிங்கம்! என்று ஆதங்கப்பட்டிருக்கிறாராம் செயல் தல.