
குஜராத் சட்டசபை தேர்தலில் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து ஒரே நாளில் மத்திய அமைச்சர்கள் 30 பேர் பிரசாரம் செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது.
ஒரே நாளில்..
குஜராத் சட்டசபை தேர்தலில், 5-வது முறையாக ஆட்சியைக் கைப்பற்ற பா.ஜனதா அதிரடி தேர்தல் பிரசார வியூகங்களை வகுத்து வருகிறது.
அதில் ஒரு கட்டமாக, பா.ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவாக, இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் மத்திய அமைச்சர்கள் 30 பேரை பிரசார களத்தில் இறக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
இந்த பிரசாரத்திற்கான நாள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்றாலும், அனேகமாக வருகிற 25-ந்தேதி இந்த ‘மெகா’ பிரசாரம் அரங்கேறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நீண்ட தூர தேர்தல் பிரசாரத்துக்காக 15 ஹெலிகாப்டர்களை பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டு உள்ளது.
முதல்-அமைச்சர்கள்
மேலும் ராஜ்நாத்சிங், ஸ்மிருதி இரானி, நிதின் கட்கரி போன்ற மூத்த மத்திய அமைச்சர்கள் மற்றும் பா.ஜனதா முதல்-அமைச்சர்களான யோகி ஆதித்யநாத், வசுந்தரா ராஜே, சிவராஜ்சிங் சவுகான் ஆகியோரை நாள் ஒன்றுக்கு குறைந்தது 3 பொதுக்கூட்டங்களில் பேச வைக்கவும் ஏற்பாடு நடந்து வருகிறது.
குஜராத்தில் டிசம்பர் 9 மற்றும் 14 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. மாநிலத்தில் மொத்தம் உள்ள 182 தொகுதிகளில், முதல் கட்டமாக 89 தொகுதிகளிலும், மற்ற தொகுதிகளுக்கு இரண்டாம் கட்டமாகவும் தேர்தல் நடைபெற உள்ளது.
அருண் ஜெட்லி
தற்போது குஜராத் சட்டசபையில் பா.ஜனதாவின் பலம் 120 ஆகும். தற்போது காங்கிரஸ் கடுமையான போட்டியை அளிக்கும் நிலையில், இந்த எண்ணிக்கை குறைந்துவிடாமல் பார்த்துக்கொள்வதில் பா.ஜனதா மிகவும் தீவிரமாக உள்ளது.
பிரசார ஏற்பாடுகளை ஒருங்கிணைத்து மேற்கொள்ளும் பொறுப்பு மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியிடம் வழங்கப்பட்டு உள்ளது.
அவருக்கு உதவியாக ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய கிராமப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் நரேந்திரசிங் தாமோதர், பிரதமர் அலுவலக அமைச்சர் ஜிதேந்திரசிங் மற்றும் நீதித்துறை இணை அமைச்சர் பி.பி.சவுத்ரி ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
தேர்தல் பாதுகாப்பு பணிக்கு
60 ஆயிரம் மத்திய போலீசார்
குஜராத் மாநில தேர்தலை முன்னிட்டு, மத்திய அரசு சுமார் 60,000 பாதுகாப்புப் படையினரை அனுப்பத் திட்டமிட்டுள்ளது.
இதில் சிஐஎஸ்எப், பிஎஸ்எப், சிஆர்பிஎப், ஆர்பிஎப், ஐடிபிபி, எஸ்எஸ்பி ஆகிய மத்திய போலீஸ் படை வீரர்கள் அடக்கம்.
தேர்தல் பணியில் ஈடுபடும் மத்திய போலீசாருக்காக சமையல்காரர்கள், ஓட்டுநர்கள் மற்றும் பிற அலுவலக ஊழியர்களும் அனுப்பப்படுகின்றனர்.
இது தவிர பாதுகாப்புப் படையினரின் தேர்தல் பணிக்காக 650 ரயில் கோச்சுகளைத் தயார் நிலையில் வைக்குமாறு இந்திய ரயில்வேயிடம் மத்திய அரசு கோரியுள்ளது.