ஆளுநர் ரப்பர் ஸ்டாம்பாகத்தான் இருக்கணும்... ஆக்சன் காட்டக் கூடாது... போராடியவர்கள் கைது! 

First Published Nov 14, 2017, 6:59 PM IST
Highlights
governor should be a rubber stamp not to react so much oppositions raised their voices


மாநில சுயாட்சியில் தலையிடுவதா..? என்று  கூறி ஆளுநருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் கைது செய்யப் பட்டனர். 

கோவையில் இன்று மாலை, அரசு விருந்தினர் மாளிகையை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்த முயன்ற தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர்.  ஆளுநர்மாநில சுயாட்சியில் தலையிடுகிறார் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷமிட்டனர். 

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், இன்று பல்கலை பட்டமளிப்பு விழாவுக்காக கோவை வந்தார்.  அப்படியே,  கோவை மாவட்டத்தில் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆய்வு செய்தார்.

 பின்னர் கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரனுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த ஆலோசனையில் காவல் ஆணையர் அமல் ராஜ், வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் கோவையின் அனைத்துத் துறை அதிகாரிகளும் பங்கேற்றனர். 

ஆளுநரின் இத்தகைய ஆலோசனைக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கடும் கண்டனமும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். 

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களான  ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன் என பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். மாநில அரசு அதிகாரிகளுடன் ஆளுநர் ஆலோசிப்பதை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேடிக்கை பார்ப்பது ஏன் என  கேள்வி எழுப்பியுள்ளனர். 

இதனிடையே துரைமுருகன் வித்தியாசமாக, மாநில அரசைக் குறை சொல்லும் வகையில், மாவட்ட ஆட்சியர், போலீஸ் அதிகாரிகளுடன் அரசு கூட்டம் நடத்தவில்லை எனவும் அதனால்தான் ஆளுநர் அந்த வேலையை செய்கிறார் எனவும் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில், பாஜக., மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், ஆளுநர் ஆய்வு செய்வதை வரம்பு மீறிய செயலாக எடுத்துக்கொண்டு சர்ச்சையை ஏற்படுத்த தேவையில்லை, அதிகாரத்துக்கு உட்பட்டுதான் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்பது ஆளுநருக்கு தெரியும் என்று கூறியுள்ளார்.  

கோவையில் ஆளுநர் நடத்திய கூட்டத்தில் அமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்கப்படாததால் தங்களது அதிகாரம் பறிபோய்விட்டது என அவர்கள் கூறினால் அதற்கு பதிலளிக்க பாஜக தயார் என்று கூறியுள்ளார் வானதி சீனிவாசன்.

இப்படி சர்ச்சைகள் அதிகரித்துள்ள நிலையில், ஆளுநர் ரப்பர் ஸ்டாம்ப் போல் தான் இருக்க வேண்டும் என்று இப்போது தெள்ளத் தெளிவாகத் தங்கள் கருத்துகளை எதிர்க்கட்சியினர் தெரிவித்துவருகின்றனர். ஆளுநர் எந்த நடவடிக்கையும் எடுக்காத போது, ரப்பர் ஸ்டாம்ப் ஆளுநர்தானே என்றும், ஆளுநர் ரப்பர் ஸ்டாம்ப் போல் நடந்து கொள்ளக் கூடாது என்றும் கூறுபவர்களும் இதே கட்சித் தலைவர்கள்தான் என்பதை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு கேலி செய்து வருகின்றனர் நெட்டிசன்கள். 

click me!