இம்போடண்ட் தமிழ்நாடு அரசு … மோடியின் அரசு ..! பார்லிமெண்டில் நேரடியாக போட்டுத் தாக்கிய ஆ.ராசா !

By Selvanayagam PFirst Published Jul 10, 2019, 9:21 AM IST
Highlights

தமிழக அரசும், மத்தியில் ஆளும் மோடி அரசும் கையாலாகாத அரசுகள் என மக்களவையில் திமுகவின் ஆ.ராஜா கடுமையாக தாக்கிப் பேசினார். மோடி அரசு சொன்ன எதையுமே இதுவரை செய்யவில்லை என்றும் ஆ.ராசா குற்றம்சாட்டினார்.

கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. ஆனால் மத்தியில் பாஜக பிரமாண்டமான வெற்றியைப் பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்தது.

இந்நிலையில் தமிழகத்தில் இருந்து இத்தனை எம்.பி.க்கள் தேர்நதெடுக்கப்பட்டு ஒரு பிரயோஜனமும் இல்லை என பாஜகவினர் கிண்டல் செய்து வந்தனர். அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், தமிழக எம்.பி.க்கள் மக்களவையில் பாஜகவினரை கிடுகிடுக்க வைத்து வருகின்றனர்.

ஆ.ராசா, தயாநிதி மாறன், டி.ஆர்.பாலு போன்ற சீனியர் எம்.பிக்கள் மக்களவையில் தமிழக பிரச்சனைகள் குறித்து பேசி வருகின்றனர். 

இந்நிலையில் நேற்று மக்களவையில் பேசிய நீலகிரி தொகுதி எம்.பி. ஆ,ராசா தமிழக மற்றும் பாஜக அரசை கையாலாகாத அரசு என்று கடுமையாக குற்றம்சாட்டினார். 


தமிழக அரசைப் பொறுத்தவரை அது உங்கள் அரசு… நீங்கள் இங்கிருந்துதான் தமிழக அரசை இயக்கி வருகிறீர்கள். சொல்லப் போனால் இந்த இரண்டு அரசுகளும் இம்போடண்ட் அரசுகள் என தெரிவித்தார்.

தமிழகத்தில் ஜிஎஸ்டி போன்ற வரிகளை வசூலித்து தமிழக அரசு மத்திய அரசுக்கு கொடுக்கிறது. ஆனால் மாநில அரசுக்கு தேவையான நிதியுதவியை மத்திய அரசு தமிழகத்துக்கு வழங்குவதில்லை. அதை கேட்கவும்  தமிழக அரசுக்கு துணிவில்லை என குறிப்பிட்டார்.

அதே போல் நான் 15 க்கும் மேற்பட்ட பட்ஜெட் தாக்கல் செய்ததை பாத்திருக்கிறேன். ஆனால் மொத்த வருவாய் மற்றும் செலவினங்கள், டெஃபிசிட், சர்ப்ளஸ் என எதுவுமே இல்லாத பட்ஜெட்டை நான் இப்போது தான் பார்த்திருக்கிறேன் என கிண்டல் அடித்தார்.

தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் தண்ணீர் பஞ்சம் நிலவுகிறது. ஆனால் நிர்மலா சீத்தாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில் அது குறித்து ஒரு வரிகூட இல்லை என குற்றம்சாட்டினார்.

5 ஆயிரம், 10 ஆயிரம், 1 லட்சம் என கல்விக்கடன், விவசாயக் கடன் பெற்றவர்கள் கடுமையாக மிரட்டப்படுகிறார். அவர்கள் வாங்கிய இந்த சிறிய அளவு கடனுக்காக சொத்துககள் பறிமுதல் செய்யப்படுகின்றன. ஆனால் பெரிய, பெரிய கார்ப்பரேட் கம்பெனிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படுவதாக ஆ.ராசா குற்றம்சாட்டினார்.

கறுப்புப் பணத்தை மீட்டு இந்தியா கொண்டுவருவேன் என சொன்னார், ஆனால் செய்யவில்லை. 10 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவேன் என்று சொன்னார். அது நடக்கவில்லை. ஆனால் இந்துத்துவா, மத துவேசம் போன்றவை மட்டும் மோடி ஆட்சியில் வளர்க்கப்ட்டது என குற்றம் சாட்டினார்.

மக்கள் பிரச்சனைகள் எதையுமே தீர்க்காமல் பிரதமர்  தன்னை சௌகிதார் என கூறிக்கொள்வது ஆச்சரியமளிப்பதாக ஆ.ராசா தெரிவித்தார்.

click me!