
இன்று மாலை 4 மணிக்குள் கர்நாடக சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய நெருக்கடியில் இருக்கிறது பா.ஜ.க. இந்நிலையில் தற்காலிக சபாநாயகராக போப்பையா தேர்வு செய்ய்ப்பட்டிருக்கிறார். இன்று நடக்கப்போகும் சட்டசபை நிகழ்வில் இவர் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவர். சபாநாயகராக இவர் கையில் இருக்கும் அதிகாரங்கள் கர்நாடக அரசியலில் இன்று நிகழப்போகும் மாற்றத்தில், முக்கியப் பங்கு வகிக்கப்போகிறது.
இந்திய அரசியலமைப்பு சட்டம்189(1), விதி எண் 340 மற்றும் விதி எண் 346 ஆகிய 3 சட்டங்களும், இன்று நடக்கப்போகும் நம்பிக்கை வாக்கெடுப்பில் முக்கிய பங்கு ஆற்றப்போகின்றன.
கர்நாடக சட்டசபையில் உள்ளது மொத்தம் 222 தொகுதிகள்.இதில் குமாரசாமி இரண்டு தொகுதிகளில் வென்றிருந்தாலும், அவருக்கு 1 வாக்கு மட்டுமே அளிக்கும் உரிமை இருக்கிறது. எனவே இப்போது மொத்தம் 221 வாக்குகள் இருக்கின்றன. இதில் பா.ஜ.க விடம் 104 வாக்குகள் இருக்கின்றன. பெரும்பான்மையை நிரூபிக்க மேலும் 7 எம்.எல்.ஏக்கள் பா.ஜ.க பக்கம் வரவேண்டும் இதில் சபாநாயகரால் வாக்களிக்க இயலாது.
ஒருவேளை வாக்கெடுப்பில் சமநிலை ஏற்பட்டு 110 வாக்குகளை பா.ஜ.க பெரும் பட்சத்தில், இந்திய அரசியலமைப்பு சட்டம்189(1)-ன் படி அப்போது சபாநாயகரால் தனது ஒரு வாக்கை பா.ஜ.கவிற்கு கொடுத்து வெற்றி பெற செய்ய முடியும்.
மேலும் விதி எண் 340-ன் படி சபாநாயகர் கடைசி நேரத்தில் முக்கிய முடிவுகளை எடுக்க இயலும். அதே போல விதி எண் 346-ன் படி சபாநாயகர் குரல் வாக்கெடுப்பு முறையை தேர்வு செய்து நடத்தலாம் ஆனால் முடிவு வந்த பின் பிற கட்சிகள் அதனை எதிர்க்கும் பட்சத்தில், உச்சநீதி மன்ற உத்தரவின் படி கைகளை உயர்த்த சொல்லி வாக்கெடுப்பு நடத்த வேண்டி வரும்.