நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி.? முக்கிய முடிவு எடுக்க இன்று கூடுகிறது அதிமுக பொதுக்குழு

By Ajmal KhanFirst Published Dec 26, 2023, 8:12 AM IST
Highlights

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக முடிவு எடுக்கும் அதிகாரம் எடப்பாடி பழனிசாமிக்கு வழங்குதல்,  தேர்தலை எதிர்கொள்ள தயார் படுத்துதல், தமிழகம் மற்றும் புதுவை உள்ளிட்ட 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற வேண்டும் என்பன உள்ளிட்ட முக்கிய தீர்மனாங்கள் இன்றைய அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்படவுள்ளது. 
 

அதிமுக பொதுக்குழு கூட்டம்

அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் இன்று சென்னை வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஆண்டுக்கு இரண்டு செயற்குழு கூட்டம் மற்றும் ஒரு பொதுக்குழு கூட்டம் நடத்த வேண்டும். அந்த வகையில் கடந்த ஏப்ரல் மாதம் 16 ஆம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைப்பெற்றது.

இந்நிலையில் சென்னை வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் , அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் ஹுசேன் தலைமையில் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றப்பின் நடைபெறும் முதல் பொதுக்குழு கூட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.  இந்த கூட்டத்தில் 2800 பொதுக்குழு உறுப்பினர்களும் 300 செயற்குழு உறுப்பினர்களும் பங்கேற்கின்றனர். 

இபி்எஸ் பொறுப்பேற்ற பின் முதல் கூட்டம்

பொதுக்குழுவில் பங்கேற்க வரும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்கும் விதமாக திருமண மண்டபம் அமைந்துள்ள சாலையில் எம்.ஜி.ஆர் ஜெயலலிதா எடப்பாடி பழனிசாமி கட் அவுட்டுகள், பேனர்கள், தோரணங்கள் , கட்சி கொடி கட்டப்பட்டுள்ளது.இந்த பொதுக்குழு கூட்டத்தில் , கட்சியின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது, கட்சியில் 2 கோடி உறுப்பினர் என்ற இலக்கை கடந்து 2 கோடி 44 லட்சமாக உயர்த்தியது பூத் கமிட்டி, இளைஞர் மற்றும் இளம் பெண்கள், மகளிர் அமைப்புகளுக்கு நிர்வாகிகள் தேர்வு செய்தது உள்ளிட்டவைகளுக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது. 

தேர்தலில் யாருடன் கூட்டணி

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக முடிவு எடுக்கும் அதிகாரம் எடப்பாடி பழனிசாமிக்கு வழங்குதல்,   தேர்தலை எதிர்கொள்ள ஆயத்தமாவோம்,  தமிழகம் மற்றும் புதுவை உள்ளிட்ட 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற வேண்டும்...  மற்றும் மறைந்த அதிமுக நிர்வாகிகள், முக்கிய நபர்களின் மறைவுகளுக்கு இரங்கல் தீர்மானம் உட்பட சுமார் 25 ல் இருந்து 30 தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பா.ஜ.க உடனான கூட்டணி முறிவுக்கு பின்னர் நடைபெறும் பொதுக்குழு என்பதால், அதிமுக கூட்டணி நிலைபாடு குறித்து பொதுக்குழுவில் தலைவர்கள் பேச வாய்ப்புள்ளதால், இந்த பொதுக்குழு முக்கியத்துவம் பெறுகிறது.

தமிழக அரசை கண்டித்து தீர்மானம்

இதைத்தவிர, மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்பை சரியாக எதிர்கொள்ளாதது, சட்டம் ஒழுங்கு, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாதது, உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களுக்கு தமிழ்நாடு அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதையும் படியுங்கள்

ராஜ கண்ணப்பனுக்கு உயர்கல்வித்துறை கிடைத்ததன் பின்னணி என்ன?

click me!