திமுகவா இந்து விரோத கட்சி.? இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறையில் ஓராண்டு சாதனைகளின் சாம்பிள்கள்!

By Asianet TamilFirst Published May 8, 2022, 10:02 AM IST
Highlights

தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைகிறது. திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சி என்பதை நிறுவும் வேலையை பாஜக தொடர்ந்து செய்து வருகிறது. இந்த விஷயத்தில் ‘கேப்’ கிடைக்கும் இடங்களில் எல்லாம் திமுகவை பாஜக திணறடித்து வருகிறது.

இந்து சமய அறநிலையத் துறை:

தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைகிறது. திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சி என்பதை நிறுவும் வேலையை பாஜக தொடர்ந்து செய்து வருகிறது. இந்த விஷயத்தில் ‘கேப்’ கிடைக்கும் இடங்களில் எல்லாம் திமுகவை பாஜக திணறடித்து வருகிறது. ‘திமுகவில் 90 சதவீதம் பேர் இந்துக்கள், திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சி இல்லை, ஆன்மிக விஷயங்களை வைத்து எங்களை பணிய வைக்க முடியாது’ என்றெல்லாம் திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறார். என்றாலும் இந்து விரோதி என்ற விமர்சனங்களை பாஜக தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. இந்நிலையில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சராக சேகர்பாபு பொறுப்பேற்றார். முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அறநிலையத் துறை தொடர்ந்து பேசு பொருளானது. அந்த அளவுக்கு அறநிலையத் துறையில் திட்டங்களும் அறிவிப்புகளும் நடவடிக்கைகளும் அணிவகுத்தன. திமுகவுக்கு நற்பெயரை பெற்று தரும் வகையில் இத்துறையில் பல திட்டங்கள் கடந்த ஓராண்டில் அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றில் சில.. 

திருசெந்தூர் அன்னதானம்:

தமிழகத்தில் இதுவரை 991 ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து 540.39 ஏக்கர் திருக்கோயில் நிலங்கள், 496.1748 கிரவுண்ட் சதுர அடி மனைகள், 20.1434 கிரவுண்ட் கட்டிடங்கள், 46.2077 கிரவுண்ட் திருக்குளக்கரைகள் மீட்கப்பட்டுள்ளன. இதன் தற்போதைய மதிப்பு ரூ.2,043 கோடி.

தமிழகத்தில் 754 திருக்கோயில்களில் பக்தர்களுக்கு அன்னதான திட்டம் செயல்பாட்டில் உள்ள நிலையில், திருத்தணி, சமயபுரம், திருச்செந்தூர் ஆகிய கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் திட்டம் விரிவுப்படுத்தப்பட்டது.

12 ஆண்டுகள் முடிந்தும் திருப்பணிகள், குடமுழுக்கு நடைபெறாத 675 திருக்கோயில்களில் திருப்பணிகள் செய்வதற்கு உத்தரவுப் பிறப்பிப்பு. 

தமிழக திருக்கோயில்களில் ஒரு லட்சம் தலமரக்கன்றுகள திருக்கோயில்கல் வளாகத்தில் நடும் வண்ணம் ‘கலைஞர் தலமரக்கன்றுகள் நடும் திட்டம்’ 2021 ஆகஸ்டில் தொடங்கப்பட்டது.

தமிழில் அர்ச்சனை செய்யும் அறிவிப்பு முதல் கட்டமாக 47 முதன்மை திருக்கோயில்களில் செயல்படுத்தப்பட்டுள்ளது.

மாரியம்மன், சிவன் போற்றி நூல்கள் எல்லா திருக்கோயில்களிலும் கிடைக்க செய்யும் திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் 2021 ஆகஸ்டில் தொடங்கி வைத்தார். மேலும் திருமால், நவக்கோள்கல் போற்றி நூல்களும் வெளியிடப்பட்டன.

அனைத்து சாதியினரும் அர்ச்சகர்:

தமிழக திருக்கோயில்களில் சமூக நீதியை நிலைநாட்டும் விதத்தில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர்களாக நியமிக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதன் அடிப்படையில் மதுரை, பழநி, திருச்செந்தூர், திருவண்ணாமலை ஆகிய நான்கு இடங்களில் சைவ அர்ச்சகர்ளுக்கான பயிற்சி நிலையங்களும், சென்னை, ஸ்ரீரங்கம் ஆகிய இரண்டு இடங்களில் வைணவ அர்ச்சகர் பயிற்சி நிலையங்களும் ஏற்படுத்தப்பட்டு மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. தமிழக முதல்வர் 14.08.2021 அன்று 56 அர்ச்சகர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி முறைப்படி இத்திட்டத்தை தொடங்கி வைத்தார். 

தமிழக திருக்கோயில்களில் தானமாகவும் நேர்த்திக்கடனாவும் பெறப்பட்ட தங்க ஆபரணங்களை உருக்கி, அதை டெபாசிட் செய்து, அதன் மூலம் கிடைக்கும் வருவாயைத் திருக்கோயில் பணிகளுக்கு செலவிடும் திட்டம் அறிவிப்பு.

திருக்கோயில்களில் பக்தர்கள் இலவசமாக மொட்டை அடிக்கும் திட்டம் அறிவிப்பு.

வடலூர் மாவட்டம் வடலூரில் திருவருட்பிரகாச வள்ளலார் புகழைப் போற்றும் வகையில் ‘வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் திட்டம்.

திருச்சி, திருச்செங்கோடு, திருநீர்மலை, திருக்கழுக்குன்றம், திருத்தணி ஆகிய ஊர்களில் உள்ள மலைக்கோயில்களில் ரோப் கார் திட்டம் தொடங்குவதற்கான வழிமுறைகள் ஆய்வு.

வள்ளலார் பிறந்த தினமான அக்டோபர் 5 இனி ஆண்டுதோறும் ‘தனிப் பெருங்கருணை தினம்’ என்ற பெயரில் கொண்டாடப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு.

அர்ச்சகர், ஓதுவர, பிரபந்த விண்ணப்பர், வேதபாராயணர், இசைக் கற்போர் பயிற்சி காலத்தில் வழங்கப்படும் ஊக்கத்தொகை ரூ.1000-த்திலிருந்து ரூ.3000 ஆக உயர்வு.

பக்தர்கள் அதிகளவில் வரும் கோயில்களில் முதலுதவி மையங்கள் அமைப்பு.

திருக்கோயில்களுக்கு வரும் பக்தர்களுக்கு தரமான திருநீறு, குங்குமம் வழங்க அவற்றைத் தயாரிக்க கட்டமைப்புகள் ஏற்படுத்தும் அறிவிப்பு.

அன்னைத் தமிழில் அர்ச்சனை:

ஆதிதிராவிடர், பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் உள்ள 1000 திருக்கோயில் திருப்பணிக்களுக்காக வழங்கப்பட்டு வரும் ரூ.1 லட்சம் நிதி ரூ.2 லட்சமாக உயர்வு. இதேபோல கிராமப்புறங்களில் உள்ள 1250 திருக்கோயில் திருப்பணிகளுக்காக ரூ. 2 லட்சம் வீதம் உயர்த்தப்பட்டது.

திருக்கோயில் பக்தர்களுக்காக 22 திருமண மண்டபங்கள் ரூ.53.50 கோடி செலவில் கட்டப்படும் என்ற அறிவிப்பு,

அதிகளவில் பக்தர்கள் வரும் கோயில்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த 40 கோயில்களில் திருக்கோயில்களுக்கான ஒருங்கிணைந்த பெருந்திட்டம் அறிவிப்பு.

திருச்செந்தூர் சுப்ரமணியன் சுவாமி திருக்கோயிலில் ரூ.150 கோடி செலவி திருப்பணிகள்.

பெரியபாளையம் பவானி அம்மன் திருக்கோயில் ரூ.125 கோடி செலவில் மேம்படுத்தும் அறிவிப்பு.

13 திருக்கோயில்களுக்கு ரூ.10 கோடி மதிப்பீட்டில் மரத்தினலான புதிய திருத்தேர்கள் செய்யப்படும்.

121 திருக்கோயில்களில் பராமரிக்கப்பட்டு வரும் கோசாலைகள் ரூ.20 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும். திருக்கோயில்களுக்கு தானமாக வழங்கப்படுகின்ற கால்நடைகளைப் பராமரிக்க நவீன வசதிகளுடன் கூடிய கோசாலை திருவள்ளூர் மாவட்டம், ஆவடி வட்டம் கோயில் பதாகை சுந்தரராஜப் பெருமாள் திருக்கோயிலுக்குச் சொந்தமான 25 ஏக்கர் பரபரப்பளவு நிலத்தில் புதிதாக ஏற்படுத்தப்படும். இதற்கென ரூ.20 கோடி செலவிடப்படும்.

யானைகளுக்கான குளியல் தொட்டி:

திருக்கோயில்களில் பராமரிக்கப்படும் யானைகளுக்கான குளியல் தொட்டிகள் 18 திருக்கோயில்களில் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் 8 திருக்கோயில்களில் புதிதாக குளியல் தொட்டிகள் ரூ.1 கோடி செலவில் அமைக்கப்படும்.

திருக்கோயில்களில் " அன்னைத் தமிழில் அர்ச்சனை" செய்யும் அர்ச்சகர்களை ஊக்குவிக்கும் விதமாக சிறப்பு கட்டணச்சீட்டுகள் அறிமுகப்படுத்தப்படும். இதற்கான அர்ச்சனைக் கட்டணத்தில் 60 சதவீதம் அர்ச்சகருக்கு பங்குத் தொகையாக வழங்கப்படும்.

திருக்கோயில்களில் நடைபெறும் திருமணங்களில் மணமக்களில் ஒருவர் மாற்றுத் திறனாளியாக இருப்பின் கட்டணம் ஏதுமின்றியும், திருக்கோயில் மண்டபங்களில் நடக்கும் திருமணங்களுக்கு வாடகையின்றியும் திருமணங்கள் நடத்திட அனுமதிக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் நடைபெறவுள்ள திருமணங்களில் மணமக்களுக்கு புத்தாடைகள் திருக்கோயில் சார்பாக வழங்கப்படும்.

மகா சிவராத்திரி விழா:

ஒருகால பூஜைத்திட்டத்தின் கீழ் நிதி வசதியற்ற 12,959 திருக்கோயில்கள் பயன்பெறுகின்றன. இந்த ஆண்டு நிதி வசதியற்ற மேலும், 2000 திருக்கோயில்களுக்கு இத்திட்டம் விரிவுபடுத்தப்படும். 

 இந்த ஆண்டு முதல் ஆண்டுதோறும் 5 சிவாலயங்கள் சார்பாக மகா சிவராத்திரி விழா நடத்தப்படும்.

1000 திருக்கோயில்களில் ரூ.500 கோடி மதிப்பீட்டில் திருப்பணி, பராமரிப்பு, புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் தொன்மையான 80 திருக்கோயில்கள் ரூ.100 கோடி மதிப்பீட்டில் அரசு நிதி மூலம் புனரமைப்பு செய்யப்பட்டு குடமுழுக்கு நடத்தப்படும்.

click me!