
நீட் தேர்விற்கு சிபிஎஸ்இ பாடத்திட்டத்துடன் மாநில பாடத்திட்டங்களும் ஒருங்கிணைத்து வினாத்தாள் தயாரிக்கப்படும் எனவும் இந்த ஆண்டு முதல் ஒரே மாதிரியான வினாத்தாள் வழங்கப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
12ம் வகுப்பு பொதுத்தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் கவுன்சிலிங் மூலமாக மருத்துவ இடங்களை நிரப்பிவந்த தமிழகம், நீட் நுழைவுத் தேர்வை கடுமையாக எதிர்த்தது. ஆனால், நீட் தேர்வில் உறுதியாக இருந்த மத்திய அரசு, தமிழகத்திற்கு கடந்த ஆண்டு விலக்கு அளிக்கவில்லை.
அதனால், 12ம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் பெற்றும் நீட் தேர்வில் தோல்வியுற்றதால், பல மாணவர்கள் மருத்துவ இடம் கிடைக்காமல் பரிதவித்தனர். இதற்கு காரணம், சிபிஎஸ்இ பாடத்திட்டத்திலிருந்து நீட் தேர்வில் அதிகமான கேள்விகள் கேட்கப்பட்டதுதான். சிபிஎஸ்இ பாடத்திட்டத்திலிருந்து கேள்விகள் கேட்கப்பட்டதால், மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயின்ற மாணவர்களுக்கு அது பெரும் சவாலாக இருந்தது.
நீட் தேர்வை எதிர்கொள்ள வைக்க தமிழக கல்வித்துறை சார்பில், அரசு பயிற்சி மையங்கள், புதிய பாடத்திட்டம், 11ம் வகுப்பிற்கும் பொதுத்தேர்வு என பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
மாநில பாடத்திட்டங்களும் கருத்தில் கொள்ளப்பட்டு அவற்றிற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் கடந்த 18ம் தேதி தெரிவித்திருந்தது.
வரும் மே மாதம் 6ம் தேதி இந்தாண்டுக்கான நீட் தேர்வு நடத்தப்படும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. இந்நிலையில், சிபிஎஸ்இ பாடத்திட்டத்துடன் மாநில பாடத்திட்டங்களும் ஒருங்கிணைக்கப்பட்டு கேள்விகள் கேட்கப்படும் எனவும் இந்த ஆண்டு முதல் ஒரே மாதிரியான வினாத்தாள் வழங்கப்படும் எனவும் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.