மாணவர்களை சிந்தனையாளர்களாக மாற்ற, புதிய தேசிய கல்விக் கொள்கையில் பல அம்சங்கள் உள்ளன என்று யுஜிசி தலைவர் ஜெகதீஷ் குமார் பேசினார்.
தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்த பல்கலைக்கழகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) தலைவரும் பேராசிரியருமான எம். ஜெகதீஷ் குமார் வலியுறுத்தியுள்ளார்.
ஊட்டியில் துணைவேந்தர்கள் மாநாடு
undefined
உதகமண்டலத்தில் உள்ள ஆளுநர் மாளிகையில் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு நேற்று தொடங்கியது. மாநாட்டை தமிழக ஆளுநரும் பல்கலைக்கழகங்களின் வேந்தருமான ஆர்.என். ரவி தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பல்கலைக்கழக மானியக் குழுவின் தலைவர் பேராசிரியர் எம்.ஜெகதீஷ் குமார் பங்கேற்றார். அவர் இந்த மாநாட்டில் பேசுகையில், “இந்தியாவில் மொத்தம் 1,050 பல்கலைக்கழகங்கள் உள்ளன. அவற்றில் 400 தனியார் பல்கலைக்கழகங்கள் ஆகும். இதேபோல 43 ஆயிரம் கல்லூரிகள் உள்ளன. கிராமப்புறங்களில் உள்ள 45 சதவீத கல்வி நிறுவனங்களில் ஏழை, எளிய மாணவர்கள் படிக்கிறார்கள். இவர்களுக்கு உயர் தர உயர் கல்வி கிடைக்க வேண்டும். அதன்மூலம், மாணவர்களின் வாழ்வு மாற்றம் அடைய வேண்டும்.
யுஜிசி தலைவர் பேச்சு
100 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த கல்வி நிலை என்பது இப்போது இல்லை. அது தற்போது மாறியுள்ளது. தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் இந்த மாற்றம் ஏற்பட்டு உள்ளது. இதேபோல அடுத்த 10 ஆண்டுகளில் தொழில்நுட்பத்திலும் மாற்றம் ஏற்படும். அதற்கு நாம் அனைவரும் தயாராக வேண்டும். சவால்களை எதிர்கொள்ள கொள்ள வேண்டும். அப்படி எதிர்கொள்ள கல்வி அமைப்பை மாற்றி அமைக்க வேண்டும். மாணவர்களுக்குத் தரமான கல்வி வழங்கப்பட வேண்டும். அதே வேளையில் ஆசிரியர்களும் தங்கள் தரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும். மாணவர்கள் எப்போதும் கேள்வி எழுப்ப வேண்டும். தோல்விகளிலிருந்து பாடத்தைக் கற்க வேண்டும்.
தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்துங்க
மாணவர்களின் கல்வியைப் பன்முகத்தன்மை கொண்டதாகவும் நாம் மாற்ற வேண்டும். அவர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும் வகையில் திறன்களை மேம்படுத்த வேண்டும். ஒரு பட்டப்படிப்பு மட்டுமல்ல, இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்டப் படிப்புகளையும் படிக்க வேண்டும். இதை ஆன்லைன்மற்றும் டிஜிட்டல் தளத்தில் மேற்கொள்ள பல்கலைக்கழகங்கள் வாய்ப்புகளை ஏற்படுத்தி தர வேண்டும். மாணவர்களை சிந்தனையாளர்களாக மாற்ற, புதிய தேசிய கல்விக் கொள்கையில் பல அம்சங்கள் உள்ளன. தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்த பல்கலைக்கழகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று ஜெகதீஷ் குமார் பேசினார்.