மதுவிலக்கை நடைமுறைப்படுத்துங்கள்... அரசுக்கு திருமாவளவன் வலியுறுத்தல்!!

By Narendran SFirst Published May 15, 2023, 7:11 PM IST
Highlights

கள்ளச்சாராய வணிகத்தையும் கட்டுப்படுத்திட வேண்டும் என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். 

கள்ளச்சாராய வணிகத்தையும் கட்டுப்படுத்திட வேண்டும் என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகிலுள்ள எக்கியார்குப்பத்தைச் சார்ந்தவர்கள் மெத்தனால் கலந்த கள்ளச் சாராயம் அருந்தியதால் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர். 20க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதுபோலவே செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த 4 பேர் நச்சுச் சாராயம் குடித்து உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களுக்கு எமது அஞ்சலியையும், அவர்களது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம். உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா 10 லட்ச ரூபாயும், சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் நிவாரணமாக அறிவித்த முதலமைச்சர்க்கு எமது நன்றி. இந்த உயிரிழப்புகளுக்குக் காரணமான கள்ளச்சாராய வியாபாரிகள் மட்டுமின்றி, அதை உற்பத்தி செய்கிறவர்களையும் விநியோகிப்பவர்களையும் கண்டறிந்து கடுமையாகத் தண்டிக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

இதையும் படிங்க: தமிழகத்தில் ஆலமரமாக வேரும்,விழுதும் ஊன்றியிருக்கிறதா கள்ளச்சாராய தொடர்பு.!திமுக அரசுக்கு எதிராக சீறும் ராமதாஸ்

Latest Videos

மதுவிலக்கை நடைமுறைப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அரசியலமைப்புச் சட்டத்தின் உறுப்பு எண் 47 இல் வலியுறுத்தப்பட்டிருக்கிறது. மதுவிலக்கை தேசியக் கொள்கையாக அறிவிப்பது தொடர்பான ‘மதுவிலக்கு விசாரணைக் குழுவின் பரிந்துரைகளையும் 1963 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட நீதிபதி தேக் சந்த்குழுவின் பரிந்துரைகளையும் ஒன்றிய அரசு நடைமுறைப்படுத்தவேண்டும். மதுவிலக்கைத் தேசியக் கொள்கையாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். அதற்காக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். மது விலக்கு என்பது மாநில அதிகாரத்தின்கீழ் வருவதால் தமிழ்நாடு அரசு மதுவிலக்கை அறிவிக்கவேண்டும் எனவும் வலியுறுத்தி வருகிறோம். எனினும் மது விலக்கு என்பது அரசாங்கம் மட்டுமே சாதித்துவிடக்கூடிய ஒன்றல்ல என்பதை அறிவோம். மக்களின் ஒத்துழைப்பும் அதற்கு இன்றியமையாததாகும். தற்போது மதுவிலக்கு நடைமுறையில் உள்ள குஜராத், பீகார் ஆகிய மாநிலங்களில் கள்ளச் சாராயத்தால் ஏற்பட்டுவரும் உயிரிழப்புகள் அதைத்தான் காட்டுகின்றன.

இதையும் படிங்க: பேனா நினைவு சின்னம் அமைக்க அனுமதிக்க கூடாது.! உச்ச நீதிமன்றத்தில் அதிரடியாக மனு தாக்கல் செய்த ஜெயக்குமார்

எனினும், மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதுதான் மக்கள் நலன்களைப் பாதுகாப்பதாக அமையும். கள்ளச்சாராயம் பெருகுமென காரணம் காட்டி அரசே மதுவணிகத்தில் நேரடியாக ஈடுபடுவதை நியாயப்படுத்திட இயலாது. கள்ளச்சாராய வணிகத்தையும் கட்டுப்படுத்திட வேண்டும். அதே வேளையில் மதுவிலக்கையும் நடைமுறைப்படுத்திட வேண்டும். அதனைப் படிப்படியாக செய்திடவேண்டும். அதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மது அருந்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து மக்களிடையே தீவிரமான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். தற்போது மேற்கொள்ளப்படும் மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு உள்ளிட்ட விழிப்புணர்வு பிரச்சாரம் போதுமானதல்ல. மதுவால் அதிகம் பாதிக்கப்படுகிறவர்கள் பெண்கள்தான். எனவே மகளிர் சுய உதவிக் குழுக்களைக்கொண்டு இதற்கான பரப்புரையை மேற்கொள்ளலாம். இதுகுறித்து தமிழ்நாடு அரசு திட்டம் ஒன்றை அறிவிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார். 

click me!