பொது விநியோக திட்டத்தை அனைவருக்கும் செயல்படுத்த வேண்டும்… அரசுக்கு ஓ.பன்னீசெல்வம் வலியுறுத்தல்!!

By Narendran SFirst Published Nov 27, 2021, 6:34 PM IST
Highlights

அனைவருக்கும் பொது விநியோக திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

அனைவருக்கும் பொது விநியோக திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நியாய விலைக் கடைகளில் மாதம் ஒரு கிலோ சர்க்கரை கூடுதலாகத் தரப்படும், உளுத்தம் பருப்பு மீண்டும் வழங்கப்படும், மின் சேமிப்பைக் கருத்தில் கொண்டு ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் மானிய விலையில் மூன்று LED பல்புகள் வழங்கப்படும், எல்லாப் பொருட்களும் பாக்கெட்டுகளில் வழங்கப்படும் என்றெல்லாம் வாக்குறுதிகளை அள்ளிவீசி ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த தி.மு.க. அரசு, வருமான வரி செலுத்துவோரின் விவரங்களை அவர்களின் ஆதார் எண்ணுடன் வழங்குமாறு வருமான வரித் துறையினை உணவுத் துறை வாயிலாக கேட்டுள்ளது அனைவருக்குமான பொது விநியோகத் திட்டம் என்பதை சீர்குலைப்பதாக அமைந்துள்ளது. இது வாக்களித்த மக்களை வஞ்சிக்கும் செயலாகும். இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்படியே விலைக் கடைகள் மூலம் பொருட்களை வழங்கி வரும் சூழ்நிலையில், தமிழ்நாட்டில் தான் விலையில்லா அரிசி அல்லது கோதுமை குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் வழங்கப்பபட்டு வருகிறது.

இது தவிர , சர்க்கரை, பாமாயில், துவரம் பருப்பு ஆகிய பொருட்களும் மானிய விலையில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் சுமார் இரண்டு கோடியே இருபது இலட்சம் குடும்பங்கள் பயனடைந்து வருகின்றன. தமிழ்நாட்டில் நடைமுறையில் இருப்பது அனைவருக்குமான பொது விநியோகத் திட்டம், அதே சமயத்தில் மற்ற மாநிலங்களில் நடைமுறையில் இருப்பது தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இலக்கு சார்ந்த பொது விநியோகத் திட்டம். இதன்பட , முன்னுரிமை பெற்ற குடும்ப அட்டை வைத்திருப்பவர்கள் மட்டும் ஒரு நபருக்கு, ஒரு மாதத்திற்கு, ஒரு கிலோ அரிசி மூன்று ரூபாய் என்ற வீதத்தில் ஐந்து கிலோ அரிசி பெறத் தகுதியுடையவர்கள் ஆவர். மேலும் இந்தச் சட்டத்தின்படி, மொத்த பயனாளிகளின் எண்ணிக்கை ஊரக மக்கள் தொகையில் 75 விழுக்காட்டிற்கும், நகர்ப்புற மக்கள் தொகையில் 50 விழுக்காட்டிற்கும் மேல் செல்லக்கூடாது. இதன் அடிப்படையில் தான் தமிழ்நாட்டிற்கு அரிசியை மத்திய அரசு வழங்குகிறது. இந்த அரிசி போதுமானதாக இல்லை என்பதால், தமிழ்நாடு அரசு வெளிச்சந்தையிலிருந்து தனது சொந்த நிதி மூலமாக அதிக விலை கொடுத்து வாங்கி மக்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறது. இந்தத் திட்டத்தில் உள்ள பயனாளிகளைக் குறைக்கும் பொருட்டு, வருமான வரி விவரங்களை தமிழ்நாடு அரசின் உணவுத் துறை கேட்கிறதோ என்ற எண்ணம் தற்போது மக்கள் மத்தியில் நிலவுகிறது. வருமானத்தின் அடிப்படையில், பயனாளிகளின் எண்ணிக்கையைக் குறைத்து அனைவருக்குமான பொது விநியோகத் திட்டம் என்ற நோக்கத்தையே சீர்குலைப்பது என்பது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. ஐந்து இலட்சம் ரூபாய்க்கு மேல் ஆண்டு வருமானம் இருப்பவர்கள் எல்லாம் வருமான வரி வரம்பிற்குள் வந்து விடுவார்கள். ஒரு குடும்பத்தின் தலைவர் வருமான வரி செலுத்துபவராக இருந்தாலும், அவரை நம்பி எத்தனை நபர்கள் இருக்கிறார்கள்? அவருடைய பின்னணி என்ன? அவரால் வெளிச் சந்தையிலிருந்து பொருட்களை வாங்கி குடும்பத்தை நடத்த இயலுமா? என்பதையெல்லாம் ஆராய வேண்டும்.

ஆனால் நடைமுறைக்கு ஒவ்வாது. மத்திய அரசு எரிவாயு சிலிண்டருக்கான மானியத் தொகையை வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் செலுத்தும் திட்டத்தை துவக்கும்போது, வசதி படைத்தவர்கள் மானியத்தை விட்டுக் கொடுக்க வேண்டும் என்று பொதுவாக வேண்டுகோள் விடுத்ததே தவிர, வருமான வரி செலுத்துவோர் விவரங்களின் அடிப்படையில் வேண்டுகோள் வைக்கவில்லை. உண்மையிலேயே , வசதி படைத்தவர்கள் நியாய விலைக் கடைகளில் பொருட்களை வாங்குவதை விட்டுத் தர வேண்டுமென்றால் , பொதுவான ஒரு வேண்டுகோளை அரசின் சார்பில் வெளியிடுவதுதான் பொருத்தமாக இருக்குமே தவிர, வருமான வரி செலுத்துவோரின் விவரங்களைப் பெற்று அதன் அடிப்படையில் அவர்களை வலியுறுத்துவது என்பது மக்களின் விருப்பத்திற்கு எதிரான செயல். இதுபோன்றதொரு முயற்சி ஏழை, எளிய, நடுத்தர மக்களை கடுமையாக பாதிக்கும். தமிழ்நாடு அரசின் ஒரே நாடு, ஒரே ரேஷன் என்ற திட்டத்தை எதிர்த்தவர் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர், தற்போதைய முதலமைச்சர். அவ்வாறு எதிர்த்ததற்கான காரணங்களில் முக்கியமான ஒன்று அனைவருக்குமான பொது விநியோகத் திட்டம் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படுவதுதான். ஏனெனில் பிற மாநிலங்களில் இலக்கு சார்ந்த பொது விநியோகத் திட்டம் தான் பின்பற்றப்படுகிறது. இதன்மூலம் முன்னுரிமை பெற்றவர்கள் மட்டுமே பயனடைய முடியும்.

ஆனால் தற்போது தமிழ்நாடு அரசின் உணவுத் துறை எடுக்கும் நடவடிக்கையைப் பார்த்தால், ஒரு வேளை தமிழ்நாடு அரசு அனைவருக்குமான பொது விநியோகத் திட்டம் என்ற நோக்கத்திலிருந்து தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இலக்கு சார்ந்த பொது விநியோகத் திட்டத்திற்கு திசை மாறுகிறதோ என்ற எண்ணம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. பொதுவான வேண்டுகோளின் அடிப்படையில் வசதி படைத்தவர்கள் தாமாக முன்வந்து ரேஷன் பொருட்களை விட்டுத்தர முன்வந்தால் அதில் யாருக்கும் எந்தவிதமான ஆட்சேபணையும் இல்லை. அதே சமயத்தில் வருமானத்தின் அடிப்படையில் பயனாளிகளின் எண்ணிக்கையை குறைத்து அனைவருக்குமான பொது விநியோகத் திட்டத்தின் நோக்கத்தையே சீர்குலைக்கும் முயற்சியில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டால் அதனை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கடுமையாக எதிர்க்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனவே, தமிழ்நாடு முதலமைச்சர் இதில் தனிக் கவனம் செலுத்தி, அனைவருக்குமான பொது விநியோகத் திட்டம் என்பது தொடர்ந்து செயல்படுத்தப்படுவதையும், அரசின் செலவினத்தை மிச்சப்படுத்துவதற்காக பயனாளிகளின் எண்ணிக்கையை வருமானத்தின் அடிப்படையில் குறைத்து இலக்கு சார்ந்த பொது விநியோகத் திட்டமாக மாற்றும் முயற்சி தடுத்து நிறுத்தப்படுவதையும் உறுதி செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். 

click me!