
’எடப்பாடி போயி எலெக்ஷன் வந்தா எங்காளு டாப்பா சி.எம்.ஆயிடுவாரு.’ என்று தி.மு.க.வின் நிர்வாகிகள் நம்பிக்கை காட்டிய காலமெல்லாம் மலையேறிவிட்டது. இப்போது சி.எம். பதவியை குறிவைத்து ஸ்டாலினுக்கு போட்டியாக தினகரன், ரஜினிகாந்த், கமல்ஹாசன் என்று சக்தி வாய்ந்த மனிதர்கள் கணிசமான பேர் வந்து நிற்கிறார்கள். கிட்டத்தட்ட முதல்வர் பதவியானது மியூஸிகல் சேர் போல் ஆகிவிட்ட நிலையில், ஸ்டாலின் தனது கட்சியை முதலில் பலப்படுத்தும் மூவ்களில் இறங்கியுள்ளார்.
அதன் ஒரு நிலையாக தன் கட்சியின் ஒவ்வொரு மாவட்ட நிர்வாகிககளாக சந்திக்க துவங்கியுள்ளார். கோயமுத்தூர், நீலகிரி, திருப்பூர் என்று மேற்கு மண்டலத்தின் முக்கிய மாவட்டங்களை சந்தித்து முடித்திருக்கிறார். கள ஆய்வுக்கு போய்விட்டு வந்த தி.மு.க. நிர்வாகிகளிடம் பேச்சுக் கொடுத்துப் பார்த்தால், தளபதி பழைய மாதிரி இல்லைங்க! ரொம்ப கறாரா, வெற்றி பெற்றே ஆகணுமுன்னு வெறியேறி போய் இருக்கிறார். தலைவரிடம் இருந்த உட்கட்சி ஜனநாயக பேச்செல்லாம் தளபதிட்ட இல்லை! என்று புலம்புகிறார்கள்.
நுங்கம்பாக்கம் டீ கடை ஒன்றில் அவர்களை ஓரங்கட்டி விஷயங்களை கறந்தபோது...”பல முறை கட்சி நிர்வாகிகளின் நடவடிக்கைகளை ஆய்வு செய்திருக்கிறார் தளபதி. அதேபோல்தான் இந்த முறையும் அழைக்கிறார்! என்று நினைத்து வந்தோம். அவரும், கட்சியினருக்கு ஒரு உத்வேகத்தையும், இறங்கி வேலை செய்ய வேண்டும் எனும் பயத்தையும் உருவாக்கும் முகமாக இந்த ஆய்வை வைத்துக் கொள்ளலாம்! என்று தான் நினைத்திருந்தார்.
ஆனால் ஆய்வு தொடங்கிய பின் இரண்டு பக்கமும் நிலை மாறிவிட்டது. காரணம், ஊராட்சி செயலாளர்கள்! எனும் கழக நிர்வாக கட்டமைப்பின் அடியிலிருப்பவர்களை மனம் திறந்து பேச சொன்னார் தளபதி. அவர்கள் கொட்டி தீர்த்துவிட்டார்கள். அப்போதுதான் மாவட்ட செயலாளர்கள், மாநில நிர்வாகிகள் போன்ற பொறுப்புகளில் இருப்பவர்கள் எந்தளவுக்கு கட்சியை வைத்து ஆட்டம் போடுகிறார்கள், பணம் சம்பாதிக்கிறார்கள் என்பதை தளபதியால் புரிந்து கொள்ள முடிந்தது. இதைக் கேட்டு அதிர்ந்தே போய்விட்டார் தளபதி.
கோயமுத்தூர் புறநகர் வடக்கு மாவட்ட செயலாளரான ராமச்சந்திரன் என்பவர் பற்றி கொத்துக் கொத்தாக புகார்களை அள்ளித் தட்டியுள்ளனர் கீழ் நிலை மற்றும் சார்பு அணி நிர்வாகிகள். இவற்றை கேட்டுவிட்டு கொதித்துப்போய் மாவட்ட செயலாளர் அடங்கிய டீமை சந்தித்த தளபதி ‘வெட்கக்கேடாக இருக்கிறது. மாவட்ட செயலாளர், பணம் வாங்கிக் கொண்டு பலருக்கு பதவி அளித்துள்ளார் என்று ஆதாரங்களுடன் புகார் வந்திருக்கிறது. உட்கட்சி நிலையே இவ்வளவு கேவலமாக இருக்கும்போது நான் எப்படி நம் எதிர்கட்சியான ஆளுங்கட்சியை வாய் கிழிய விமர்சிக்க முடியும்?’ என்று கன்னம் சிவக்க பேசினார்.
சில நொடிகள் நிதானித்தவர், பிறகு ‘இதை இப்படியே விட்டால் சரிப்பட்டு வராது. இனி நான் அ.தி.மு.க.வில் இருந்தது போல் சர்வாதிகாரத்தை கையில் எடுக்க வேண்டிதான். அந்தம்மா ஜெயலலிதா இருந்தபோது சர்வாதிகாரம் காட்டி நடந்ததால்தான் அந்த கட்சியில் அத்தனை நிர்வாகிகளும் ஒடுங்கிக் கிடந்தார்கள். மாவட்ட செயலாளர், மாநில நிர்வாகி என்று பதவிக்கு ஏற்ப மரியாதை வழங்காமல் அடிமட்ட தொண்டனோடுதான் அவர்களையும் சேர்த்து நடத்தினார். அவர்களும் அந்தம்மாவின் வார்த்தைகளை பார்த்து பயந்து நடுங்கினார்கள்.
ஆனால் நான் கஷ்டப்பட்டு பதவிக்கு வந்திருக்கிறார்களே! என்று அதற்குரிய மரியாதையை கொடுத்து நடத்தினேன். அதற்கு பலன் கைமேல் கிடைத்துவிட்டது. பணம் வாங்கிக் கொண்டு கட்சி பதவியை விற்றிருக்கும் உங்களை வைத்து நான் எதை சாதிக்க முடியும்? மக்கள் நம்மிடம் பெரியளவில் எதிர்பார்க்கிறார்கள். இப்படியான கிருமி நிர்வாகிகளை நாளைக்கு நான் மக்கள் மன்ற பதவியில் உட்கார வைத்தால் என்ன நடக்கும்? ஊழல்தான் நடக்கும்.
எனவே ஜெயலலிதா போல் சர்வாதிகாரத்தை கையில் எடுக்கப்போகிறேன். வேலை செய்பவனுக்கு மட்டுமே இனி மரியாதை. பதவிக்கெல்லாம் மரியாதை கிடையாது. கழக வளர்ச்சிக்காக வேலை செய்யும் நபர் அடிமட்டத்தில் கிடந்தாலும், அவரை மேலே தூக்கி உட்கார வைப்பேன். இனி கழக தலைமை நினைத்தால்தான் உங்களுக்கென்று அந்தஸ்து, மரியாதை எல்லாம்.’ அப்படின்னு பொங்கி தீர்த்துட்டார்.
தலைவர் என்னதான் கறாராக இருந்தாலும் கூட உட்கட்சி ஜனநாயகத்தை கடைப்பிடித்தார். அவ்வளவு எளிதில் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுத்துவிட மாட்டார். விசாரணை மேல் விசாரணை செய்துவிட்டே நடவடிக்கை பற்றி யோசிப்பார். ஆனால் தளபதியோ ‘நான் சர்வாதிகாரியாகிறேன்.’ என்று சொல்லியிருப்பது தி.மு.க.வின் கட்டமைப்புக்கு சரிப்பட்டு வருமா இல்லையா என்று புரியவில்லை.” என்றார்கள்.
சர்வாதிகாரியாக ஸ்டாலின் மாறுவதை கவனிப்போம்!