
டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்படுவோரை அதிமுக தலைமை கொத்துக்கொத்தாக நீக்கி வருகிறது. இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் பரிதிஇளம்வழுதி இன்று நீக்கப்பட்டுள்ளார்.
திமுகவின் பாரம்பரியத்தில் இருந்து வந்தவரும், திமுகவின் இளம் படைத் தளபதிகளில் ஒருவராகவும் இருந்தவர் பரிதி இளம்வழுதி. திமுகவின் முக்கிய புள்ளிகளில் ஒருவராகவும் இருந்தவர். சென்னை, எழும்பூர் தொகுதியில் அசைக்க முடியாத வேட்பாளராக இருந்து வந்தவர் பரிதிஇளம்வழுதி.
கடந்த 2011 ஆம் சட்டமன்ற தேர்தலின்போது தேமுதிக வேட்பாளரிடம் பரிதிஇளம்வழுதி தோல்வியடைந்தார். அப்போது முதல் திமுகவில் இருந்து ஓரம் கட்டப்பட்டார். திடீரென அவர், ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். இதனைத் தொடர்ந்து அதிமுக செயற்குழு உறுப்பினர் பொறுப்பும் அவருக்கு வழங்கப்பட்டது.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, பிளவுபட்ட அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு மாறினார். அங்கும் நீடித்திருக்கப் பிடிக்காமல், தினகரன் அணி தனியாக பிரிந்தபோது அவருக்கு ஆதரவு கொடுத்தார். இந்த நிலையில், பரிதிஇளம்வழுதி, அதிமுகவில் இருந்து இன்று நீக்கப்பட்டுள்ளார்.
அதிமுகவின் கொள்கை, குறிக்கோள் மற்றும் கோட்பாடுகளுக்கு முரணாக செயல்பட்டு வரும் அதிமுக நிர்வாகிகளை நீக்கி கட்சி தலைமை கடந்த சில நாட்களாகவே அறிவித்து வருகிறது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுகவின் தோல்வி குறித்து, முதலமைச்சர், துணை முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு, தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட பலர்
நீக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி நீக்கப்பட்டுள்ளார். டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டதால் அவரைக் கட்சியில் இருந்து நீக்கி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நடவடிக்கை எடுத்துள்ளனர். தென் சென்னை தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் பலரும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள், இனி அதிமுகவின் பெயரை பயன்படுத்தக்கூடாது என்று எச்சரிக்கப்பட்டும், நீக்கப்பட்டவர்களுடன் அதிமுகவினர் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாதும் என்றும் கட்சி தலைமை கேட்டுக் கொண்டுள்ளது.