தைரியம் இருந்தால் மு.க. ஸ்டாலின் மீது சொத்துக்குவிப்பு வழக்கு போடு... எடப்பாடியாருக்கு ஆ.ராசா பகிரங்க சவால்..!

By Asianet TamilFirst Published Jan 9, 2021, 9:32 PM IST
Highlights

மு.க.ஸ்டாலின் குடும்பத்தில் 58 பேர் சொத்து சேர்த்தாக ஆதாரமற்ற குற்றச்சாட்டை முதல்வர் கூறியுள்ளார். தைரியமிருந்தால் மு.க.ஸ்டாலின் மீது தமிழக அரசு சொத்துக் குவிப்பு வழக்கு தொடரட்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக எம்.பி.யுமான ஆ.ராசா சவால் விட்டுள்ளார்.
 

திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “கடந்த சில நாட்களாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திமுக மீதும் திமுக தலைவர் மீதும் குற்றச்சாட்டுகளை கூறி விவாதத்துக்கு அழைக்கிறார். விவாதம் குறித்து அவருக்கு நான் எழுதிய கடிதத்துக்கு இதுவரை பதிலே இல்லை. சர்க்காரியா, 2ஜி போன்ற நிரூபணம் ஆகாத நீதிமன்றத்தால் புறக்கணிக்கப்பட்ட  குற்றச்சாட்டுகளை முதல்வர் பேசி வருகிறார்.

 
சொத்துக்குவிப்பு வழக்கில் அதிமுக தலைவி ஜனநாயகத்தைப் படுகொலை செய்ததாக தீர்ப்பில் கூறப்பட்டது. ஊழல் கண்காணிப்பு பிரிவு முதல்வருடைய கட்டுபாட்டில் வருகிறது. எங்களுடைய புகார் மனுக்களை அந்த அமைப்பு புறக்கணித்தது. உச்ச நீதிமன்றம் இதைக் கண்டித்தது. நெடுஞ்சாலை ஒப்பந்தம் தொடர்பாக உலக வங்கியின் நிபந்தனைகள் சரிவர கையாளப்படவில்லை என உச்ச நீதிமன்றம் குறை கூறியது. தமிழகத்தில் உண்மையில் சட்டத்தின் ஆட்சி் நடக்கிறதா என்பதே சந்தேகமாக உள்ளது. வேலுமணி மீதான குற்றச்சாட்டை மறுத்து அறிக்கை தயாரித்துள்ள தமிழக அரசு, புகார்தாரர்களான எங்களுக்கு இதுவரை தரவில்லை.
மு.க.ஸ்டாலின் குடும்பத்தில் 58 பேர் சொத்து சேர்த்தாக ஆதாரமற்ற குற்றச்சாட்டை முதல்வர் கூறியுள்ளார். தைரியமிருந்தால் மு.க.ஸ்டாலின் மீது தமிழக அரசு சொத்துக் குவிப்பு வழக்கு தொடரட்டும். முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்யட்டும். எடப்பாடி பழனிசாமிக்கு முன்பே நான் பெரிய ஆள். அவர் அமைச்சராக ஆவதற்கு 10 ஆண்டுகளுக்கு முன்பே மத்திய அமைச்சராக இருந்தவன். அவர் என்னுடன் விவாதிக்க வராவிட்டாலும், யாரேனும் ஒருவரை அனுப்புங்கள். முதல்வர் பழனிசாமி வடிகட்டிய ஒரு முட்டாள்.  நீதிபதி ஒ.பி.ஷைனி 400 பக்கங்களில் கலைஞர் டி.வி.க்கான பணம் குறித்து எழுதியுள்ளார். 1322-ஆம் பக்கத்தில் ராஜா , கனிமொழிக்கு பரிவர்த்தனையில் பங்கு இருக்கின்றதா என்றும் கூறப்பட்டுள்ளது. அதை படித்தறிய துப்பில்லாத முதல்வர் வேனில் ஏறி அவதூறு பரப்புகிறார்.


பொள்ளாச்சி ஜெயராமன் மகனுக்கு பாலியல் சம்பவத்தில் தொடர்பு உள்ளது. ஆனால், அவர் கைது செய்யப்படவில்லை. உண்மைக் குற்றவாளிகள் தப்ப வைக்கப்படுகின்றனர். சசிகலா விடுதலை அதிமுகவின் உட்கட்சி பிரச்னை. திமுகவை மு.க. அழகிரி உட்பட யாராலும் பலவீனப்படுத்த முடியாது” என ஆ.ராசா தெரிவித்தார்.
 

click me!