எம்எல்ஏ, அமைச்சர் பதவி இல்லைன்னா என்ன.? மேயர் பதவி இருக்கே.. காய் நகர்த்தும் திமுக மாஜி அமைச்சர்!

By Asianet TamilFirst Published Oct 28, 2021, 10:12 AM IST
Highlights

சட்டப்பேரவைத் தேர்தலில் நாகர்கோவில் தொகுதியில் பாஜக வேட்பாளர் காந்தியிடம், சுரேஷ் ராஜன் தோல்வியடைந்தார். கட்சி ஆட்சிக்கு வந்தும், தன்னால் சட்டப்பேரவைக்கும் செல்ல முடியவில்லை. அமைச்சரும் ஆக முடியவில்லையே என்ற ஆதங்கம் அவருக்கு மட்டுமல்ல, அவருடைய ஆதரவாளர்களுக்கும் நிறைய இருக்கிறது. 

 விட்டதைப் பிடிக்கும் வகையில் நாகர்கோவில் மேயர் தேர்தலில் தன்னுடைய மனைவியை களமிறக்கிவிட முன்னாள் திமுக அமைச்சர் சுரேஷ் ராஜன் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

 நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை மாநில தேர்தல் ஆணையம் தொடங்கிவிட்டது. டிசம்பர் இறுதியிலோ அல்லது ஜனவரியில் பொங்கல் பண்டிகைக்கு முன்பாகவோ தேர்தல் நடைபெறலாம் என்று கூறப்படுகிறது. மேலும் மேயர், நகராட்சித் தலைவர்களை கவுன்சிலர்கள் மூலம் தேர்ந்தெடுக்கும் நடைமுறை தற்போது உள்ளது. பழையப்படி மக்களே வாக்களித்து தேர்ந்தெடுக்கும்படி அது மாற்றப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. தமிழக அரசின் இந்த முடிவை அறிவதற்கு மாநில தேர்தல் ஆணையம் காத்திருப்பதாகவும் கோட்டை வட்டாரங்களில் தகவல்கள் கசிகின்றன.

இதற்கிடையே நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ள கட்சிகள் தயாராகிவருகின்றன. குறிப்பாக, ஆளுங்கட்சியான திமுகவில் தேர்தலுக்காகக் காத்திருக்கிறார்கள். மேலும் விட்டதைப் பிடிக்கும் வகையில் சில திமுகவினர் தேர்தலை எதிர் நோக்கியிருக்கிறார்கள். அதில், நாகர்கோவிலைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜனும் ஒருவர். 1996, 2006 என இரண்டு முறை கருணாநிதி அமைச்சரவையில் இடம் பெற்றவர் சுரேஷ் ராஜன். 2021 தேர்தலிலும் வெற்றி பெற்று அமைச்சராக இருந்திருக்க வேண்டியவர். அதுவும், சீனியர் அமைச்சர் என்ற அந்தஸ்தும் கிடைத்திருக்கும்.

ஆனால், சட்டப்பேரவைத் தேர்தலில் நாகர்கோவில் தொகுதியில் பாஜக வேட்பாளர் காந்தியிடம், சுரேஷ் ராஜன் தோல்வியடைந்தார். கட்சி ஆட்சிக்கு வந்தும், தன்னால் சட்டப்பேரவைக்கும் செல்ல முடியவில்லை. அமைச்சரும் ஆக முடியவில்லையே என்ற ஆதங்கம் அவருக்கு மட்டுமல்ல, அவருடைய ஆதரவாளர்களுக்கும் நிறைய இருக்கிறது. இந்நிலையில் விட்டதைப் பிடிக்கும் முயற்சியில் சுரேஷ்ராஜன் இறங்கியிருப்பதாக குமரி மாவட்டத் தகவல்கள் அலையடிக்கின்றன. 

தற்போது நாகர்கோவில் மாநகராட்சியாக உள்ளது. ஆனால், இதுவரை தேர்தல் நடைபெறாததால், அந்த மாநகராட்சியின் முதல் மேயர் பதவியைக் கைப்பற்ற பாஜக, காங்கிரஸ் ஆகிய தேசிய கட்சிகள் காத்திருக்கின்றன. பாஜக சார்பில் முன்னாள் நகராட்சித் தலைவர் மீனா தேவ் போட்டியிடுவார் என்று இப்போதே தகவல்கள் சிறகடிக்கின்றன. சட்டப்பேரவைத் தேர்தலில் நாகர்கோவில் தொகுதியை பாஜகவிடம் திமுக பறிகொடுத்ததால், மாநகராட்சியையாவது கைப்பற்றிவிட வேண்டும் என்ற ஆர்வத்தில் இருக்கிறார்கள் உடன்பிறப்புகள். இதே எண்ணத்தில்தான் முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜனும் உள்ளார்.

எனவே, மேயர் தேர்தலில் தன்னுடைய பாரதியைக் களமிறக்கிவிடும் பணிகளை சுரேஷ் ராஜன் முன்னெடுத்துள்ளதாக திமுக வட்டாரங்களில் பேசப்படுகிறது. இதுதொடர்பாக சுரேஷ் ராஜன் திமுக தலைமையிமும் பேசிவிட்டதாகச் சொல்கிறார்கள். இதன் எதிரொலியாக சுரேஷ் ராஜனின் மனைவி பாரதியைத் தற்போது பொது நிகழ்ச்சிகளிலும் அதிகம் காண முடிகிறது. தேர்தலை மனதில் வைத்துதான் இதெல்லாம் நடப்பதாக குமரி உடன்பிறப்புகள் மகிழ்கிறார்கள்.

ஆனால், கன்னியாகுமரியில் காங்கிரஸ் கட்சிக்கு கணிசமான செல்வாக்கு உள்ளது. அக்கட்சியும் மேயர் பதவியை எதிர்பார்க்கும் வாய்ப்புகள் உண்டு. இதையெல்லாம் சமாளித்துதான் சுரேஷ் ராஜன் தன்னுடைய மனைவியை களம் இறக்க முடியும் என்பதே யதார்த்தம்.  சுரேஷ் ராஜன் எண்ணம் ஈடேறுமா?

click me!