குடும்பம் அழிவதை வேடிக்கை பார்க்காதீர்கள். இப்போது நீங்கள் செய்து கொண்டிருக்கும் காரியத்திற்கும், யானை தன் மேல் மண்ணை அள்ளி போட்டுக்கொள்ளும் செயலுக்கும் வித்தியாசம் இல்லை. நீங்கள் இப்படி உங்களுக்குள் சண்டை போட்டுக் கொண்டிருந்தால் அது புதியவர்களுக்கு பாதையை அமைத்து கொடுத்துவிடும் என்பதில் சந்தேகமில்லை.
சசிகலா தொடர்பாக அதிமுகவில் ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே மாறி மாறி கருத்து மோதல் ஏற்பட்டிருக்கும் நிலையில் நீங்கள் இப்படி உங்களுக்குள் சண்டை போட்டுக் கொண்டிருந்தால் அது புதியவர்களுக்கு பாதையை அமைத்து கொடுத்துவிடும் என்பதில் சந்தேகமில்லை என பூங்குன்றன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளரான பூங்குன்றன் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில்;- தானாக முன்வந்து பிறருக்காகவோ அல்லது இறைவனுக்கோ எதனையும் எதிர்பாராமல் சேவை செய்வதற்கு பெயர் தொண்டு. அப்படி எதனையும் எதிர்பாராமல் உழைப்பவனுக்கு பெயர் தொண்டன். எதிர்பார்ப்பில்லாத தொண்டனால் மட்டுமே நல்ல தலைவரை தேர்ந்தெடுக்க முடியும். தொண்டர்களாகிய நீங்கள் நல்ல தலைமை பண்புகளை வளர்த்துக் கொள்ளும் போது தான் உங்களால் நல்ல தலைவனை தேடிக் கொள்ளவும் முடியும். இப்படி இயக்கத்தின் ஆணிவேராக திகழும் 'தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே'.
undefined
தொண்டன் என்பவன் முகத்திற்காக அல்லாமல் கொள்கைகளுக்காக தனது தலைமையை தேர்ந்தெடுக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமை, கழகத்தின் கொள்கைகளுக்கு எதிராக செயல்பட்டால் அவருக்கு ஆதரவாக பேசுவதை விடுத்து, எதிர்த்து தனது கருத்தை சொல்லும் துணிவுடன் இருக்க வேண்டும். தலைமையோ, நிர்வாகியோ தவறு செய்திருப்பின் கொள்கைகளால் மட்டுமே எதிர்த்து நிற்க வேண்டுமே தவிர அதை விடுத்து அவர்களின் கடந்த கால கழகப் பணிகளை எல்லாம் மறந்து தூற்றுதல் என்பது விசுவாசத் தொண்டனுக்கு அழகல்ல. அறிவுமல்ல.
எப்போதும் பதவி மீது காதல் கொள்ளாமல், பணத்தின் மீது ஆசை வைக்காமல் சிறந்த தொண்டனாக பணியாற்ற ஒவ்வொருவரும் ஆவல் கொள்ள வேண்டும். நம்மை விட இயக்கமே பெரிது! கடந்த காலங்களில் தொண்டர்கள் தாங்கள் பின்பற்றும் தலைவர்களை விடவும் அதிகம் தெரிந்தவர்களாய் இருந்தார்கள். தங்கள் நெஞ்சில் வைத்து பூஜித்த, நேசித்த தலைவர்கள் கொள்கையிலிருந்து பிறழும் போது அவர்களை துணிவோடு கேள்வி கேட்டு அவர்களை சிறப்பாக செயல்பட வைத்தார்கள். ஆனால் இன்று தலைவர்கள் உங்களை தொண்டர்களாக மதிக்கிறார்களா? இல்லை நீங்கள்தான் அவர்களுக்கு அறிவுரை சொல்லி வழி நடத்துகிறீர்களா? உங்கள் அறியாமையை அவர்கள் மூலதனமாக பயன்படுத்துகிறார்களோ என்றே நினைக்கத் தோன்றுகிறது.
தொண்டர்களே! நீங்கள் யானை என்பதை நினைவில் கொள்ளுங்கள். யானைக்கு தன் பலம் தெரியாது என்பதை போல இருக்கிறீர்கள். அப்படியே இருந்துவிடாதீர்கள். உங்களை நம்பியே கழகம். இது உங்கள் குடும்பம். குடும்பம் அழிவதை வேடிக்கை பார்க்காதீர்கள். இப்போது நீங்கள் செய்து கொண்டிருக்கும் காரியத்திற்கும், யானை தன் மேல் மண்ணை அள்ளி போட்டுக்கொள்ளும் செயலுக்கும் வித்தியாசம் இல்லை. நீங்கள் இப்படி உங்களுக்குள் சண்டை போட்டுக் கொண்டிருந்தால் அது புதியவர்களுக்கு பாதையை அமைத்து கொடுத்துவிடும் என்பதில் சந்தேகமில்லை.
இணைந்தால் பலம் என்ற நிலை மாறி இணைந்தாலும் பயன் இல்லை என்ற நிலையை நோக்கி உங்கள் பயணம் போய் கொண்டிருக்கிறது. கழகம் என்னும் கோயிலை காக்க புறப்படட்டும் புரட்சித்தலைவரின் போர்ப்படை! வெல்லட்டும் புரட்சித்தலைவியின் தொண்டர் படை!
"வீடு என்னும் கோயிலில் வைத்த
வெள்ளி தீபங்களே
நல்ல குடும்பம் ஒளிமயமாக
வெளிச்சம் தாருங்களே.....
நாளை நமதே நாளை நமதே
தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம்
ஓர் வழி நின்று நேர் வழி சென்றால்
நாளை நமதே!" என பூங்குன்றன் பதிவிட்டுள்ளார்.