இன்னும் திமுகவுக்கு 10 நாள்தான் டைம்.. இல்லன்னா ஸ்டாலின் அரசு முடங்கும்.. அண்ணாமலை பகிரங்க எச்சரிக்கை.

By Ezhilarasan BabuFirst Published Oct 7, 2021, 2:11 PM IST
Highlights

இன்னும் 10 நாட்களில் கோயில்களை திறக்கவில்லை என்றால் அரசு ஸ்தம்பிக்கும் அளவிற்கு எங்கள் வேலைகள் இருக்கும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தமிழக அரசை பகிரங்கமாக எச்சரித்துள்ளார். 

இன்னும் 10 நாட்களில் கோயில்களை திறக்கவில்லை என்றால் அரசு ஸ்தம்பிக்கும் அளவிற்கு எங்கள் வேலைகள் இருக்கும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தமிழக அரசை பகிரங்கமாக எச்சரித்துள்ளார். தமிழகம் முழுவதும் கோயில்களை திறக்க தமிழக அரசுக்கு 10 நாட்கள் கெடு கொடுத்திருக்கிறோம் என்றும், தேவையில்லாமல் இறைநம்பிக்கையின் கை வைக்காதீர்கள் என்றும் அவர் எச்சரித்துள்ளார். கொரோனா தொற்று  காரணமாக ஊரடங்குடன் பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், மக்கள் அதிகம் வரக்கூடிய வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் பக்தர்களுக்கு கோயில்களில் தடைவிதிக்கப்பட்டுள்ளது. 

ஆனால் கோயில்களை அனைத்து நாட்களும் திறக்க வேண்டும் என வலியுறுத்தி பாஜகவினர் அரசுக்கு எதிராக இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை ஸ்ரீ காளிகாம்பாள் திருக்கோவிலின் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டார். அவருடன் கராத்தே தியாகராஜன்,  பாஜக மாநில இளைஞரணி தலைவர் வினோத் செல்வம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். அப்போது பாஜக தொண்டர்கள் சார்பாக அக்னிசட்டி ஏந்தி ஆர்ப்பாட்டம் தொடங்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, திமுக ஆட்சி அமைத்த போது சொன்னதைதான் இப்போதும் சொல்கிறோம், ஒரு எதிர்க்கட்சியாக நல்ல திட்டங்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பதே பாஜகவின் நோக்கம். ஆனால் திமுக தன்னுடைய சித்தாந்தத்தை நம்முடைய பூஜை அறைக்குள் திணிக்க முற்படும் போது மக்கள் போராட்டமாக இது மாறியுள்ளது.

திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது டாஸ்மாக் வேண்டாமென்று போராடியது, ஆனால் ஆளும் கட்சியாக மாறியதும் புயல் வேகத்தில் டாஸ்மாக்கை திறந்து இருக்கிறார்கள். இப்போது கோயில்களுக்கு தடை விதித்திருக்கிறார்கள், தேவைப்படும் போது மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை ஏற்றுக்கொள்வதும், தேவை இவர்களுக்கு இல்லாதபோது மத்திய அரசை மோசமாக விமர்சிப்பதும் வாடிக்கையாகவே வைத்துள்ளனர். கடவுள் இல்லை என்பதுதான் திமுகவில் சித்தாந்தம், அதை மக்கள் மீது திணிப்பது முறையல்ல, தயவுசெய்து இறைநம்பிக்கையில் கை வைக்காதீர்கள். பத்து நாட்கள் மாநில அரசுக்கு நேரம் கொடுத்திருக்கிறோம், இல்லை என்றால் போராட்டம் மட்டுமல்ல அரசே ஸ்தம்பிக்கும் அளவிற்கு எங்கள் வேலை இருக்கும் என பகிரங்கமாக எச்சரித்தார்.  
 

click me!