ஜனாதிபதியும் பிரதமரும் நினைத்தால் தமிழகத்துக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு தர முடியும்.. சொல்கிறார் ஜோதிமணி.!

By Asianet TamilFirst Published Sep 16, 2021, 9:19 PM IST
Highlights

குடியரசுத் தலைவரும் பிரதமரும் நினைத்தால் தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க முடியும் என கரூர் எம்.பி. ஜோதிமணி தெரிவித்துள்ளார்.
 

கரூரில் ஜோதிமணி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “நீட் தேர்வு விஷயத்தில் தமிழக மாணவர்கள் தொடர்ந்து தற்கொலை செய்துகொள்வது வேதனையும் துயரத்தையும் அளிக்கிறது. இனியும் மாணவர்கள் யாரும் தற்கொலை முயற்சிகளில் ஈடுபட கூடாது. ஒரு தேர்வு மட்டுமே வாழ்க்கையைத் தீர்மானித்துவிடாது. வாழ்க்கையில் நிறைய வாய்ப்புகள் உள்ளன. எல்லோருக்கும் ஒளிமயமான எதிர்காலம் அமையும். அதை அமைத்துத் தரவேண்டிய கடமை அரசுக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கும் உள்ளது.
மருத்துவம் படிக்க விரும்பும் தகுதியும் திறமையும் உள்ள மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பை வழங்குவது அரசியல் கட்சிகளின் கடமையாகும். அதற்காகத்தான் நாங்கள் போராடுகிறோம். சட்டப்பேரவையில் நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. கடந்த ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கும் தற்போதைய தீர்மானத்துக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. தற்போது திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் முறைப்படி நிறைவேற்றப்பட்டிருக்கிறது. குடியரசுத் தலைவருக்கும் அனுப்பப்படுகிறது.
குடியரசுத் தலைவரும் பிரதமர் மோடியும் நினைத்தால் தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க முடியும். நீட் தேர்வில் அரசியல் செய்து மாணவர்களின் மரணத்துக்குக் காரணமாக இருப்பதை விட்டுவிட வேண்டும். தவறைத் திருத்திக் கொண்டு தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும். நீட் தேர்வு வினாத்தாள் ரூ.35 லட்சத்துக்கு வெளியே விற்கப்படுகிறது. எனவே, சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் மருத்துவக் கனவு நிறைவேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நீட் தேர்வுக்கு எதிராக அநீதியை எதிர்த்துப் போராட வேண்டும். அதற்கு எதிரான போர்க்குரல்தான் காப்பாற்றும். மரண ஓலம் எதையும் காப்பாற்றாது.” என்று ஜோதிமணி தெரிவித்தார்.
 

click me!