மோடி அரசின் திட்டத்தை பெயர் மாற்றினால் அது உங்கள் திட்டம் ஆகிடுமா.? திமுக அரசை நடிகை குஷ்பு கிழி.!

By Asianet TamilFirst Published Apr 6, 2022, 10:22 PM IST
Highlights

"மத்திய அரசுக்கு எதிராக குரல் கொடுக்கும் திமுகவினர், தங்களுக்கு வருமானம் கிடைக்கும் சுங்கச்சாவடி போன்ற விசயங்களில் மட்டும் குரல் கொடுக்கமாட்டார்கள். கடிதம் மட்டும்தான் கொடுப்பார்களா?" என்று குஷ்பு கேள்வி எழுப்பினார். 

புதிதாக அமைந்த திமுக அரசின் ஹனிமூன் காலம் முடிந்துவிட்டது. இனி திமுகவுக்கு பாஜக பாடம் புகட்டும் என்று நடிகையும் தேசிய செயற்குழு சிறப்பு உறுப்பினருமான குஷ்பு தெரிவித்துள்ளார்.

திமுக மீது அட்டாக்

பாஜகவின் 42-ஆம் ஆண்டு விழாவையொட்டி சென்னை தியாகராயநகரில் அக்கட்சியின் தேசிய செயற்குழு சிறப்பு உறுப்பினர் நடிகை குஷ்பு பாஜக கொடியை ஏற்றிவைத்தார். பின்னர் குஷ்பு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “பாஜக 1980- ஆம் ஆண்டுடில் தொடங்கப்பட்டது. இன்று வரை பொது மக்கள் பாஜக மீது நம்பிக்கையோடு இருக்கிறார்கள். தமிழகத்தில் இன்று எல்லா இடங்களிலும் பாஜக கொடி பறந்துக்கொண்டிருக்கிறது. ஏதாவது வேலை செய்வதாக காட்டிக் கொள்ள வேண்டும் என்று திமுகவினர் நினைக்கின்றனர். அதனால்தான் திமுகவினர் ஆளுநருக்கு எதிராக நாடாளுமன்றத்தில்  வெளிநடப்பு செய்கிறார்கள்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஏன்?

பெட்ரோல், டீசல் விலை உயர்வு என்பது மிகவும் கஷ்டமான விசயம்தான். ஆனால், உலகம் முழுவதுமே பெட்ரோல், டீசல் விலை உயர்கிறது. ரஷ்யா- உக்ரைன் போர் காரணமாக கச்சா எண்ணெய்யின் விலை தொடர்ந்து உயர்ந்துக்கொண்டிருக்கிறது. பொதுவாக எந்தக் கட்சியாக இருந்தாலும் ஆட்சியில் இருக்கும்போது விலையை உயர்த்த கூடாது என்றுதான் நினைப்பார்கள். உலகில் எந்த நாட்டிலும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு பற்றியெல்லாம்  பேசுவதில்லை. இந்தியாவில்தான் இதைப் பற்றி பேசுகின்றனர். உலக அளவில் பொருளாதார மந்தம் உள்ளது. இலங்கையில் பெட்ரோல் விலை குறைவாக இருப்பதாக கூறுகிறீர்கள். ஆனால்,  இந்தியாவில் மக்கள் தொகை மிகவும் அதிகம். 7 ஆண்டுக்கு முன்பு இங்கு வெங்காயம், தக்காளியின் விலை என்ன? ஆனால், இன்று எப்படி இருக்கிறது?

சொத்து வரி உயர்வு தவறு

இந்தியாவின் ஏற்றுமதி தொடர்ந்து அதிகரித்துள்ளது. இந்தியாவில்  வேலை வாய்ப்பும் அதிகரித்திருக்கிறது. புதிய தொழில்கள் தொடங்கப்பட்டு வருகின்றன. ஆளுங்கட்சியாக இருப்பதால் காவல் துறை திமுகவுக்கு சாதகமாக உள்ளது. தமிழக அரசு சொத்து வரியை 150 சதவீதம் உயர்த்தியது தவறு. வரும் 8-ம் தேதி சொத்து வரி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவோம். மத்திய அரசின் திட்டங்களின் பெயர்களை மாற்றிதான் அதை தங்களுடைய திட்டங்களாக திமுக கூறி வருகிறது. மத்திய அரசின் திட்டங்களால்  நல்லது நடந்தால், அதை தங்களுடைய திட்டம் என்று கூறிக்கொள்கிறார்கள். ஆனால், சொத்து வரி உயர்வுக்கு மத்திய அரசை காரணம் சொல்கிறார்கள். 

திமுக ஏன் கப்சிப்?

திமுக தலைமையில் அமைந்த புதிய அரசின் 6 மாத தேனிலவு காலம் முடிந்துவிட்டது, இனி பாஜக திமுகவுக்கு பாடம் புகட்டும்.  பாஜக மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுக்கும். அண்ணாமலை உண்மையைப் பேசுகிறார். அவர் தைரியமாகவும் செயல்படுகிறார். நாட்டுக்கு நல்லது செய்யும்போது பிரச்சினைகள் வருவது இயல்புதான். வட இந்தியாவில் விவசாயிகளின் போராட்டத்தைத் தாண்டி பாஜக வெற்றி பெற்றது. மத்திய அரசுக்கு எதிராக குரல் கொடுக்கும் திமுகவினர், தங்களுக்கு வருமானம் கிடைக்கும் சுங்கச்சாவடி போன்ற விசயங்களில் மட்டும் குரல் கொடுக்கமாட்டார்கள். கடிதம் மட்டும்தான் கொடுப்பார்களா? என்று குஷ்பு கேள்வி எழுப்பினார். 
 

click me!