
தமிழகத்தில் இருந்து வரும் எந்த ஒரு நபரிடம் இருந்தும் அவர் என்ன சாதி என்று பெயரை வைத்து யாரும் கண்டுபிடிக்க முடியாது என்று தருமபுரி திமுக எம்.பி. செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
திராவிட மாடல் என்பது என்ன?
மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைந்த பிறகு ‘திராவிட மாடல்’ என்ற பதத்தை தொடர்ந்து முதல்வர் திமுகவினரும் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் நாடாளுமன்றம் மக்களவையில் தருமபுரி திமுக எம்.பி. செந்தில்குமார், அரசியலமைப்பு (பட்டியலிடப்பட்ட சாதிகள் மற்றும் பழங்குடியினர்) ஆணைகள், 1950 திருத்த மசோதா மீதான விவாதத்தில் பேசினார். அப்போது ‘திராவிட மாடல்’ குறித்து எம்.பி. செந்தில்குமார் விளக்கம் அளித்தார். இதுதொடர்பாக அவர் பேசுகையில், “திராவிட மாடல் என்றால் என்ன என்று பலரும் கேட்கிறார்கள். எனவே, அவற்றைப் பற்றி இங்கே நான் பேச விரும்புகிறேன். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியையும் சேர்த்து 40 எம்.பி.க்கள் இங்கு உள்ளோம். எங்கள் பெயருக்கு பின்னால் சாதிப் பெயர் எதுவும் இல்லை.
சாதியை கண்டுபிடிக்க முடியாது
இதை ஏன் இங்கு வலியுறுத்தி சொல்கிறேன் என்றால், நான் எதிர்நிலையில் இருக்கும் உங்களை பார்த்து ஒரு சவால் விடுகிறேன். அவை என்னவென்றால், நான் முன்னேறிய சாதியை சேர்ந்தவனா? அல்லது மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவனா? அல்லது பழங்குடியைச் சேர்ந்தவனா? என்று உங்களால் அடையாளம் காண முடியுமா? இந்தக் கேள்விக்கு ‘முடியாது’ என்பதே பதிலாக இருக்கும். நான் மட்டும் அல்ல தமிழகத்தில் இருந்து வரும் எந்த ஒரு நபரிடம் இருந்தும் அவர் என்ன சாதி என்று பெயரை வைத்து யாரும் கண்டுபிடிக்க முடியாது. பட்டியல் படுத்தப்பட்ட சாதிகளால் சாதி பெயரை அவர்கள் பெயருடன் போட்டுக்கொள்ள முடியாது. அப்படி என்றால் இதர பிரிவினருக்கு இது ஒரு சலுகைதானே?
திராவிட மாடலுக்கு வெற்றி
ஏனென்றால் ஐயர்கள், ஐயங்கார்கள், மோடிகள், பானர்ஜிகள், நாயுடுக்கள் போன்றோர்கள் தங்கள் சாதி பெயர்களை பின்னால் போட்டுக்கொள்ள முடியும். அதனால் என் கூற்று என்னவென்றால் சாதிப் பெயரை போட்டுக் கொள்வது என்பது ஒரு சலுகை ஆகும். ஆனால், ஒரு நபர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பட்டியல் சாதியினருக்கு இச்சலுகை கிடையாது. இவை எல்லாம் பாகுபாட்டுக்குத்தான் வழி வகுக்கும். எனவே, நான் வலியுறுத்துவது கேட்ட பிறகு இந்தியாவில் யாரேனும் ஒருவர் தன்னுடைய சாதிப் பெயரை மாற்றி இயற்பெயர் மட்டும் வைத்துக்கொண்டால், அது திராவிட மாடலுக்கு கிடைத்த வெற்றியாகும்” என்று செந்தில்குமார் பேசினார்.