மத்திய பல்கலை.களில் நுழைவுத் தேர்வை திரும்பப் பெறுங்கள்... பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!!

Published : Apr 06, 2022, 07:55 PM IST
மத்திய பல்கலை.களில் நுழைவுத் தேர்வை திரும்பப் பெறுங்கள்... பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!!

சுருக்கம்

அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களில் நுழைவுத் தேர்வினை ரத்து செய்ய வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 

அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களில் நுழைவுத் தேர்வினை ரத்து செய்ய வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுக்குறித்து பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், 2022-2023 ஆம் கல்வியாண்டு முதல், பல்கலைக்கழக மானியக் குழுவின் நிதியுதவியுடன் இயங்கும் அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களிலும், பல்வேறு படிப்புகளுக்கான சேர்க்கைகள் தேசிய தேர்வு முகமை நடத்தும் பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு மூலம் மட்டுமே நடைபெறும் என்று பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்துள்ளதையும், பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில், மாநிலப் பல்கலைக்கழகங்கள், தனியார் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் விரும்பினால் மாணவர்கள் சேர்க்கையை நடத்திக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளதையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார். மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வை அறிமுகப்படுத்தியதோடு மட்டுமல்லாமல், உயர்கல்வி மாணவர் சேர்க்கையிலும் நுழைவுத் தேர்வை கொண்டுவரும் ஒன்றிய அரசின் முயற்சி இது என தமிழ்நாடு அரசு கருதுகிறது. மத்திய அரசின் இத்தகைய பிற்போக்குத்தனமான நடவடிக்கை இதனைத் தெளிவாக நிரூபணம் செய்துள்ளது. நீட் தேர்வைப் போலவே இந்த பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வும், நாடு முழுவதும் உள்ள பல்வேறு பள்ளிக் கல்வி முறைகளை ஓரங்கட்டி, பள்ளிகளில் ஒட்டுமொத்த மேம்பாடு சார்ந்த நீண்ட காலக் கற்றல் முறைகளை வெகுவாகக் குறைத்து மதிப்பிட வழிவகுப்பதோடு, மாணவர்கள் தங்களது நுழைவுத் தேர்வு மதிப்பெண்களை அதிகரிக்க பயிற்சி மையங்களைச் சார்ந்திருக்கும் ஒரு சூழலை ஏற்படுத்திவிடும் என்பதில் ஐயமில்லை என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு (NCERT)  பாடத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்ட எந்தவொரு நுழைவுத் தேர்வும், நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலப் பாடத்திட்டங்களில் படித்த  மாணவர்கள் அனைவருக்கும் சமமான வாய்ப்பினை வழங்கிடாது என்பதை மீண்டும் தான் வலியுறுத்துவதாகக் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், பெரும்பாலான மாநிலங்களில், மொத்த மாணவர்களில் 80 விழுக்காட்டிற்கும் அதிகமான மாணவர்கள் மாநிலப் பாடத்திட்டங்களில் பயின்று வருபவர்கள் என்றும், இந்த மாணவர்கள் பெரும்பாலும் விளிம்புநிலைப் பிரிவினரைச் சேர்ந்தவர்களாவர் என்றும் தெரிவித்துள்ளார். எனவே, NCERT பாடத்திட்ட அடிப்படையிலான நுழைவுத் தேர்வு, மத்தியப் பல்கலைக்கழகங்களில் சேருவதற்குத் தகுதியான பெரும்பான்மையினருக்கு பாதகமான நிலையை ஏற்படுத்துவதோடு, இந்தச் சூழ்நிலை நம் நாட்டிலுள்ள பல்வேறு மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் அவற்றின் இணைப்புக் கல்லூரிகளில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கையை வெகுவாகக் குறைக்கும் என்றும் தனது கடிதத்தில் முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். நீட் தேர்வைப் போலவே, பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வும், கிராமப்புற ஏழை மாணவர்கள் மற்றும் சமூகத்தில் நலிவடைந்த மாணவர்களின் நலன்களுக்கு எதிராக இருக்கும் என்பதோடு, மாணவர்களுக்கான பயிற்சி மையங்கள் மேலும் புற்றீசல் போன்று வளர மட்டுமே இது சாதகமாக அமையும் என்று தமிழக மக்களிடையே அச்சம் எழுந்துள்ளதாகவும் முதலமைச்சர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு முறையினைப் பின்பற்றுவதற்கு, பல்கலைக்கழக மானியக் குழு கொண்டுள்ள மறைமுக அழுத்தம், மத்தியப் பல்கலைக்கழகங்கள் அல்லாதவற்றின் மீது மாணவர்களின் சேர்க்கையை மையப்படுத்தும் செயல்முறையை இன்னும் வலிமையாக்கும் என்று தாங்கள் கருதுவதாகக் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், காலப்போக்கில் இது NCERT பாடத்திட்டத்தை ஏற்றுக்கொள்ளும் விலையுயர்ந்த பள்ளிகளைத் தேர்வுசெய்ய மாணவர்களைத் தள்ளுவதன் மூலம், மாநிலப் பாடத்திட்ட அடிப்படையிலான பள்ளிக் கல்வி முறையைக் குறைத்து மதிப்பிட வழிவகுக்கும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களுக்கும் CUET-ஐக் கட்டாயமாக்கும் இந்த நடவடிக்கை, மாநில அரசுகளின் பங்கினையும், உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கையில் பள்ளிக் கல்வி முறையின் முக்கியத்துவத்தையும் ஓரங்கட்ட முயற்சிக்கும் மத்திய அரசின் தற்போதைய போக்கு மற்றொரு விரும்பத்தகாத நடவடிக்கை என்றே தாங்கள் கருதுவதாகக் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், மேற்குறிப்பிட்ட பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கையை உடனடியாகத் திரும்பப் பெற்றிட வேண்டுமென்று பிரதமரை கேட்டுக் கொண்டுள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தேமுதிக யாருடன் கூட்டணி? 'முடிவெடுத்து விட்டேன்'.. ஆனால்?? சஸ்பென்ஸ் வைத்த பிரேமலதா! முக்கிய அறிவிப்பு!
ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளில் மத்திய பட்ஜெட் தாக்கல்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!