"புரோக்கர் வேலை செய்ய நான் அரசியலுக்கு வரவில்லை" ... " ஓபிஎஸ் துரோகி".. போட்டு பொளக்கும் கருணாஸ்.

Published : Apr 06, 2022, 07:30 PM IST
"புரோக்கர் வேலை செய்ய நான் அரசியலுக்கு வரவில்லை" ... " ஓபிஎஸ் துரோகி".. போட்டு பொளக்கும் கருணாஸ்.

சுருக்கம்

அரசியல் என்பது புலி வாலை பிடித்த கதை, எனவே அதை எல்லாம் அவ்வளவு எளிதாக விட்டுவிட முடியாது, மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் நான் அரசியலுக்கு வந்தேன் . 

புரோக்கர் வேலை செய்ய தான் அரசியலுக்கு வரவில்லை என்றும் அதேநேரத்தில் அரசியல் என்பது புலிவால் பிடித்த கதை என்றும் முக்குலத்தோர் புலிப்படை ஒருங்கிணைப்பாளர் கருணாஸ் தெரிவித்துள்ளார். ஓ பன்னீர்செல்வம் ஒரு துரோகி என்றும் அவர் இதுவரை முக்குலத்தோர் சமுதாயத்திற்கு எதுவும் செய்யவில்லை என்றும் அவர் விமர்சித்துள்ளார். முக்குலத்தோர் புலிப்படை என்ற அமைப்பை நிறுவி அதை தலைமையேற்று நடத்தி வருகிறார் நடிகர் கருணாஸ். சினிமா துறையிலிருந்து அரசியலுக்கு வந்தது முதல்  மக்கள் ரசிக்கும் படி பேசினாரோ இல்லையோ ஆனால் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசி  அடிக்கடி சிக்கலில் மாட்டிக் கொள்ளும் அரசியல்வாதியாகவே அவர் இருந்து வருகிறார்.

எதையும் வெளிப்படையாகப் பேசி சர்ச்சைக்கு ஆளாகும் நபராகவும் கருணாஸ் இருந்து வருகிறார். முக்குலத்தோர் புலிப்படை என்ற கட்சியை நிறுவி அதன்மூலம் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்துவந்தார் கருணாஸ், ஆனால் செல்வி ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுக கூட்டணியில் இருந்து கழற்றிவிடப்பட்டார் அவர்.  அக்கட்சியின் தலைமையிலான ஓபிஎஸ் இபிஎஸ்சை அவர் கடுமையாக விமர்சித்ததே அதற்கு காரணம் என்பது அனைவரும் அறிந்ததே. இதனால் அரசியலில் இருக்கும் இடம் தெரியாமல் போனார் கருணாஸ் என்றே சொல்லலாம். ஒரு கட்டத்தில் அரசியலில் கைவிடப்பட்ட கருணாஸ் அரசியலை விட்டு ஒதுங்குவதாகவும்  கூறியிருந்தார். அது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. படம் நடிப்பதில் பிசியாகி விட்டதால் அரசியலில் இருந்து சற்று ஒதுங்கி இருக்க முடிவு செய்திருப்பதாகவும் அவர் கூறப்பட்டது.

இந்நிலையில் வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு விவகாரத்தில் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. அந்த தீர்ப்பை வரவேற்று கருணாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கை பாமகவினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் தனது அரசியல் நிலைப்பாடு குறித்தும் தமிழக அரசியல் நிலவரம் குறித்தும் கருணாஸ் வார இதழ் ஒன்றுக்கு மனம்திறந்த பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- வன்னிய மக்கள் அவர்களது உரிமைகளை கேட்டு பெறுவதற்கு உரிமை இருக்கிறது, அதே போலத்தான் எங்களது சமுதாய  மக்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கேட்பதற்கு எனக்கும் முழு உரிமை உள்ளது. அதனால் சமூகநீதி சார்ந்த அனைவருக்குமான உரிமையை பெற்று எடுக்க வேண்டிய சட்ட போராட்டத்தை தான் நான் கையில் எடுத்துள்ளேன் என தெரிவித்துள்ளார்.

ஜெயலிதா மரண விசாரணையின்போது விசாரணை ஆணையம் அமைக்கக் கோரிய ஓபிஎஸ், இப்போது சசிகலா மீது தனக்கு எந்தவித சந்தேகமும் இல்லை என கூறியிருக்கிறாரே என எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்து அவர், இன்னும் பத்து வருடங்கள் கழித்து அவரை இப்படி சொல்ல சொல்லுங்கள், மொத்தத்தில் நியாயம் தர்மம் எதுவுமில்லாத மனிதர் ஓபிஎஸ் என்பது பொது மக்களுக்கு தெரியும். அவர் நேர்மை, விசுவாசம், நம்பிக்கை இல்லாத ஒரு அரசியல் வியாபாரி, தென்மாவட்டத்தில் உள்ள முக்குலத்தோர் சமுதாயம் பரம்பரை பரம்பரையாக அதிமுகவுக்கு தான் வாக்களித்துள்ளனர். எம்ஜிஆருக்கு பிறகு ஜெயலலிதா வந்த பிறகும் முக்குலத்தோர் சமுதாயத்திற்கும் அதிமுகவுக்குமான உறவு வலுவாக இருந்தது. திருநெல்வேலியில் கருப்பசாமிபாண்டியன் தலைமையில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் பேசிய ஜெயலலிதா, பிறப்பால் நான் பாப்பாத்தி ஆனால்  குணத்தால் நான்  மறத்தி  என்று கூறினார்.

ஆனால் தற்போதுள்ள அதிமுக தலைமை முக்குலத்தோர் சமுதாயத்தை புறக்கணித்துவிட்டது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் தான் ஆனால் அவர் ஒரு துரோகி, இதுவரை தான் சார்ந்த சமுதாயத்திற்காக எதையுமே அவர் செய்ததில்லை, ஒரு சமுதாயத்தை சேர்ந்த ஒருவர் அமைச்சராக இருக்கிறார் என்றால் அவர் சார்ந்திருக்கும் மக்களின் பிரச்சனைகளை அரசுக்கு எடுத்துச் சொல்லி அந்த சமுதாய மக்களின் கல்வி வேலைவாய்ப்பு உள்ளிட்ட முன்னேற்றத்திற்காக பாடுபடுவர், தனது முக்குலத்தோர் சமுதாயத்துக்காக ஓபிஎஸ் என்ன செய்திருக்கிறார்? ஏன் பொதுமக்களுக்கே கூட அவர் என்ன செய்திருக்கிறார்? இதுவரை 140 படங்கள் நான் நடித்து இருக்கிறேன், 5 வருடமாக எம்எல்ஏவாக எழுந்திருக்கிறேன் ஆனால் இதுவரை எனக்கு ஒரு சொந்த வீடு கிடையாது. இருந்த வீட்டை சினிமா எடுத்து நஷ்டம் அடைந்ததால் விற்றுவிட்டேன். அரசியலை தொழிலாக பார்த்திருந்தால் இந்நேரத்திற்கு கட்டப்பஞ்சாயத்து, ரியல் எஸ்டேட், கல்குவாரி என வசதியாக வாழ்ந்திருப்பேன். 

அரசியல் என்பது புலி வாலை பிடித்த கதை, எனவே அதை எல்லாம் அவ்வளவு எளிதாக விட்டுவிட முடியாது, மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் நான் அரசியலுக்கு வந்தேன் . இதுவரை எவரிடமும் நான் பணம் வசூல் செய்து கட்சி நடத்தவில்லை,  என் சொந்த கைக்காசு போட்டு தான் கட்சியை நடத்தி வருகிறேன்,  அரசியல் என்றால் பொய் புரட்டு என்றாகிவிட்டது,  லஞ்சம் கொடுத்தால்தான் காரியம் நடக்கிறது, இங்கே பணத்தை வாங்கி அங்கே கொடுக்கிற புரோக்கர் வேலை செய்வதற்காக தான் அரசியல் வரவில்லை, அதனால்தான் கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பே நான் தேர்தலில் நிற்கப் போவதில்லை என்று அறிவித்தேன். இப்போது திரைத்துறையில் நான் என்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டேன். நான் ஒன்றும் லெட்டர் பேட் அமைப்பு கிடையாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!