
நடிகர் கமல் ஹாசன் அரசியலுக்கு வந்தால் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்படுவார் என்றும், அப்பா ஒரு முடிவை எடுத்தால் அது சரியானதாகத்தான் இருக்கும் என்றும் நடிகை ஸ்ருதி ஹாசன் கூறியுள்ளார்.
அரசியலில் நுழைய போவதாக நடிகர் கமல் ஹாசன் கூறி வருகிறார். அண்மை காலமாக, சமூகம் குறித்து பல்வேறு விஷயங்கள் குறித்து அவர் கருத்து தெரிவித்து வருகிறார்.
நடிகர் ரஜினிகாந்த், அரசியலுக்கு விரைவில் வருவதாக தெரிவித்து வருகிறார். இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் செய்திகள் வெளியாகின்றன.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மணிமண்டபம் திறப்பு விழா அண்மையில் நடத்தப்பட்டது. விழாவில் பேசிய அவர், அரசியலில் வெற்றி பெற சினிமா புகழ் மட்டும் போதாது என்றும் அதற்கு மேலே ஏதோ ஒன்று தேவை என்றும் கூறினார்.
அது மக்களுக்கு மட்டும்தான் தெரியும் என்றும் ஒருவேளை கமல் ஹாசனுக்கும் அது தெரிந்திருக்கும் என்றார். ஆனால் சத்தியமாக எனக்கு தெரியாது என்று கூறினார். அதை நான் கேட்டால் கமல் கூறமாட்டார் என்றும் இரண்டு மாதங்களுக்கு முன்பு கேட்டிருந்தால் கூறியிருப்பாரோ என்னவோ என்று அப்போது கூறியிருந்தார்.
ரஜினியின் இந்த பேச்சுக்கு பதிலளிக்கும் வகையில் கமல், வார பத்திரிகை ஒன்றில் பேட்டி அளிக்கும்போது, வெற்றியின் உண்மையான நோக்கம் மக்களுக்கு நல்ல ஆட்சியை வழங்குவது என்றும் அது நடக்கவில்லை என்றால் தேர்தலில் வெற்றி பெறுவது அர்த்தமற்றதாகும் என்றும் கமல் கூறியுள்ளார்.
கமல், அரசியலுக்கு வருவது குறித்த செய்திகள் வெளி வரும் நிலையில், அவரின் மகள் ஸ்ருதி ஹாசன், சென்னை, அண்ணா நகரில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், எனது தந்தை ஒரு முடிவை எடுத்தால் அது சரியானதாகத்தான் இருக்கும் என்று கூறினார். தனது தந்தை அரசியலில் ஈடுபட்டால் மிகவும் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்படுவார் என்றும் கூறினார்.
மேலும், அப்பாவுக்கு எப்போது என்னுடைய சப்போர்ட் இருக்கும் என்றும் அப்பாவுக்கு எப்போதும் துணையாக இருப்பேன் என்றும் ஸ்ருதி ஹாசன் கூறினார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஸ்ருதி ஹாசன் செய்தியாளர்களிடம் பேசும்போது, நடிகர் கமல் ஹாசனுக்கு ஆளுமைத் திறன் அதிகம் என்று கூறியிருந்தார்.