
திண்டுக்கல்
கருணாநிதியின் உடல்நிலை, செயல்படுகின்ற அளவுக்கு முன்னேறி வருவதால் மு.க.ஸ்டாலின் செயல்படாத தலைவர் ஆகிவிடுவார் என்று பாராளுமன்ற மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கிண்டலடித்து கூறியுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரில் பாராளுமன்ற மக்களவைத் துணை சபாநாயகர் தம்பிதுரை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அதில், “அதிமுக மீது பாசம் வைத்து, ஜெயலலிதாவின் ஆட்சி தொடர வேண்டும் என்ற எண்ணம் மக்களிடம் நிலையாக இருக்கிறது. அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது என்று மக்கள் கருதுகிறார்கள்.
எதிர்க் கட்சியினர் வேண்டுமென்றே தவறான பிரச்சாரம் செய்து மக்களை திசை திருப்புவது கண்டிக்கத்தக்கது.
தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. மக்கள் பாராட்டுகின்ற ஆட்சி நடந்து வருகிறது.
அதிமுகவை குறை சொல்வதும், ஆட்சி கவிழ்ந்துவிடும் என்றும் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சொல்லிக் கொண்டிருக்கிறார். அவர் சொல்லிக் கொண்டு இருப்பாரே தவிர வேறு எதுவுமே நடைபெறாது.
மு.க.ஸ்டாலின் சொல்வதில் எதுவும் உண்மையில்லை. ஆட்சியை யாராலும் கவிழ்த்து விடமுடியாது. கருணாநிதியின் உடல்நிலை, செயல்படுகின்ற அளவுக்கு முன்னேறி வருவதால் மு.க.ஸ்டாலின் செயல்படாத தலைவர் ஆகி விடுவார்.
இரட்டை இலை சின்னம் எங்களுக்குதான் கிடைக்கும். இதுதொடர்பான அறிவிப்பு இன்னும் ஓரிரு தினங்களில் வெளிவர வாய்ப்பு உள்ளது.
இந்த அரசு தொடர வேண்டும் என்றும், ஜெயலலிதா அறிவித்த நலத்திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்றும் மக்கள் விரும்புகின்றனர். ரூ.1 இலட்சத்து 76 ஆயிரம் கோடியை வீணடித்து உலக அளவில் தமிழகத்துக்கு அவமானத்தை ஏற்படுத்திய, 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் விரைவில் தீர்ப்பு வரப்போகிறது. இதில் யார் தவறு செய்து இருந்தார்களோ, அவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது” என்று அவர் கூறினார்.