நான் எந்த கட்சிக்கு போனாலும் மக்கள் எனக்கு வாக்களிப்பார்கள்.. தில்லாக பேசும் குஷ்பு..

By Ezhilarasan BabuFirst Published Apr 1, 2021, 4:33 PM IST
Highlights

ஆ. ராசா முதல்வரின் தாயாரை இழிவாக பேசியதை வைத்து நாங்கள் அனுதாப ஓட்டுகளை சேகரிக்கவில்லை, திமுக கட்சியே பெண்களை இழிவாக பேசக்கூடிய கட்சி என்பதை மக்களிடம் உணர்த்தி வருகிறோம்.

நான் எந்த கட்சியில் இருந்தாலும் மக்களுக்காக சேவைகளை செய்வேன், மக்கள் என்னை நம்பி வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளதாக ஆயிரம் விளக்கு தொகுதி அதிமுக கூட்டணி பாஜக வேட்பாளர் குஷ்பு தெரிவித்துள்ளார். 

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் குஷ்பு நாள்தோறும் தவறாமல் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்து வருகிறார். இந்த நிலையில் இன்று ஆயிரம் விளக்கு குடிசை மாற்று வாரியம் பகுதிகளுக்கு வீதி வீதியாக சென்று துண்டு பிரசுரங்கள் விநியோகித்து வாக்கு சேகரித்தார். தொகுதி மக்களை சந்தித்த குஷ்பு ஆயிரம் விளக்கு தொகுதிக்கான தேர்தல் வாக்குறுதிகளையும் வெளியிட்டார்.  தொடர்ச்சியாக மக்களிடம் சென்று வாக்கு சேகரித்த குஷ்புவிற்கு சிறிது உடல்நிலை சரியில்லாத நிலையிலும் அவர்  இறுதிகட்ட பிரச்சாரத்தை செய்து வருகிறார். இன்று ஆயிரம் விளக்கு தொகுதிக்கு உட்பட்ட கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் பகுதியில் உள்ள மக்களை சந்தித்து வாக்குகளைச் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், 

எனது உடல்நிலை சரியில்லை என்றாலும் தொடர்ச்சியாக மக்களிடம் சென்று எங்கள் கொள்கையை கூறி வாக்குகளை சேகரித்து வருகிறேன். நான் ஒருபோதும் சோர்ந்துபோக மாட்டேன். ஆ. ராசா முதல்வரின் தாயாரை இழிவாக பேசியதை வைத்து நாங்கள் அனுதாப ஓட்டுகளை சேகரிக்கவில்லை, திமுக கட்சியே பெண்களை இழிவாக பேசக்கூடிய கட்சி என்பதை மக்களிடம் உணர்த்தி வருகிறோம். மேலும் நான் எந்த கட்சியில் இருந்தாலும் மக்களுக்காக சேவை செய்ய வந்துள்ளேன் மக்கள் எனக்கு தொடர்ந்து ஆதரவு அளிப்பார்கள். மக்கள் என்னை நம்பி வாக்களித்தால் நான் அவர்களுக்கு அனைத்து சேவைகளையும் செய்வதற்கு தயாராக இருக்கிறேன். 

இதேபோல் நேற்று ஆயிரம் விளக்கில் பிரச்சாரம் செய்த குஷ்பு, அதிமுக, பாஜகவை எதிரி எனக்கூறும் திமுக மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் மக்களுக்கு சென்றடைவதை திமுகவினர் தடுப்பதாக சாடினார். தொடர்ந்து பேசிய அவர் பெண்களை அவமானபடுத்துவதும், இழிவாக பேசுவதும், திமுகவின் அடிப்படை கொள்கை என்றும், அதனால் தான் திமுகவில் இருந்து வெளியே வந்ததாகவும் குஷ்பு குற்றம்சாட்டினார். 

 

click me!