
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவிட்டால் கூவத்தூரில் நடந்தவற்றை விளக்கம் அளிக்க தயாராக உள்ளேன் என்று திருவாடனை எம்.எல்.ஏ. கருணாஸ் கூறியுள்ளார்.
கடந்த 16 ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் முக்குலத்தோர் புலிப்படையைச் சேர்ந்தோர் நடத்திய ஆர்ப்பாட்டத்தின்போது, முதலமைச்சர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் பற்றி எம்.எல்.ஏ. கருணாஸ் அவதூறாக பேசியதை அடுத்து போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஐ.பி.எல். போட்டியின்போது அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் கருணாஸ் மீது வழக்கு போடப்பட்டது.
இந்த நிலையில், கருணாசுக்கு இந்த இரண்டு வழக்குகளில் இருந்தும் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் அளித்தது. அதனைத் தொடர்ந்து வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கருணாஸ் இன்று காலை ஜாமினில் வெளியே வந்தார்.
சிறையில் இருந்து வெளியே வந்த கருணாஸ், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், காழ்ப்புணர்ச்சி காரணமாகவும், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு பற்றி பேசியதற்காகவும் என் மீது பொய் வழக்கு புனையப்பட்டு இருக்கிறது.
எந்த நிலை வந்தாலும் என்னுடைய முக்குலத்தோர் சமுதாயத்தில் உள்ள சந்ததியினர் இந்த மண்ணிலே தொடர்ந்து வாழ்வதற்கு இதுபோன்று ஆயிரம் வழக்குகளை நான் சந்திக்க தயாராக இருக்கிறேன். என் வழக்கில் உண்மை நின்றது நீதி வென்றது என்று எம்.எல்.ஏ. கருணாஸ் கூறினார்.