நீதிமன்றத்தை அவமதிக்கும் எச்.ராஜா பேச்சு! எதிர்ப்பாராத கருத்து கூறி அதிர்ச்சி கொடுத்த உயர்நீதிமன்றம்!

By manimegalai aFirst Published Sep 29, 2018, 3:36 PM IST
Highlights

நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் பேசியதாக எச்.ராஜா மீது அவமதிப்பு  வழக்குத் தொடர, அவரை அழைத்து அரசு தலைமை வழக்கறிஞர் விளக்கம் கேட்க வேண்டிய அவசியமில்லை என சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் பேசியதாக எச்.ராஜா மீது அவமதிப்பு  வழக்குத் தொடர, அவரை அழைத்து அரசு தலைமை வழக்கறிஞர் விளக்கம் கேட்க வேண்டிய அவசியமில்லை என சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் நடந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின்போது  உயர் நீதிமன்றத்தையும், போலீஸ் அதிகாரிகளையும் கடுமையாக விமர்சித்துப் பேசியதாக எச்.ராஜா மீது திருமயம் போலீஸார் பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து எச்.ராஜா மீது உயர் நீதிமன்ற நீதிபதிகள் சி.டி.செல்வம், எம்.நிர்மல்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு தாமாக முன்வந்து அவமதிப்பு வழக்கு பதிவு செய்துள்ளது. மேலும் இதுதொடர்பாக எச்.ராஜா அக்டோபர் 22-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

இவ்வாறு தாமாக முன்வந்து அவமதிப்பு வழக்கு பதிவு செய்ய தலைமை நீதிபதிக்கு மட்டுமே அதிகாரம் உள்ளதாகவும், பிற நீதிபதிகள் வழக்குத் தொடர அதிகாரம் இல்லை எனவும் எச்.ராஜா தரப்பில் தலைமை நீதிபதி வி.கே.தஹில ரமானி முன்பாக  முறையிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே, தந்தை பெரியார் திராவிடர் கழக காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் கண்ணதாசன், எச்.ராஜா மீது நீதிமன்ற அவமதிப்பு மனுவை தாக்கல் செய்தார்.  இந்த மனு விசாரணைக்கு உகந்ததா, இல்லையா என்பது குறித்து ஒப்புதல் அளிக்க அரசு தலைமை வழக்கறிஞர் விஜய்நாராயணுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மனுவை பரிசீலித்த அரசு தலைமை வழக்கறிஞர், இதுகுறித்து அக்டோபர் 3-ம் தேதி மாலை 4.30-க்கு எச்.ராஜா நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என நோட்டீஸ் பிறப்பித்துள்ளார்.

இந்நிலையில், மனுதாரர் கண்ணதாசன் தாக்கல் செய்துள்ள மற்றொரு மனுவில், ‘எச்.ராஜாவை அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் நேரில் அழைத்து விளக்கம் கோர வேண்டிய அவசியமில்லை. எச்.ராஜாவுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கு போதுமான ஆதாரங்கள் இருப்பதால் அவரிடம் விளக்கம் கேட்காமலேயே நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர ஒப்புதல் அளிக்க அரசு தலைமை வழக்கறிஞருக்கு உத்தரவிட வேண்டும்’ என  கோரியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை, நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு நடந்தது. அப்போது நீதிபதி, ‘‘நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்வது குறித்து  ஒப்புதல் வழங்கலாமா, வேண்டாமா என்பது குறித்து மட்டுமே அரசு தலைமை வழக்கறிஞர் முடிவு செய்ய வேண்டும். நீதிமன்ற அவமதிப்புக்கு உள்ளானவரை நேரில் அழைத்து விளக்கம் கேட்க வேண்டிய அவசியம் இல்லை’’ என கருத்து தெரிவித்தார்.

மேலும் இதுதொடர்பாக அரசு தலைமை வழக்கறிஞர் விளக்கம் அளிக்க உத்தரவிட்டு  விசாரணையை வரும் 8-ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

click me!