Mr ஸ்டாலின் முடிஞ்சா பாருங்க.. இல்லன்னா போலீஸ் மந்திரி பதவியை ராஜினாமா பண்ணுங்க.. அட்வகேட் கிருஷ்ணமூர்த்தி.

By Ezhilarasan BabuFirst Published Jan 22, 2022, 11:28 AM IST
Highlights

ஜல்லிக்கட்டு போட்டியை எடுத்துக்கொண்டால் அங்கு ஒருவர் கூட முக கவசம் அணிய வில்லை, சமூக இடைவெளியை கடைபிடிக்கவில்லை அப்படி என்றால் அமைச்சர் மூர்த்தி மீது வழக்கு போடுவார்களா? இல்லையென்றால் மதுரை மாவட்ட ஆட்சியர் அல்லது மதுரை காவல் துறை மீது வழக்கு போடுவார்களா? ஒரு மாணவர் மாஸ்க் அணியாமல் சென்றிருக்கிறார் அவ்வளவுதான், அது ஒரு விதி மீறல் அவ்வளவுதான், அது என்ன பெரிய குற்றமா?

முதல்வர் ஸ்டாலின் அவர்களே முடிந்தால் பாருங்கள் இல்லையென்றால் காவல்துறை மந்திரி பதவியை ராஜினாமா செய்யுங்கள் என வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார். அதற்கான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. சென்னை சட்டக்கல்லூரி மாணவர் அப்துல் ரஹீம் என்பவர் முககவசம் அணியாமல் சென்றதற்காக கொடுங்கையூர் போலீசார் காவல் நிலையத்தில்  வைத்து அம்மாணவரை தாக்கியுள்ள வீடியோ வெளியாகி உள்ள நிலையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

பத்தாண்டுகள் கழித்து திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்துள்ளது அரசு எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் பாராட்டப்பட்டு வருகிறது. ஆனால் இதுவரை சட்டம் ஒழுங்கு பிரச்சினை என்பதே திமுக அரசுக்கு பெரும் சவாலாக இருந்து வருகிறது. அதற்காக தமிழக காவல்துறை டிஜிபி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். ஆனால் போலீஸ் துறை மீதான விமர்சனங்கள் எதிர்க்கட்சியினர் வலுவாக முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில் கொரோனா விதிமுறைகள் முறையாக கடைபிடிக்க வேண்டும் என தொடர்ந்து அரசு சார்பில் எச்சரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை கொடுங்கையூர் போலீசார் சட்டக்கல்லூரி மாணவர் அப்துல் ரஹீம் என்பவர் மும கவசம் அணியவில்லை என்பதற்காக அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று சரமாரியாக அடித்து உதைத்துள்ளார். அதற்கான வீடியோ காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

Latest Videos

நேற்று முன்தினம் சென்னை கொடுங்கையூர் போலீசார் எம். ஆர் நகர் சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வியாசர்பாடி புது நகரை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவர் அப்துல் ரஹீம் முக கவசம் அணியாமல் வந்ததாக தெரிகிறது. அப்போது அவருக்கு அபராதம் விதித்தபோது அத்தொகையை செலுத்த மறுத்ததுடன் காவலர் உத்தர குமார் என்பவரின் கன்னத்தில் அறைந்ததாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக கைது செய்யப்பட்ட அப்துல் ரஹீமை காவல் நிலையத்தில் வைத்து போலீசார் தாக்கியதாகவும் பின்னர் தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும், முகக் கவசம் அணிந்து வந்த தன்னை முகக்கவசம் அணியவில்லை என கூறி அபராதம் கேட்டதாகவும், சென்னை மாநகர காவல் ஆணையரிடம் புகார் செய்தார்.

அதேபோல் மாணவனை காவல்நிலையத்தில் போலீசார் சரமாரியாக தாக்கும் வீடியோ ஒன்று வெளியாகி போலீசார் செய்த அட்ராசிட்டி வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதாவது போலீசார் மாணவனை வழிமறித்து தாக்கியதுடன், காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அவரது ஆடைகளை களைந்து நிர்வாணப்படுத்தி முகத்தில் சிறுநீர் கழித்ததாகவும் கூறப்படுகிறது. விசாரணைக்கு அழைத்து சென்று இரவு முழுவதும் காவல் நிலையத்தில் வைத்து பூட்ஸ் காலால் மார்பில் தன்னை போலீசார் எட்டி எட்டி உதைத்ததாகவும்,  போலீசார் தன்னை தாக்கி பீரோவில் மோதியதில் கண்ணில் காயம் ஏற்பட்டு தையல் போடப்பட்டுள்ளது என்றும் மாணவர் ரஹீம் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.  காவல்துறையின் இந்த செயலை பலரும் வன்மையாக கண்டித்து வருகின்றனர். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு,  மாஸ்க் அணியாத சட்டக்கல்லூரி மாணவர் அப்துல் ரஹீமை கொடுங்கையூர் போலீசார் தாக்கி முகத்தில் சிறு நீர் கழித்து ரவுடித்தனம் செய்துள்ளனர்.

ரவுடிகளை பிடிக்க சொன்னால் மாணவர்களை சித்ரவதை செய்வதா? ரவுடித்தனம் செய்த போலீசார் இடமாற்றம் என்பது ஏமாற்று வேலை, அவர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும், அதேபோல் கைது செய்யப்பட்டுள்ள மாணவரை விடுவிக்க வேண்டும் என கோரியுள்ளார். எங்களில் மாணவரை தாக்கிய விவகாரத்தில் 9 காவல்துறையினர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தற்போது இந்த விவகாரம் தமிழக அரசு மீது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள பிரபல வழக்கறிஞர் கிருஷண்ன மூர்த்தி கூறியிருப்பதாவது,  இதேபோலத்தான் காவல்துறை விசாரணையில் சாத்தான்குளத்தில் தந்தை மகனை கொலை செய்தனர். சிபிஐ கோர்ட்டில் அதற்கான விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில் சட்டக் கல்லூரி மாணவர் ஒருவர் முககவசம் அணியாமல் வாகன்தில் சென்றிருக்கிறார் அதற்குத்தான் போலீஸ் இந்த அளவுக்கு தண்டனை கொடுத்துள்ளது.

ஜல்லிக்கட்டு போட்டியை எடுத்துக்கொண்டால் அங்கு ஒருவர் கூட முக கவசம் அணிய வில்லை, சமூக இடைவெளியை கடைபிடிக்கவில்லை அப்படி என்றால் அமைச்சர் மூர்த்தி மீது வழக்கு போடுவார்களா? இல்லையென்றால் மதுரை மாவட்ட ஆட்சியர் அல்லது மதுரை காவல் துறை மீது வழக்கு போடுவார்களா? ஒரு மாணவர் மாஸ்க் அணியாமல் சென்றிருக்கிறார் அவ்வளவுதான், அது ஒரு விதி மீறல் அவ்வளவுதான், அது என்ன பெரிய குற்றமா? ஒரு சட்டக்கல்லூரி மாணவர் என்றும் ரஹீம் கூறியிருக்கிறார், ஆனாலும் அது தெரிந்தும் அந்த மாணவனை போலீசார் அடித்து தாக்கி இருக்கிறார்கள். ஒரு சட்டக்கல்லூரி மாணவர்களை அடிப்பது சட்ட மேதை டாக்டர் அம்பேத்கரையே அவமதிப்பதற்கு சமம். ஆனால் அந்த மாணவர் தன்னை அடித்ததாக போலீசார் கூறுகின்றனர், அது நம்பும்படியாக இல்லை. ஆனால் அந்த மாணவர் மீது சம்பந்தமில்லாத வழக்குகளை போலீசார் பதிவு செய்துள்ளனர்.

டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவரை அடித்து நிர்வாணப்படுத்தி போலீசார் இழிவுபடுத்தியுள்ளனர். அந்த போலீஸ்காரர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட வேண்டும்  எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது ஸ்டாலின் காவல்துறையின் அடக்குமுறைக்கு எதிராக குரல் கொடுத்தார். ஆனால் இந்த விவகாரத்தில் அவர் மௌனமாக இருந்து வருகிறார். இந்நேரத்திற்கு அவர் பாதிக்கப்பட்ட மாணவனை நேரில் சென்று சந்தித்திருக்க வேண்டும். முதல்வர் ஸ்டாலின் அவர்களே.. நீங்கள்தான் காவல் துறை மந்திரி, மக்களை காப்பாற்றுகிறேன் மக்களுக்காக 24 மணி நேரம் உழைக்கிறேன் என்று சினிமா வசனம் பேசிக் கொண்டிருக்காதீர்கள். உண்மையிலேயே போலீசை கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடிந்தால் நீங்கள் போலீஸ் மந்திரியாக இருங்கள், இல்லையென்றால் நீங்கள் அந்த மந்திரி பதவியை ரிசைண் செய்து விடுங்கள். இவ்வாறு வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி கூறியுள்ளார். அதற்கான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 
 

click me!