பாஜக முன்னாடியே சொல்லி இருந்தால்.. முர்முவுக்கு ஆதரவு அளிப்பது பற்றி பரிசீலித்திருப்போம்.. மம்தா பல்டி.

By Ezhilarasan BabuFirst Published Jul 2, 2022, 5:47 PM IST
Highlights

ஜனாதிபதி வேட்பாளராக துரோபதி முர்முவை நிறுத்துவதற்கு முன் எதிர் கட்சிகளுடன் பாஜக விவாதித்திருந்தால் எதிர்க்கட்சிகள் அவருக்கு ஆதரவளிப்பது குறித்து பரிசீலித்திருக்கலாம் என மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். 

ஜனாதிபதி வேட்பாளராக துரோபதி முர்முவை நிறுத்துவதற்கு முன் எதிர் கட்சிகளுடன் பாஜக விவாதித்திருந்தால் எதிர்க்கட்சிகள் அவருக்கு ஆதரவளிப்பது குறித்து பரிசீலித்திருக்கலாம் என மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். ஒருமித்த கருத்து உள்ள வேட்பாளர் நாட்டுக்கு எப்போதும் நல்லது என்றும் அவர் கூறியுள்ளார். அவரின் இந்த கருத்து மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

ராம் நாத் கோவிந்தின் பதவிக்காலம் நிறைவடைய உள்ள நிலையில் புதிய குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுக்க வேண்டிய சூழல் உருவாகி உள்ளது. எனவே வரும் ஜூலை 18ஆம் தேதி ஜனாதிபதி தேர்தல் தேதி தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளராக  பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த திரௌபதி முர்மு அறிவிக்கப்பட்டுள்ளார். அதேபோல் கம்யூனிஸ்ட், திரிணாமுல் காங்கிரஸ், திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட 17 எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளராக  யஸ்வந்த் சின்ஹா அறிவிக்கப்பட்டுள்ளார். 

இரு வேட்பாளர்களும் நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து தங்களுக்கான ஆதரவை கோரி வருகின்றனர். இந்நிலையில் மகாராஷ்ட்ராவில் ஏற்பட்டுள்ள அரசியல் எழுச்சி காரணமாக ஜனாதிபதி தேர்தலில் பாஜகவின் ஜனாதிபதி வேட்பாளர் திரௌபதி முர்மு வெற்றி பெற அதிக வாய்ப்புகள் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. பாஜக முர்முவின் பெயரை அறிவிப்பதற்கு முன் தங்களிடம் ஆலோசனைகளை பெற்று இருந்தால் அது குறித்து நாங்களும் பரிசீலிக்க முடியும் என அவர் கூறியுள்ளார். ஆனால் தற்போது எதிர்க்கட்சிகளின் முடிவின் படி நடப்பேன் என்றும் அவர் கூறினார்.

பழங்குடியினர் சமூகத்தின் மீது தனக்கு மிகுந்த மரியாதை இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எனவே பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை வேட்பாளராக நிறுத்தப் போவதாக பாஜக முன்பே தெரிவித்திருந்தால், எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒருமனதாக பரிசீலித்திருக்கலாம் என்றும் முன்பே பாஜக எங்களிடம் ஆலோசனைகளைக் கேட்டிருக்கலாம், ஆனால் அப்படி  எதுவும் செய்யவில்லை என அவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். மம்தா பானர்ஜியின் இந்தக் கருத்து மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

ஆனால் முர்முவுக்கு எதிராக யஸ்வந்த் சின்ஹாவை வேட்பாளராக நிறுத்தி உள்ள நிலையில் பாஜக இதை வைத்து எதிர்க்கட்சிகளை மிகக் கடுமையாக விமர்சித்து வருகிறது. குறிப்பாக திமுக, திருணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் சமூகநீதி பழங்குடியினர் என பேசி வருகின்றன, ஆனால் ஒரு பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள நிலையில் அவருக்கு ஆதரவு வழங்க மறுக்கின்றன, இதுதான் அவர்களின் சமூக நீதியா என்று பாஜகவினர் அக்காட்சிகளை விமர்சித்து வருகின்றது. பாஜகவின் இந்த விமர்சனத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில்தான்மம்தா பானர்ஜி இவ்வாறு கூறியுள்ளார் என விவரம் அறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர். 
 

click me!