” ஆர்.எஸ்.எஸ், பஜ்ரங் அமைப்பை தடை செய்தால் காங்கிரஸ் கட்சியை சாம்பலாக்குவோம்” பாஜக சவால்

By Ramya sFirst Published May 27, 2023, 12:34 PM IST
Highlights

ஆர்.எஸ்.எஸ், பஜ்ரங் அமைப்பை தடை செய்தால் காங்கிரஸ் கட்சியை சாம்பலாக்குவோம் என்று பாஜக சவால் விடுத்துள்ளது.

கர்நாடக அரசில் புதிதாக பதவியேற்றுள்ள பிரியங்க் கார்கே, ஆர்எஸ்எஸ் மற்றும் பஜ்ரங் தளம் மீதான காங்கிரஸின் தேர்தலுக்கு முந்தைய தடை திட்டத்தை மீண்டும் வலியுறுத்தி புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார். ஆனால் அவரின் இந்த கருத்துக்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஆர்.எஸ்.எஸ், பஜ்ரங் தளம் ஆகிய அமைப்புகளை தடை செய்ய முயற்சித்தால் காங்கிரஸ் கட்சியை சாம்பலாக்குவோம் என்று தெரிவித்துள்ளது.

பாஜக மூத்த தலைவரும், கர்நாடகா முன்னாள் அமைச்சருமான ஆர். அசோகா இதுகுறித்து பேசிய போது “ஆர்எஸ்எஸ்ஸின் ஒரு கிளையைக்கூட கட்சி தடை செய்தால், காங்கிரஸ் கட்சி மாநிலத்தில் எங்கும் இருக்காது. உங்கள் தந்தையால் ஆர்எஸ்எஸ்-ஐ தடை செய்ய முடியவில்லை. அதை உங்கள் பாட்டி செய்யவில்லை. உங்கள் பெரியப்பாவால் கூட ஒன்றும் செய்ய முடியவில்லை. இப்போது உங்களால் என்ன செய்ய முடியும்?

காங்கிரஸின் தற்போதைய நிலை நாட்டில் பரிதாபமாக உள்ளது. உங்களுக்கு தைரியம் இருந்தால் ஆர்.எஸ்.எஸ்-ஐ தடை செய்யுங்கள். உங்கள் அரசாங்கம் மூன்று மாதங்கள் கூட நீடிக்காது" என்று தெரிவித்தார். ஆர்.எஸ்.எஸ்ஸின் லட்சக்கணக்கான கிளைகள் செயல்படுகின்றன என்று கூறிய அசோகா " ஆர்.எஸ்.எஸ்-ன் ஒரு கிளைக்கு தடை விதித்து காட்டுங்கள் என்று காங்கிரஸ் அரசுக்கு சவால் விடுத்தார். 

மேலும் பேசிய அவர் “ மாநிலத்தில் புதிய காங்கிரஸ் ஆட்சியில், "முதல்வர் சித்தராமையா அமைதியாக இருக்கிறார், ஆனால் துணை முதல்வர் சிவகுமார் கோபமாக இருக்கிறார்.  ஒவ்வொரு கூட்டத்திலும் சிவக்குமார் முதல்வரை முன்னிறுத்திப் பேசி காவல் துறையையும், இந்து அமைப்புகளையும் மிரட்டுகிறார்..” என்று தெரிவித்தார்.

இதற்கிடையில், ஆர்எஸ்எஸ் அல்லது பஜ்ரங்தளத்தை தடை செய்ய முயற்சித்தால், "காங்கிரஸ் அரசு பிழைக்காது" என்று கர்நாடக மாநில பாஜக தலைவர் நளின் குமார் கட்டீல் கூறினார். இதுகுறித்து பேசிய அவர் “ பிரியங்க் கார்கே ஆர்எஸ்எஸ்ஸை தடை செய்வது பற்றி பேசினார். பிரதமர் மோடி ஒரு ஆர்எஸ்எஸ் ஸ்வயம்சேவக். நாம் அனைவரும் ஆர்எஸ்எஸ் சுயம்சேவகர்கள். பண்டிட் ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி மற்றும் நரசிம்மராவ் அரசும் கூட ஆர்எஸ்எஸ்-க்கு தடை விதிக்க முயற்சி செய்தும் வெற்றி பெற முடியவில்லை. பஜ்ரங் தளம் மற்றும் ஆர்எஸ்எஸ்ஸை தடை செய்ய முயற்சித்தால், காங்கிரஸ் எரிந்து சாம்பலாகிவிடும். பிரியங்க் கார்கே தனது வார்த்தை கவனிக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

பஜ்ரங் தளத்திற்கு தடை விதிக்க தனது கட்சி தயாராக இருப்பதாக பிரியங்க் கார்கே கடந்த வியாழக்கிழமை தெரிவித்தார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட அவர் "அமைதியை சீர்குலைக்கவும், மதவெறியை பரப்பவும், கர்நாடகாவுக்கு அவப்பெயரை ஏற்படுத்தவும் எந்த மதம் அல்லது அரசியல் அமைப்பு முயற்சித்தால், அவற்றை சட்டப்பூர்வமாக சமாளிக்கவோ அல்லது தடை செய்யவோ எங்கள் அரசு தயங்காது. அது ஆர்எஸ்எஸ் அல்லது வேறு எந்த அமைப்பாக இருந்தாலும் சரி.” என்று குறிப்பிட்டிர்ந்தார். 

பாஜக அரசு கொண்டு வந்துள்ள சட்டங்களை மாற்றுவோம். எந்த ஒரு தனிநபரோ அல்லது அமைப்போ அமைதிக்கு அச்சுறுத்தல் விடுத்து, அரசியல் சாசனத்திற்கு எதிராக செயல்பட்டால், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது" என்றும் கார்கே கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!