ஓபிஎஸ் கட்சி மாறி உள்ளதால் நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் சட்டமன்ற உறுப்பினர் பதவியே இழக்க உள்ளதாகவும் அதிமுக மூத்த நிர்வாகி ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார்..
அதிமுக வெற்றி உறுதி
நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் தீவிரம் அடைந்து வரும் நிலையில், மதுரையில் அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணனை ஆதரித்து ராஜன் செல்லப்பா பிரச்சாரம் மேற்கொண்டார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவரிடம், எடப்பாடி பழனிச்சாமி தேர்தலில் போட்டியிடாதது ஏன் என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், மதுரை நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக மிகப்பெரிய வெற்றி பெறும் என தெரிவித்தார் அதிமுகவிற்கு ஆதரவாக மக்கள் இருப்பதாகவும் கூறினார்.
சட்டமன்றத்தில் அல்லது நாடாளுமன்றத்தில் ஒரு பதவி பொறுப்பில் இருக்கும் போது மற்றொரு பதவிக்கு போட்டியிடுவது வீண் செலவினத்தை உண்டாக்கும் என்பதால் அதிமுக அந்த மரபை கடைபிடிப்பதில்லை என தெரிவித்தார்.சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிச்சாமி பதவி வகிக்கும் போது நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அவசியம் இல்லையென கூறினார்.
எம்எல்ஏ பதவியை இழக்கும் ஓபிஎஸ்
பாஜக கூட்டணியில் உள்ளவர்கள் வெற்றி வாய்ப்பு இல்லை என தெரிந்தே தேர்தலில் போட்டியிடுகிறார்கள்.எல்.முருகன் மத்திய அமைச்சராக பதவி ஏற்ற பின்பும் நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுகிறார்.ஓபிஎஸ் தோல்வி அடைவோம் என தெரிந்தே நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிருக்கிறார். ஓபிஎஸ் கட்சி மாறி உள்ளதால் நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் சட்டமன்ற உறுப்பினர் பதவியே இழக்க உள்ளதாகவும் தெரிவித்தார். நாவலரே தென்னை மர சின்னத்தில் நின்று படாத பாடுபட்டார். இனி ஓபிஎஸ்ஐ மக்கள் பலாப்பழம் என அழைக்கப் போகிறார்கள், அப்படி ஒரு ஏளனமான சூழ்நிலைக்கு ஓபிஎஸ் தள்ளப்பட்டுள்ளார். ஓபிஎஸ், டிடிவி தலையில் மண்ணை வாரி போட்டுக் கொள்வதற்காக நாங்கள் மண்ணை வாரி போட்டுக் கொள்ள முடியாது என கூறினார்.
இபிஎஸ் பிரதமராவார்.!!
அதிமுக 40 நாடாளுமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்று இந்தியா முழுவதும் சிறு, சிறு கட்சிகள் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைக்கும் வாய்ப்பு ஏற்பட்டால் எடப்பாடி பழனிச்சாமி பிரதமராக வர வாய்ப்பு உண்டு என தெரிவித்த அவர், பிரதமராக பதவி ஏற்ற பின்பு ராஜ்யசபா உறுப்பினராக பதவி ஏற்றுக்கொள்ளலாம்.என தெரிவித்தார். தேவேகவுடா, சந்திரசேகர ராவ் எப்படி பிரதமர் ஆனார்களோ அதன்படி எடப்பாடி பழனிச்சாமி பிரதமராக ஆகிக் கொள்ளலாம் என்ன ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார்