இப்போ போறேன்… ஆனா திரும்ப வருவேன்… சபரிமலைக்குள் நுழையவிடாமல் பக்தர்களால் துரத்தியடிக்கபட்ட திருப்தி தேசாய் ஆவேசம்…

By Selvanayagam PFirst Published Nov 17, 2018, 7:21 AM IST
Highlights

சபரிமலையில் தரிசனம் செய்வதற்காக கொச்சி விமான நிலையம் வந்த பெண்ணியவாதி திருப்தி தேசாயை அங்கிருந்து வெளியேறவிடாமல் பக்தர்கள் தடுத்தி நிறுத்தியதையடுத்து அவர் திரும்பிச் சென்றார். அப்போது இப்போ போறேன்… ஆனால் திரும்பி வருவேன் என திருப்தி தேசாய் சவால் விடுத்துள்ளார்.

மண்டல பூஜை, மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை கோவில் நேற்று  திறக்கப்பட்டது. கோவிலில் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களை அனுமதி அளிப்பதற்கு எதிராக போராட்டம் தொடரும் நிலையில் பெண்ணியவாதியான திருப்தி தேசாய் சபரிமலை கோவிலுக்குள் செல்வேன் என்று அறிவித்தார்.

அதன்படி காலை 4:30 மணிக்கு கொச்சி விமான நிலையம் வந்தார். விமான நிலையத்தில் இருந்து அவர் வெளியே செல்ல  முடியாத வகையில் போராட்டக்குழுவினர் குவிந்தனர். அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டது. போராட்டக்காரர்கள் பெருமளவு திரண்டதால் திருப்தி தேசாயை போலீசார் வெளியே அனுமதிக்கவில்லை. 12 மணி நேரமாக தேசாய் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது.

அய்யப்ப பக்தர்கள் சரணகோஷம் எழுப்பி போராட்டம் மேற்கொண்டனர். தொடர்ந்து பக்தர்கள் விமான நிலையம் செல்லும் நிலை காணப்பட்டது. இதையடுத்து 12 மணி நேரத்திற்கு மேல் விமான நிலையத்தில் இருந்த திருப்தி தேசாய் புனே திரும்ப முடிவு செய்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய திருப்தி தேசாய், எங்களுக்கு உதவி செய்யக்கூடாது என டாக்சி டிரைவர்களை  பாஜகவினர் மிரட்டியுள்ளனர். எங்களுக்கு இடம் வழங்கினால் ஓட்டல்களை அடித்து நொறுக்குவோம் என மிரட்டப்பட்டுள்ளது.

எங்களுக்கு தொல்லைக் கொடுக்கும் மற்றும் மிரட்டும் மக்கள் தங்களை அய்யப்ப பக்தர்கள் என்று சொல்லிக் கொள்வதை பார்ப்பது என்னை கவலையடைய செய்துள்ளது என கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர் இப்போதைக்கு நான் திரும்ப போறேன் ஆனால் சட்டப்படி நான் திரும்ப வருவேன் என சவால்விட்டுச் சென்றுள்ளார்..

click me!