
திமுகவின் அச்சுறுத்தல்களை எல்லாம் நீதிமன்றத்தில் சந்திப்பேன் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாகப் பேசிய பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலையிடம் 100 கோடி ரூபாய் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக திமுக எம்.பி. ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். இதுக்குறித்து பேசிய அவர், பாஜகவின் தலைவர்களாக இருந்தவர்கள், யாரும் பேசாத அளவுக்கு இன்றைக்கு அவர் பேசிக் கொண்டிருக்கிறார். ஒரு முதலமைச்சர், ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்காக வெளிநாட்டிற்கு பயணம் செய்தார். அதைக் கொச்சைப்படுத்திப் பேசியது எந்த வகையிலே நியாயம். இன்றைய பிரதமர் நரேந்திர மோடி ஏறத்தாழ 64 முறை உலகம் முழுவதும் சுற்றி வந்துள்ளார். அப்போது, ஒவ்வொரு முறையும், அவர் இங்கு சம்பாதித்ததை, அங்கு போய் முதலீடு செய்தார் என்று அர்த்தமா? பொறுப்புணர்ச்சியோடு பேச வேண்டும். மார்ச் 23 ஆம் தேதி விருதுநகரில், மார்ச் 25 ஆம் தேதி சென்னையிலும் அண்ணாமலை பேசியிருக்கிறார்.
அதற்காக, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எங்களுடைய கட்சினுடைய மூத்த வழக்கறிஞர் வில்சன் எம்.பி., மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் முதலமைச்சர் மட்டுமல்ல, ஒரு மாபெரும் இயக்கம், ஏறத்தாழ 70 ஆண்டுகாலம் தொடர்ந்து, தமிழ்நாட்டு அரசியலிலே மிகப்பெரிய இயக்கமாகவும், அகில இந்திய அளவில் நாடாளுமன்றத்திலே மூன்றாவது பெரிய கட்சியாக விளங்கக்கூடிய இயக்கத்தின் தலைவராக இருக்கக் கூடிய எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலினை இழிவுப்படுத்துகிற வகையிலே அவரது பேச்சு அமைந்திருந்த காரணத்தினால், அவருக்கு திராவிட முன்னேற்ற கழகத்தின் அமைப்புச் செயலாளர் என்கிற முறையில் நான் இன்றைக்கு நோட்டீஸ் ஒன்றை அனுப்பியிருக்கிறேன்.
அந்த நோட்டீஸ் கண்ட 24 மணி நேரத்திற்குள் அவர் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும். அப்படி தவறினால், அவர் மீது கிரிமினல் மற்றும் சிவில் வழக்குகள் தொடர உள்ளோம். 100 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்று தெரிவித்திருந்தார். இதற்கு டிவிட்டரில் பதிலடி கொடுத்துள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, 100 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு திமுக கட்சி, என் மீது, மானநஷ்ட வழக்கு நோட்டீஸ் அனுப்பி இருப்பதை அறிந்தேன். திமுகவின் முதன்மை குடும்பம், சாதாரண சாமானியனான என்னையும், அவர்களைப் போன்ற துபாய் குடும்பத்துக்கு, சரிசமமாக நடத்துகிறது. நம் நாட்டின் நீதித்துறை மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. திமுகவின் அச்சுறுத்தல்களை எல்லாம் நீதிமன்றத்தில் சந்திப்பேன். தமிழகத்துக்கான, என் போராட்டம் தொடரும். துணிவுடன். மக்கள் துணையுடன் எனக் குறிப்பிட்டுள்ளார்.