
அண்ணாமலை ஒரு ஐபிஎஸ் அதிகாரி என்பதால் திமுக மீது அவர் சொல்வதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்துள்ளார்.
பாதுகாத்த எடப்பாடி பழனிச்சாமி
மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தொழில் முதலீட்டை பெறுவதற்காக மாநில முதல்வர்கள் வெளிநாடு செல்வது வழக்கமான ஒன்றுதான். முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அமெரிக்கா, லண்டன் உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்றார். தமிழகத்துக்கு அதிக முதலீடுகளை அவர் பெற்று தந்தார். கொரோனா தொற்று காலத்திலும் தமிழகத்தின் பொருளாதாரம் வீழ்ச்சி அடையாமல் பாதுகாத்தவர் எடப்பாடி பழனிசாமிதான். அந்த அடிப்படையில் பட்ஜெட் முடிந்தவுடன் தொழில் முதலீடுகளை ஈர்க்க சென்றுள்ள தமிழக முதல்வரின் பயணம் வெற்றியடைய என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
இதுதான் பெரியார் வழியா?
திமுக அரசின் பட்ஜெட் என்பது அரைத்த மாவையே திரும்ப அரைத்த பட்ஜெட் என்ற அளவில்தான் உள்ளது. பட்ஜெட்டில் புதிதாக ஒன்றும் இல்லை. பட்ஜெட்டில் யானையை எதிர்பார்த்த மக்களுக்கு பூனை கூட கிடைக்கவில்லை. அதிமுக அரசு கொண்டுவந்த எண்ணற்ற மக்கள் நல திட்டங்களைக் கொண்டு வந்தது. இதுபோன்ற ஏழை - எளிய மக்களுக்கான திட்டங்களை முடக்க நினைப்பது திமுக அரசு மக்களுக்கு செய்யும் துரோகம் ஆகும். பெரியார் கருத்தை மொழி பெயர்த்து உலகமெல்லாம் கொண்டு செல்வதாக திமுக அரசு கூறுகிறது. பெரியார் வழியில் செல்வதாக கூறும் திமுக, பெரியார் வழியில் செல்லும் அதிமுக கொண்டு வந்த பெண்கள் நல திட்டங்களை நசுக்குகிறது. இது பெரியாரின் கொள்கைகளை குழி தோண்டி புதைப்பது போல் உள்ளது.
அண்ணாமலை சொன்னா சரிதான்
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஒரு ஐபிஎஸ் அதிகாரி. திமுக மீது அவர் சொல்வதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. அன்னாமலை சொல்லும் குற்றச்சாட்டில் அர்த்தம் இருக்கும். வழக்கம் போல வைகை அணையில் தண்ணீர் உள்ளது. அழகர் ஆற்றில் இறங்க வசதியாக திமுக அரசு தண்ணீரை திறந்துவிட வேண்டும். சித்திரைத் திருவிழாவில் பொதுமக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும். ரவுடிகள் தொல்லை உள்ளதாக டிஜிபியே கூறியுள்ளார். சித்திரைத் திருவிழாவுக்கு லட்சக்கணக்கான மக்கள் வர உள்ளனர். ரவுடிகள், பிக்பாக்கெட் திருடர்கள் தொல்லை உள்ளதால் காவல்துறை உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும்” என்று செல்லூர் ராஜூ தெரிவித்தார்.