என் மகனை கருணைக்கொலை செய்ய மனு கொடுப்பேன்! பேரறிவாளனின் தாயார் வேதனை

First Published Jun 15, 2018, 4:12 PM IST
Highlights
I will file a mercy killing petition - Arputhammal


என் மகன் பேரறிவாளனை கருணைக்கொலை செய்ய மத்திய-மாநில அரசுகளிடம் மனு கொடுப்பேன் என்று ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் உருக்கமாக பேசியுள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1991 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தின்போது கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில்
பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் 27 ஆண்டுகளாக சிறை தண்டனை பெற்று வருகின்றனர்.

வாழ்வின் பெரும்பகுதியை சிறையில் கழித்த நிலையில், கருணை அடிப்படையில் அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அரசு மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதி இருந்தது.

தமிழக அரசின் மனுவை, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஆலோசனைப்படி, தமிழக அரசின் மனுவை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்தார்.

இந்த நிலையில் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், மத்திய அரசு ஒரு நல்ல நிலைப்பாடு எடுக்கும் என்று காத்திருந்தோம். பாதிக்கப்பட்ட குடும்பத்தை சேர்ந்த ராகுல் காந்தி அவர்களே, இவர்களை விடுதலை செய்யலாம் என்று கருத்து சொல்லி விட்டார். 

இனி எந்தவிதமான எதிர்ப்பும் இருக்கப்போவதாக இல்லை என்று நேற்றுவரை நாங்கள் நினைத்துக் கொண்டிருந்தோம். ஆனால், மத்தியில் ஆளும் பாஜக அரசு குடியரசு தலைவர் வாயிலாக இதுபோன்ற ஒரு பதிலை சொல்வார்கள் என்று கனவில் கூட நினைக்கவில்லை. 

நாங்கள் நல்லவர்களாக வாழ்ந்து பயன் இல்லை. இவர்களின் ஆட்சி அதிகாரத்துக்குகீழ் வாழ்ந்ததுபோதும் என்ற நிலைப்பாட்டுக்கு வந்துள்ளோம். இறுதியாக மத்திய-மாநில அரசுகளிடம் என் மகனை கருணைக்கொலை செய்ய வேண்டும் என மனு கொடுக்க உள்ளேன் என்று அற்புதம்மாள் உருக்கமாக கூறினார்.

click me!