
திருச்சி
ஆர்.கே.நகரில் டி.டி.வி. தினகரன் பெற்ற வெற்றியை எதிர்த்து வழக்கு தொடரப்படும் என்று டிராஃபிக் ராமசாமி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டம், மணப்பாறைக்கு சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி திங்கள்கிழமை இரவு வந்தார். அவர் நகரில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த பேனர்கள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் போனில் அளித்த புகாரைத் தொடர்ந்து பேனர்கள் முழுவதும் காவல்துறையினரால் அகற்றப்பட்டது.
பின்னர், நேற்று அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில், "மணப்பாறை பகுதியில் தனியார் பஞ்சாலை கையகப்படுத்தி உள்ள அரசுக்கு சொந்தமான நிலங்களை மீட்டெடுக்க மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக மனு கொடுக்க உள்ளோம். இதில், தீர்வு காணப்படவில்லை என்றால் நீதிமன்றத்தை நாடி ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்டு அதை மக்களுக்கு அளிக்கும் நிலையை உருவாக்குவேன்.
ஆளும் கட்சியினரை எதிர்த்து வெற்றிப் பெற்ற சுயேட்சை வேட்பாளர் டி.டி.வி தினகரனை பாராட்டுகிறேன். அதேநேரத்தில் ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் டிடிவியின் வெற்றியை ஏற்றுக்கொள்ள இயலாது. இந்த வெற்றி சரியான முறையில் கிடைத்தது அல்ல. அவரது வெற்றியை எதிர்த்து வழக்கு தொடரப்படும்" என்று அவர் தெரிவித்தார்.
ஊழலுக்கு எதிராக பல்வேறு வழக்குகளை தொடர்ந்தவர் சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி. சில மாதங்களுக்கு முன்பு ஊழல் அமைச்சர்களை பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி டிராஃபிக் ராமசாமி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் சென்னை பாரிமுனையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.