விளக்கம் சொல்லக்கூட எனக்கு வாய்ப்பளிக்கவில்லை... இடைநீக்கம் செய்யப்பட்டது குறித்து காயத்ரி ரகுராம் கருத்து!!

By Narendran S  |  First Published Nov 22, 2022, 7:54 PM IST

தன் தரப்பு விளக்கத்தைக் கேட்காமல் இடைநீக்கம் செய்துவிட்டதாக காயத்ரி ரகுராம் வருத்தம் தெரிவித்துள்ளார். 


தன் தரப்பு விளக்கத்தைக் கேட்காமல் இடைநீக்கம் செய்துவிட்டதாக காயத்ரி ரகுராம் வருத்தம் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனிப்பட்ட முறையில் யார் என்னைத் தாக்கினாலும் அவர்களுக்கு நான் பதிலடி கொடுப்பேன். இது என் உரிமை. கருத்துரிமையை முடக்குவது வருத்தமாக இருக்கிறது. அதற்காக என்னை இடை நீக்கம் செய்திருப்பது, அதுவும் கட்சிக்குக் களங்கம் என்று கூறியிருப்பது மன உளைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. எட்டு வருடமாக என் உழைப்பை கட்சிக்கு கொடுத்திருக்கிறேன். அண்டை மாநில தமிழ் வளர்ச்சிப் பிரிவுக்கு தலைவராக இருந்த நிலையில், 24 தமிழர்களை வெளிநாட்டிலிருந்து மீட்டிருக்கிறேன். அப்படியிருக்கும்போது பாஜகவுக்கு நான் களங்கத்தை ஏற்படுத்தியதாகக் கூறுவது வருத்தமளிக்கிறது. சுமார் 3 மாதங்களுக்கு முன்பாக கட்சியில் சேர்ந்த செல்வக்குமார் என்ற நபர், கட்சிக்கு வந்த உடனேயே பொறுப்பு வாங்கி, என்னை கொச்சையாகப் பேசும் ட்விட்டர் பதிவுகளில் லைக் போடுகிறார். அதைப் பார்த்துக்கொண்டு நான் சும்மா இருக்க மாட்டேன். செல்வக்குமார் அறிவுசார் பிரிவின் துணைத் தலைவராக இருக்கிறார். இவர்கள் எல்லாம் சேர்ந்து கோவை க்ரூப் என்று ஒரு குழு வைத்திருக்கிறார்கள். அவர்கள் நண்பர்களா, ஊழியர்களா என்று சொல்ல முடியாது.

இதையும் படிங்க: கட்சியில் இருந்து நீக்கப்பட்ட உடனே காயத்ரி ரகுராம் போட்ட ட்வீட் என்ன தெரியுமா?

Tap to resize

Latest Videos

அவர்கள் வார் ரூம் போல ஒன்றை நடத்துகிறார்கள். அங்கிருந்துதான் நான் குறிவைக்கப்பட்டேன். அவர் ஏன் என்னைக் குறிவைக்கிறார் என்பது எனக்குத் தெரியவில்லை. வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சிப் பிரிவின் செயலர் பொறுப்பு எனக்குக் கொடுக்கப்பட்ட பிறகு, அப்படியெல்லாம் எனக்கு பொறுப்பே கொடுக்கப்படவில்லையென செல்வக்குமார் குழப்பத்தை உருவாக்கிக்கொண்டிருந்தார். செல்வக்குமார் அண்ணாமலைக்காக வேலை பார்ப்பதாக கேள்விப்பட்டேன். செல்வக்குமார் போன்றவர்கள் சக்தி வாய்ந்த நபர்களாகச் செயல்படுகிறார்கள். அந்த நபர் என்ன சொன்னாலும் செய்வார்கள். கட்சியில் இந்த விவகாரத்தை நேரடியாகச் சொல்ல நேரம் கொடுக்கவில்லை. அதற்கு முன்பே என்னை இடை நீக்கம் செய்துவிட்டார்கள். விளக்கம் சொல்லக்கூட எனக்கு வாய்ப்பளிக்கவில்லை. அண்ணாமலை எப்போதும் பிஸியாக இருப்பார். அவரிடம் இந்த விஷயத்தை எடுத்துச் செல்வதற்கு முன்பாக என்னை இடை நீக்கம் செய்து விட்டார்கள். நான் செய்த ஒவ்வொரு விஷயமும் தவறாகவே கட்சித் தலைமையிடம் போய்ச் சேர்ந்தது. அது குறித்து விசாரணை நடந்ததே கிடையாது. அதைப் பற்றி விளக்கமும் வந்தது கிடையாது. நான் முட்டிமோதிதான் வரவேண்டியிருந்தது.

இதையும் படிங்க: பாஜகவில் இருந்து காயத்ரி ரகுராம் அதிரடி நீக்கம்.. அண்ணாமலை அறிவிப்பு..!

சூர்யா சிவா ஆபாசமாகப் பேசியிருக்கும்போது, நாங்கள் கொந்தளிப்பது இயல்புதான். அது என் உரிமை. ஆனால், அண்ணாமலையின் முடிவை நான் விமர்சிக்க முடியாது. ஆனால், அது வருத்தமளிக்கிறது. காசியில் நடக்கும் தமிழ்ச் சங்கமத்திற்கு எங்களையெல்லாம் அழைக்கவேயில்லை. நிறையப் பேர் பதிவுசெய்திருந்தார்கள். ஆனால், அவர்களையெல்லாம் அழைக்கவில்லை. அதைப் பற்றி மட்டும் சிறிய அளவில் பதிவிட்டேன். மற்றபடி கட்சிக்கு எதிராக எதையும் கூறவில்லை. அண்ணாமலை என்னிடம் பேசினார். இதுவரைக்கு உங்களுக்கு என்ன செய்யவில்லைன்னு புகார் சொல்கிறீர்கள் என்று கேட்டார். ஃபெஃப்சி சிவாவின் விவகாரத்தை சுட்டிக்காட்டினேன். என் பக்கத்தை நீங்கள் கேட்கவேயில்லை என்று சொன்னேன். நாம் ஒரு முன்னுதாரணமாக இருக்க வேண்டுமென்றால், சூர்யா சிவாவைக் கட்சியிலிருந்து நீக்க வேண்டும். என்னை விசாரிக்க நேரம் கொடுக்கவில்லை. அவரை விசாரிக்க நேரம் கொடுக்கிறார்கள். சூர்யா சிவாவை கண்டிப்பாக கைதுசெய்ய வேண்டும். இன்று டெய்சிக்கு நடந்தது யாருக்கு வேண்டுமானாலும் நடக்கும். நான் பாஜகவில் கண்டிப்பாகத் தொடர்வேன். என்னிடம் கண்டிப்பாக விளக்கம் கேட்பார்கள். அப்போது முதல் நாளில் இருந்து என்ன நடந்தது என்பதைச் சொல்வேன் என்று தெரிவித்தார். 

click me!