மோடியிடமிருந்து நான் கற்றுக் கொண்டது என்ன தெரியுமா ? காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விளக்கம் !!

By Selvanayagam PFirst Published Dec 12, 2018, 9:35 AM IST
Highlights

மக்களின் உணர்வைப் புரிந்துக் கொள்வது  மற்றும் அந்த உணர்வை பின்பற்றியே நாம் செயல்பட வேண்டும் என்ற இரண்டு பாடங்களை பிரதமர் மோடியிடம் இருந்து கற்றுக் கொண்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கர் மாநில தேர்தல்களில்  காங்கிரஸ் அபார வெற்றி பெற்றது. பாஜக ஆட்சி செய்த அந்த மூன்று மாநிலங்களில் அந்தக் கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது.

காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கும் பிறகு டெல்லியில் ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, இந்த 5 மாநில தேர்தல் முடிவுகள் மூலம் மக்கள் அளித்துள்ள தீர்ப்பு விவசாயிகள், சிறு வணிகர்கள் மற்றும் காங்கிரஸ் தொண்டர்ளுக்கான  வெற்றி என்றும்  இந்த வெற்றி காங்கிரசுக்கு அளிக்கப்பட்ட மிகப்பெரிய பொறுப்பாகும். இதை நாங்கள் நிறைவேற்றுவோம் என ராகுல் காந்தி குறிப்பிட்டார்.

சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சியின் சித்தாந்தம் ஒன்றானவை, பா.ஜ.க.வின் சித்தாந்தத்தில் இருந்து மாறுபட்டவை என்றார் அவர்.. 

காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ள மாநிலங்களுக்கான புதிய முதல் மந்திரிகளை தேர்வு செய்வது பெரிய காரியமல்ல. அது சுமுகமாக முடிந்துவிடும். எங்களை வெற்றிபெற வைத்த மாநில மக்களுக்கான தொலைநோக்கு திட்டத்தை வகுத்து, அவர்கள் பெருமைப்படும் வகையில் அவற்றை காங்கிரஸ் அரசு நிறைவேற்றும் என்றும் ராகுல் காந்தி தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், பிரதமர் மோடி தமக்கு இரண்டு பாடங்களைக் கற்றுக் கொடுத்திருப்பதாக கூறினார். தமது வாழ்க்கையின் மிகச்சிறந்த தருணம் இது என்றும் ராகுல் காந்தி  மகிழ்ச்சி தெரிவித்தார்.

தேர்தல்கள் மூலம் தாம் நிறைய பாடங்களைக் கற்றுக் கொண்டிருப்பதாக கூறிய ராகுல் காந்தி, மக்களின் உணர்வைப் புரிந்துக் கொள்வதுதான் அதில் முதன்மையான பாடம் என்றார்.

இரண்டாவது அந்த உணர்வை பின்பற்றியே அடுத்து நாம் செயல்பட வேண்டும். இந்த இரண்டு பாடங்களையும் தாம் பிரதமர் மோடியிடமிருந்தே கற்றுக் கொண்டதாக ராகுல் காந்தி தெரிவித்தார்.

மோடி மக்களின் இதயத்துடிப்பை கேட்கவில்லை என்றும் நாட்டை வழிநடத்த அவருக்கு வழங்கப்பட்ட மகத்தான வாய்ப்பை தவறாகப் பயன்படுத்திக் கொண்டார் என்றும் ராகுல்காந்தி விமர்சித்தார்.

click me!