நன்றி சொல்ல உமக்கு வார்த்தை இல்லை எனக்கு... பிரியாவிடையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உருக்கம்.!

By Asianet TamilFirst Published Sep 13, 2021, 8:48 AM IST
Highlights

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பாதுகாவலர் என்ற முறையில், சட்டப்படியான நிலைப்பாடுகளை மேற்கொண்டேன். சரியான முடிவுகளை தமிழக மக்கள் ஏற்றுக்கொண்டு, தங்களுடைய ஒத்துழைப்பையும் வழங்கினர் என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தனது பிரியாவிடை செய்தியில் தெரிவித்துள்ளார்.
 

தமிழக ஆளுநராக இருக்கும் பன்வாரிலால் புரோஹித் பஞ்சாப் ஆளுநராகவும், சண்டிகர் யூனியன் பிரதேச நிர்வாகியாகவும் மாற்றப்பட்டார். அவருக்குப் பதிலாக தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டுள்ளார். புதிய ஆளுநர் ரவி, இந்த வாரத்தில் பதவியேற்க உள்ளார். இந்நிலையில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தமிழக மக்களுக்கு பிரியாவிடை செய்தி வெளியிட்டுள்ளார். அதில், “பொதுமக்கள், அரசு அதிகாரிகள், கல்வியாளர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் உள்பட அனைத்துத் தரப்பினரிடமும் அன்பையும், பாசத்தையும் கண்டேன். இதற்காக தமிழக மக்கள் அனைவருக்கும் என் இதயப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஒவ்வொருவரின் பொறுமையையும் சோதிக்கும் வகையில் பல்வேறு பிரச்சினைகள் இங்கு இருந்தன என்பது உண்மைதான். ஆனால், அவற்றின் விளைவுகள் அனைத்துத் தரப்பினருக்கும் சாதகமாகவே அமைந்தன. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பாதுகாவலர் என்ற முறையில், சட்டப்படியான நிலைப்பாடுகளை மேற்கொண்டேன். சரியான முடிவுகளை தமிழக மக்கள் ஏற்றுக்கொண்டு, தங்களுடைய ஒத்துழைப்பையும் வழங்கினர். இவையெல்லாம் என்றும் நெஞ்சைவிட்டு நீங்காது.
பல்கலைக்கழகங்களின் வேந்தர் என்ற முறையில், கல்வி மேம்பாட்டு நலனைக் கருத்தில்கொண்டு, சில முக்கிய முடிவுகளை எடுத்தேன். தமிழகத்தின் வளமையான கலாச்சாரம், ஆன்மிகம், வரலாற்றுப் பாரம்பரியத்தை அறிந்துகொள்வதற்கு ஆளுநர் பொறுப்பு எனக்கு நல்ல வாய்ப்பை வழங்கியது. இவற்றுக்கெல்லாம் நன்றி தெரிவிக்க வார்த்தைகளே இல்லை.” என்று செய்தியில் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார். 

click me!