வடிவேலு பிரச்சனை முடிவுக்கு வர நான்தான் காரணம்.. முதலமைச்சர் இல்லை... மார்தட்டும் சீமான்.

By Ezhilarasan BabuFirst Published Sep 11, 2021, 5:45 PM IST
Highlights

சாதி ஒழிப்பில் சிறப்பாக செயல்படும் ஊராட்சி அமைப்புகளுக்கு 10 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்திருப்பது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சீமான், இத்தனை ஆண்டாக ஆட்சியில் இருப்பவர்கள் ஏன் இன்னும் சாதியை ஒழிக்க வில்லை? ஊராட்சி அமைப்புகளுக்கு 10 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கினால் மட்டும் சாதியை ஒழித்து விட முடியுமா? எனக் அவர் கேள்வி எழுப்பினார். 

வைகைப்புயல் வடிவேலுக்கு எதிரான பிரச்சனை முடிவுக்கு வந்ததற்கு நான் தான் காரணம் என்றும், முதல்வர் இல்லை என்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். மேலும் ஏழு தமிழர்களை விடுதலை செய்வதில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு விருப்பமில்லை, எனவே அது பற்றி பேசுவதில் எந்த பயனுமில்லை என்றும் அவர் கூறியுள்ளார். மகாகவி பாரதியாரின் 100 ஆண்டு நினைவு தினம் மற்றும் இமானுவேல் சேகரனின் 64ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நாம் தமிழர் கட்சியின் சார்பில் சின்ன போரூரில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மகாகவி பாரதியார் மற்றும் இமானுவேல் சேகரனின் திருவுருவ படத்திற்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, 

இமானுவேல் சேகரனின் நினைவு தினத்தை அரசு விழாவாக கொண்டாட அரசு முன்வர வேண்டும் என்றார், அதேபோல் தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தை தாழ்த்தப்பட்டோர் பட்டியலிலிருந்து நீக்கி பிற்படுத்தப்பட்டோர் அல்லது மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்றும், அவர்கள் பட்டியலில் இருந்து வெளியேறினாலும்  அவர்களுக்கான இட ஒதுக்கீடு தொடரவேண்டும் என்றார். தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இருப்பதால் அவர்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது.? என்றும் அவர் கேள்வி எழுப்பினார். மறைந்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா இருந்த போது அவர் 110 விதியின் கீழ் அறிவித்த திட்டங்களை தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சித்து வந்தார். ஆனால் இப்போதும் முதலமைச்சர் அதே 110 விதியின் கீழ்தான் திட்டங்களை அறிவிக்கிறார்கள் என்றார். 

சாதி ஒழிப்பில் சிறப்பாக செயல்படும் ஊராட்சி அமைப்புகளுக்கு 10 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்திருப்பது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சீமான், இத்தனை ஆண்டாக ஆட்சியில் இருப்பவர்கள் ஏன் இன்னும் சாதியை ஒழிக்க வில்லை? ஊராட்சி அமைப்புகளுக்கு 10 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கினால் மட்டும் சாதியை ஒழித்து விட முடியுமா? எனக் அவர் கேள்வி எழுப்பினார். வெளிநாட்டு நிறுவனங்கள் ஏன் அந்தந்த நாடுகளில் தொழில் தொடங்க மறுக்கின்றன, ஏன்  அவர்களின் தொழிற்சாலைகள் இங்கு தொடங்கப்படுகிறது? என கேள்வி எழுப்பி அவர், இதுபோன்ற கேள்விகளை தான் எழுப்பினால் என்னை  தேசவிரோதி என்றும், தேசத்தின் வளர்ச்சிக்கு எதிரானவன் என்றும் விமர்சிக்கப் படுகிறேன் என்றார். 

அதேபோல், 7 தமிழர் விடுதலை குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 தமிழர்களை விடுவிக்க தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் விரும்பவில்லை, எனவே அதைப்பற்றி பேசுவதில் எந்த பலனும் இல்லை என்றார். வைகைப்புயல் வடிவேலு மீதான தடை நீக்கப்பட்டு தற்போது அவர் மீண்டும் நடிக்கும் சூழல் உருவாகி இருப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த சீமான், வடிவேலு அசாத்தியமான  கலைஞன், அவருடைய இடத்தை யாராலும் நிரப்ப முடியாது, வடிவேலு  விவகாரம் முடிவுக்கு வந்ததற்கு நான்தான் காரணம், முதலமைச்சர் அல்ல என்றும் அவர் கூறினார். 
 

click me!