திமுக ஆட்சியை கலைக்கும் அளவுக்கு தெம்பு, திராணி எவருக்கும் இல்லை.. புதிய ஆளுநர் நியமனம் குறித்து திருமா ஆவேசம்

By Ezhilarasan BabuFirst Published Sep 11, 2021, 4:20 PM IST
Highlights

சிஐஏ சட்டத்துக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது வரவேற்கத்தக்கது என கூறிய அவர், பெண்களுக்கு எதிராக நடக்க கூடிய பாலியல் வன்முறைகளில் ஈடுபடுவோரை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். 

தமிழகத்திற்கு யாரை ஆளுநராக கொண்டுவந்தாலும் அவருக்கு தமிழ் நாட்டின் ஆட்சியை கலைக்கும் தெம்பு, திராணி இல்லை என விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் எச்சரித்துள்ளார். தமிழகத்திற்கு புதிய ஆளுநராக ஆர. என்  ரவி நியமிக்கப்பட்டுள்ள நிலையில் திருமாவளவன் இவ்வாறு விமர்சித்துள்ளார். தமிழக ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோஹித் பஞ்சாப் மாநில ஆளுநராக மாற்றப்பட்டுள்ளார். இந்நிலையில் முழுக்க முழுக்க காவல்துறையை பின்புலமாகக் கொண்டவரும், வடகிழக்கு  மாநிலங்களில் ஒன்றான நாகலாந்தின் ஆளுநராக இருந்தவருமான ஆர். என் ரவியை தமிழக ஆளுநராக மத்திய அரசு நியமித்திருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

 

வடகிழக்கு மாநிலத்தில்  பயங்கரவாத குழுக்களால் நடைபெற்றுவந்த மோதல்களை ஒடுக்குவதற்கும், காவல்துறையில் புலனாய்வு பணியகத்தின் சிறப்பு இயக்குனராக பணியாற்றி ஓய்வு பெற்றவரும், பின்னர் 2014ஆம் ஆண்டு முதல் கூட்டு புலனாய்வுக் குழுவின் தலைவராகவும், அதைத் தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகராகவும் பணியாற்றிய ஒருவரை தமிழகத்தில் ஆளுநராக நியமித்து இருப்பது குறித்து அரசியல் கட்சியினர் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர். குறிப்பாக திமுகவின் கூட்டணிக் கட்சித் தலைவர்கள்  ஆர்.என் ரவி நியமனத்தை விமர்சித்துவருகின்றனர். அமைதியாக ஆட்சி செய்து கொண்டிருக்கும் முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு தொல்லை கொடுப்பதற்காகவே ஆளுனராக ஆர்.என் ரவி நியமிக்கப்பட்டிருப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி குற்றம்சாட்டியுள்ளார். 

இதேபோல கம்யூனிஸ்ட் கட்சியும் குற்றம் சாட்டியுள்ளது, அந்த வரிசையில் இதே கருத்தை தற்போது விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவனும் முன்வைத்துள்ளார். சென்னை அசோக் நகரில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைமை அலுவலகத்தில் மறைந்த இமானுவேல் சேகரன் 64ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. அதில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் இமானுவேல்சேகரன் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ஆணையம் அமைக்கப்படும் என அறிவித்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக கூறினார், இந்த ஆணையத்தின் தலைவராக தலித் சமூகம் அல்லாத ஒருவரை நியமிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். 

அதேபோல தமிழகத்திற்கு புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டிருப்பவர் குறித்து பல்வேறு ஐயங்கள் எழுந்திருக்கிறது என தெரிவித்த அவர், உளவுத்துறையுடன் உறவு வைத்துள்ள ஒருவரை  வேண்டுமென்றே தமிழக ஆளுநராக ஒன்றிய அரசு நியமித்துள்ளது என குற்றம் சாட்டினார். ஆளுநர் என்பவர் ஜனநாயகப் பூர்வமாக செயல்படக் கூடியவராக இருக்க வேண்டும், அப்படிப்பட்ட ஒருவரைதான் நியமிக்க வேண்டும் என்றார். மொத்தத்தில்  தமிழகத்திற்கு யாரை ஆளுநராக கொண்டுவந்தாலும்  தமிழ்நாட்டில் ஆட்சியை கலைக்க கூடிய அளவிற்கு தெம்பும், திராணியும் அவர்களுக்கு கிடையாது எனவும் அவர் கூறினார். சிஐஏ சட்டத்துக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது வரவேற்கத்தக்கது என கூறிய அவர்,

பெண்களுக்கு எதிராக நடக்க கூடிய பாலியல் வன்முறைகளில் ஈடுபடுவோரை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இதற்கென சட்டமன்றத்தில் தனி சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார், அதேபோல் தமிழகத்தை போதைப் பழக்கம் இல்லாத மாநிலமாக மாற்ற முதல்வர் தனி கவனம் செலுத்த வேண்டும் என்றும் அதற்காக தனிப்பிரிவை உருவாக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
 

click me!