
தான் ஒரு இந்து விரோதி அல்ல என்றும், அதே போலத்தான் முஸ்லீம் மற்றும் கிறிஸ்துவ மதங்களைப் பார்ப்பதாகவும் தான் யாருக்கும் எதிரி கிடையாது என்றும் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
நடிகர் கமலஹாசன் புதிய கட்சி தொடங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளார். இதற்காக அவர் மாவட்டவாரியாக தனது ரசிகர்களை சந்தித்து வருகிறார். வரும் 21 ம் தேதி ராமேஸ்வரத்தில் உள்ள அப்துல் கலாம் நினைவிடத்திலிருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்க உள்ளார்.
மேலும் தனது கட்சியின் கொள்கைகள் மற்றும் கொடி குறித்த அறிவிப்பையும் கமல் வெளியிடுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் நான் இந்து விரோதி அல்ல என தெரிவித்துள்ளார்.
ஆனந்த விகடன் வார இதழில் அவர் எழுதிவரும் என்னுள் மையம் கொண்ட புயல் என்னும் தொடரில், நான் சிலருக்கு வேண்டப்பட்டவன், சிலருக்கு வேண்டப்படாதவன் என்கிற தோற்றத்தை உண்டாக்க, சிலர் முயற்சி செய்கிறார்கள் என குற்றம்சாட்டியுள்ளார்.
என்னை இந்து விரோதி என்கிறார்கள் சிலர். வீட்டிலேயே பக்தர் சந்திரஹாசனை வைத்துக்கொண்டு நான் எப்படி இந்து விரோதியாக இருந்திருக்க முடியும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
.என்னிடம் வேலை செய்த டிஎன்எஸ் என்கிற பெரியவர் பூஜை புனஸ்காரங்கள் என்று அலுவலகத்தையே ஆலயமாக்கி பக்தியில் திளைப்பவர், மிகப்பெரிய திறமையாளர். அவரை எப்படி நான் விரோதியாகப் பார்க்க முடியும்.
அவ்வளவு ஏன், சுயமாக சிந்திக்கும் வயது வரும்வரை என் பேச்சைக் கேள். அதன்பிறகு உன்னை நான் கட்டாயப்படுத்த மாட்டேன் என்றேன், மகள் ஸ்ருதியிடம். ஆனால் இன்று அவள் தீவிர பக்தை. அதற்காக அவளை நான் வெறுக்க முடியுமா? என அவர் வினா எழுப்பியுள்ளார்.
அது அவரவர் ஏற்றுக்கொண்ட வழிமுறை. நான் இந்து விரோதி அல்ல. இதேபோல்தான் முஸ்லிம், கிறிஸ்தவ மதங்களையும் பார்க்கிறேன். நான் யாரின் விரோதியும் அல்ல. என் நற்பணி மன்றத்தாரிடமும் இதையேதான் பின்பற்றுகிறேன் என கமலஹாசன் தெரிவித்துள்ளார்.
காந்தி, அம்பேத்கர், பெரியார் உள்ளிட்ட தலைவர்களை சமமாக பாவித்து என் ஆசானாக ஏற்று வழிநடக்கிறேன் என்றும் நடிகர் கமலஹாசன் தெரிவித்துள்ளார்.