
எதிர்கட்சிகள் வேண்டுமென்றே போராட்டம் நடத்தி வருகிறது என்றும், மாணவர்கள் போராட்டத்தை எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் தூண்டிவிடும் வகையில் பேசி வருவதாகவும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
நேற்று சந்திரகிரகணம் காரணமாக அனைத்து கோயில்களும் மதியம் முதல் இரவு 9 வரை அடைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலுக்கு சென்ற துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சாமி தரிசனம் செய்தார். சாமி தரிசனத்துக்குப் பிறகு, அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, கர்நாடக அரசு 7 முதல் 10 டி.எம்.சி தண்ணீர் வழங்க வேண்டும். ஆனால் இது வரை தண்ணீர் திறக்கப்படவில்லை. எனவே டெல்டா பயிர்களை காப்பாற்ற தண்ணீர் திறந்து விட வலியுறுத்தி கர்நாடக முதலமைச்சரிடம் நேரம் கேட்கப்பட்டுள்ளது.
காவிரியில் தண்ணீர் திறந்து விட கேட்பது நமது உரிமை. இது குறித்து பல அறிவுறுத்தல் கடிதங்கள் தமிழக அரசு சார்பில் அனுப்பியுள்ளோம். இந்த ஆண்டு 81 டி.எம்.சி. தண்ணீர் தர வேண்டிய கர்நாடகா அம்மாநில அணைகளில் தண்ணீர் இல்லாததை காரணம் காட்டி திறந்து விட மறுத்து வருகிறது. எனவே அதனை கேட்பதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கர்நாடகா செல்ல உள்ளார்.
பேருந்து கட்டண உயர்வை பொறுத்தவரை அரசால் முடிந்த அளவுக்கு கட்டணத்தை குறைத்துள்ளோம். ஆனால் எதிர்கட்சிகள் வேண்டுமென்றே போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் மாணவர்கள் போராட்டத்தையும் எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் தூண்டிவிடும் வகையில் பேசி வருகிறார்.
எந்த கட்சியாக இருந்தாலும் அனுமதி பெற்றுத்தான் போராட்டம் நடத்த வேண்டும். அனுமதி பெறாமல் போராட்டம் நடத்தினால் காவல் துறை தனது கடமையைச் செய்யும். தி.மு.க. ஆட்சி காலத்தில் மின் வாரிய ஊழியர்கள் போராட்டம் நடத்தியபோது அனுமதியின்றி போராட்டம் நடத்துபவர்களை இரும்பு கரம் கொண்டு அடக்குவோம் என்று அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி கூறினார். ஆனால் நாங்கள் அப்படி கூற மாட்டோம். இவ்வாறு ஓ.பி.எஸ். கூறினார்.