
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு 8 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதையொட்டி, நேற்று முதல் வரும் 14-ம் தேதி வரை நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு இந்தியா முழுவதும் பாஜக ஏற்பாடு செய்துள்ளது. அந்த வகையில் இமாச்சல பிரதேச மாநிலம் சிம்லாவில் நடந்த பொது நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று பல திட்டங்களை தொடங்கி வைத்தார். அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, ‘நமது நாட்டின் எல்லைகள் 2014 ஆம் ஆண்டுக்கு முன் இருந்ததை விட தற்போது பாதுகாப்பாக உள்ளன.
பல்வேறு திட்டங்களில் பயனாளர்களில் போலியாக இருந்த 9 கோடி பெயர்களை நாங்கள் நீக்கியுள்ளோம். நாடு முழுவதும் இதுவரை கிட்டத்தட்ட 200 கோடி தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 8 ஆண்டுகளில் நான் என்னை ஒரு முறைகூட பிரதமராக நினைத்ததில்லை. கோப்புகளில் கையெழுத்திடும்போது மட்டும் தான் பிரதமர் என்ற பொறுப்பு எனக்கு உள்ளது. ஆனால், கோப்புகள் சென்ற உடன் நான் பிரதமராக கிடையாது.
எனது வாழ்க்கையின் எல்லாமான 130 கோடி மக்களின் முதன்மை சேவகன் நான். எனது வாழ்க்கை உங்களுக்கு தான். 2014க்கு முன்பு காங்கிரஸ் ஆட்சியில் குடும்ப அரசியல் ஊழல் பற்றி மட்டுமே மக்கள் பேசுவார்கள். ஆனால் தற்போது திட்டங்கள், லாபங்கள், முன்னேற்றம் குறித்து மக்கள் பேசி வருகிறார்கள். இந்தியா எந்த நாட்டின் முன்பும் தலை குனிந்து நிற்க தேவையில்லை. உலக நாடுகளிடம் இந்தியா மீதான பார்வை மாறியுள்ளது.
இந்தியாவை யாரும் உதவியற்ற நிலையில் உள்ள நாடாக பார்க்கவில்லை. இந்தியா பிற நாடுகளுடன் நேருக்கு நேர் சமமாக நிற்கிறது. இந்தியா வருங்காலத்தில் இன்னும் உயரிய நிலைக்கு செல்லும். மக்களின் கைகளிலும் அது உள்ளது. நாம் அனைவரும் சேர்ந்து இந்தியாவை உயரிய நிலைக்கு கொண்டு செல்வோம் என்று உறுதி ஏற்போம்’ என்று பேசினார்.
இதையும் படிங்க : ஆர்யன் கானை கைது செய்த அதிகாரி சென்னைக்கு அதிரடி மாற்றம்.! என்ன காரணம் தெரியுமா ?
இதையும் படிங்க : UGC: இந்த பல்கலை., பட்ட படிப்புகள் இனி செல்லாது..’யுஜிசி’ சொன்ன அதிர்ச்சி தகவல் ! மாணவர்கள் கதி ?